பெண்கள், லோ கிளைசெமிக் (Glycemic) உணவு முறையை கடைப்பிடித்தால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படாது. சினைப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்பட்டாலோ, உடல் எடை அதிகமாக இருந்தாலோ மாதவிடாய் சுழற்சி முறையாக நடைபெறாது. இவற்றைக் குறைக்க நம் உணவில் நேரடியாக சர்க்கரை அளவு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. அதற்கு பதில் சாமை அரிசி, வரகரிசி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த காலத்தில் இனிப்பு நிறைந்த மிட்டாய்களை பிரபலமாக்குகிறார்கள். காதலர் தினத்திற்காக 100 ரூபாய் பாக்கெட்டில் விளம்பரப்படுத்துகிறார்கள். அதற்கு பதிலாக, காதலர் தினத்தன்று காதலருக்கு கடலை மிட்டாய் வாங்கி கொடுக்கலாம். ‘கடலை’யில்தான் காதலும் வளர்கிறது.
சர்க்கரை நோய்க்கு சிறந்த பழம் நாவல் பழம். நாவல் கொட்டையை பொடி செய்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. நமக்கான உணவு, எந்த விதத்திலும் இயற்கைக்கு எதிரானதாக இருக்கக்கூடாது. தமிழ் மரபு ஒரு சூழலியல் வாழ்வை வைத்திருக்கின்றது. நம் சுவைக்காக இயற்கையை கெடுப்பேன் என்பது தவறான சிந்தனை. தமிழ் மரபு காட்டிய சூழலுக்கு ஏற்ற உணவு முறையை கடைப்பிடிப்போம்” என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்தார்.