சென்னை மெரினா கடற்கரையொட்டிய வங்கக்கடலில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பொதுப்பணித்துறை சார்பில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்ததைத் தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று பொதுமக்கள் கருத்து கேட்டு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு இயக்கத்தை, அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

இதில் கலந்துக்கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,”கலைஞருக்கு நினைவுச் சின்னம் வைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அதை கடலுக்குள் தான் வைப்போம் என பிடிவாதம் பிடிப்பது ஏன்? இந்த நினைவு சின்னத்தால் 13 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும், கடலில் மேலும் அதிகம் மாசுகள் உருவாகும். இந்த திட்டம் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடாக இருக்கிறது.
எனவே இந்த திட்டத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்கிறது. கடலில் தான் பேனா சின்னம் வைப்போம் என அடம்பிடித்தால் இதை எதிர்த்து கடுமையான போராட்டத்தை முன்னெடுப்போம். அதையும் மீறி வைத்தால், அந்த சின்னத்தை உடைப்போம். அரசுப் பள்ளிகளை சீரமைக்க நிதி இல்லை. ஆனால் பேனா நினைவு சின்னம் வைக்க மட்டும் நிதி இருக்கிறாதா?” எனப் பேசினார். மேலும், தன்னுடைய எதிப்பு கடிதத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “பேனா நினைவு சின்னம் வைப்பதற்கு ஆதரவு அளிப்பவர்கள் மட்டுமே அரங்கில் பேச முடிகிறது. எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பேசினால் கூச்சலிடுகிறார்கள். இது தி.மு.க அரசின் அநாகரீகமான நடைமுறை. யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனில் இதை கட்சிக் கூட்டமாக அறிவித்திருக்க வேண்டியதுதானே. எதற்கு கருத்துக் கேட்பு கூட்டமாக அழைத்தீர்கள்?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.