பட மூலாதாரம், TN DIPR
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
தமிழ்நாட்டின் நிதிநிலைமை பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தலைமைச் செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு தற்போது பேசிவருகிறார்.
வெள்ளை அறிக்கை வெளியிட்டபின் இந்த அறிக்கை தொடர்பான 21 பக்கங்கள் கொண்ட விளக்க படத்தை காட்டி அதற்கான விளக்கத்தை அமைச்சர் மரிய வில்சன் வழங்கினார்.
பின்னர் நிதியமைச்சர் பேசுகையில், “2021 – 2022 முதல் 2025-2026 வரையிலான காலத்தை கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட ஒத்த தொழில்துறை அமைப்பையும் பொருளாதார அளவும் கொண்ட மாநிலங்களுடன் நியாயமான ஒப்பீடு செய்யும் காலப்பகுதியை எடுத்துக்கொண்டோம்” என்று நித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், “இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு அந்த மாநிலங்களின் மீட்சி காலத்தை பயன்படுத்தி தங்களின் மீதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தி குறைத்தது தான். ஆனால் தமிழ்நாடு அதற்கு நேர் முரணாக செயல்பட்டது.
ஒவ்வொரு அடிப்படை சுட்டிக்காட்டிலும் கட்டமைப்பு ரீதியான பின்னடைவை சந்தித்தது” என்றார்.
திருக்குறள் 478-ஐ சுட்டிக்காட்டி பேசிய அவர், “வருவாய் குறைவாக இருப்பதால் தீமை இல்லை, ஆனால் செலவுகள் அளவுக்கு மீறாமல் இருந்தால் போதும்” என்று அவர் குறிப்பிட்டார்.
வருவாய் பற்றாக்குறை எவ்வளவு?
அமைச்சர் மரிய வில்சன் கூறுகையில், “தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை 78 ஆயிரத்து 324 கோடியாக உயர்ந்துள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தொகை.
சொந்த வரி வசூல் முயற்சி 5.45 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதுவரை இல்லாத குறைந்தபட்சம்.
மூலதன செலவு 1.44 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது ஒப்பீட்டளவில் குறைவு
கட்டாய செலவுகள் 64.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளன. இவை ஒப்பீட்டளவில் மாநிலத்துக்கு மிகவும் அதிகம்.
கடன் 28.3 சதவிகிதம் அளவில் நிலைத்து உள்ளது. எந்தவித நிதி ஒருங்கிணைப்பும் இல்லாமல் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு-செலவுத் திட்ட மேலாண்மை (FRBM) சட்டத்தின்படி மூன்று சதவிகிதம் பற்றாக்குறை வரம்பு ஒவ்வொரு ஆண்டும் மீறப்பட்டுள்ளது” என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
எப்போதெல்லாம் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது?
முன்னதாக, 2021-ஆம் ஆண்டில் முந்தைய திமுக அரசு பொறுப்பேற்ற பிறகும் தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தது.
2024-ஆம் ஆண்டு இந்தியாவின் நிதிநிலைமை பற்றி மத்திய அரசு வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
2014 முதல் 2024 வரையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக் காலத்தை அதற்கு முந்தைய பத்து ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்துடன் ஒப்பிட்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்திருந்தது.
வெள்ளை அறிக்கை என்றால் என்ன?
வெள்ளை அறிக்கை என்பது பெரும்பாலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் வெளியிடப்பட்டாலும் தனியார் துறைகளிலும் வெள்ளை அறிக்கையின் பயன்பாடு வழக்கத்தில் இருந்துள்ளது.
ஆங்கிலத்தில் வைட் பேப்பர் (white paper) என்பதன் தமிழாக்கமே வெள்ளை அறிக்கை என்று அறியப்படுகிறது. வைட் பேப்பர் என்கிற வார்த்தையை 1446-ஆம் ஆண்டு தொடங்கி பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆகஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி கூறுகிறது.
ஸ்டான்ஃபர்ட் சட்டப் பள்ளி கொடுத்துள்ள விளக்கத்தின்படி, அரசாங்க ஆவணங்கள் அவை விநியோகம் செய்யப்பட வேண்டிய இடங்களைக் குறிப்பிட வெவ்வேறு நிறங்களால் குறிக்கப்பட்டன. அவ்வாறு வெள்ளை நிற ஆவணம் என்பது பொது அணுகலுக்கானதாகப் பயன்படுத்தப்பட்டது.
வெள்ளை அறிக்கை என்பது அரசியல், வணிகம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
வைட் பேப்பர் போன்றே க்ரீன் பேப்பர் மற்றும் பிங்க் பேப்பர் என்கிற இரு வேறு ஆவணங்கள் இருப்பதாகவும் ஸ்டான்ஃபர்ட் ஆவணம் தெரிவிக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு