பட மூலாதாரம், Reuters
(இது சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
வெனிசுவேலா மீது அமெரிக்கா ‘பெரிய அளவிலான தாக்குதலை’ நடத்தியதாகவும், ‘அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்’ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது டிரம்ப் நிர்வாகம் பல வாரங்களாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை வெனிசுவேலா அரசாங்கம் சேகரித்து வருவதாகவும், பொதுமக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும் வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ கூறியுள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில், வெனிசுவேலா தலைநகர் கராகஸின் பல பகுதிகளில் வெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அவற்றில் ராணுவத் தளங்களும் அடங்கும். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அந்த நாட்டில் அவசரநிலையை அறிவித்திருந்தார்.
நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள லா கார்லோட்டா ராணுவ விமான நிலையம் மற்றும் ஃபுவர்டே டியூனா பிரதான ராணுவத் தளம் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றன. இந்த இரண்டு இடங்களிலும் நடந்ததாகக் கூறப்படும் வெடிப்புகளின் காணொளிகளும் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ், சனிக்கிழமை அதிகாலையில் வெனிசுலா தலைநகர் கராகஸில் நடந்த வெடிப்புகள் மற்றும் விமானங்கள் பறந்தது குறித்த தகவல்கள் பற்றி டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் அறிந்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
பட மூலாதாரம், Reuters
டிரம்ப் கூறியது என்ன?
வெனிசுவேலா மீது அமெரிக்கா ‘பெரிய அளவிலான தாக்குதலை’ நடத்தியதாகவும், ‘அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்’ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “வெனிசுவேலாவிற்கும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோவிற்கும் எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியது. தனது மனைவியுடன் இருந்த நிக்கோலஸ் மதுரோ சிறை பிடிக்கப்பட்டு, நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.” என்று கூறியுள்ளார்.
மேலும், “இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. இது குறித்த விவரங்கள் தொடர்ந்து வரவுள்ளன. இன்று காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு) மார்-எ-லாகோவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்” என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில், வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ இந்தத் தாக்குதல்களைக் கண்டித்திருப்பதுடன் தேசிய அவசரநிலையையும் அறிவித்துள்ளார். தனது நாட்டின் எண்ணெய் மற்றும் கனிம வளங்களைக் கைப்பற்றுவதற்கான அமெரிக்காவின் முயற்சி இது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, வெனிசுவேலா தலைநகர் கராகஸின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. அவற்றில் இராணுவத் தளங்களும் அடங்கும்.
மறுபுறம், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை வெனிசுவேலா கண்டித்துள்ளது.
“அமெரிக்காவின் தற்போதைய அரசாங்கத்தால் வெனிசுவேலா மீது நடத்தப்பட்ட மிகவும் கடுமையான இராணுவ ஆக்கிரமிப்பை வெனிசுவேலா சர்வதேச சமூகத்தின் முன் நிராகரிக்கிறது, கண்டிக்கிறது மற்றும் கண்டனம் செய்கிறது,” என்று வெனிசுலா அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, கராகஸில் நடந்த தாக்குதல்கள் “வெனிசுவேலாவின் மூலோபாய வளங்கள், குறிப்பாக அதன் எண்ணெய் மற்றும் கனிமங்களைக் கைப்பற்றுவதையும்” மற்றும் “நாட்டின் அரசியல் சுதந்திரத்தை உடைப்பதையும்” நோக்கமாகக் கொண்டவை என்று வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ அவசரநிலையை செயல்படுத்த உத்தரவிட்டிருந்தார்.
அனைத்து தேசிய பாதுகாப்புத் திட்டங்களும் “சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான சூழ்நிலைகளில்” செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார்.
“நாட்டின் அனைத்து சமூக மற்றும் அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து இந்த ஏகாதிபத்தியத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை வெனிசுவேலா அரசாங்கம் சேகரித்து வருவதாகவும், பொதுமக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும் வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ கூறியுள்ளார்.
வெளிநாட்டு துருப்புக்களின் இருப்பை வெனிசுவேலா “எதிர்க்கும்” என்றும் அவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு