அந்த வீடியோவை டி.ஜி.பி-யின் கவனத்துக்குக் கொண்டு சென்ற சிலர், பெண்களுக்கு சென்னையில் பாதுகாப்பில்லையா என்ற கேள்வியையும் முன்வைத்ததோடு, சம்பந்தப்பட்ட நபர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அந்த நபர் குறித்து விசாரிக்க பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அளித்த தகவலின்படி சில்மிஷ நபரை போலீஸார் தேடிவந்தனர். போலீஸாரின் தேடுதல் வேட்டையில் பாலியல் தொல்லை கொடுத்த அந்த இளைஞன் சிக்கினான்.
பின்னர் அந்த இளைஞனை போலீஸார் பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு அவனை போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இது குறித்து பள்ளிக்கரணை போலீஸார் பேசுகையில், “கைதுசெய்யப்பட்ட இளைஞனின் பெயர் அகிலன். இவனின் சொந்த ஊர் திருச்சி. டான்ஸ் மாஸ்டரான அகிலன், சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து ஆதம்பாக்கத்தில் தங்கியிருக்கிறான். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்த அகிலன், ஓய்வு நேரங்களில் பைக்கில் நீண்ட தூரம் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறான். சம்பவத்தன்று இளம்பெண் ஒருவர் வாக்கிங் சென்றதைப் பார்த்த அகிலன், அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறான். இளம்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அகிலனைக் கைதுசெய்து விசாரித்துவருகிறோம்” என்றனர்.