அமெரிக்காவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான பைசர், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரித்து உலகளவில் விற்பனை செய்து வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் பாக்ஸ்லோவிட் (Paxlovid) எனப்படும் கொரோனா தடுப்பு மாத்திரையை தயாரித்து நீண்ட ஆய்வுக்குப் பின்னர் வெளியிட்டது. இந்த மாத்திரை தற்போது உலகம் முழுவதும் அதிகளவு பயன்பாட்டில் உள்ளது.
பெருந்தொற்றுக் காலத்தில், “ தினமும் இருமுறை, மூன்று மாத்திரைகள் வீதம் ஐந்து நாள்களுக்கு இந்தக் கொரோனா தடுப்பு மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பாக்ஸ்லோவிட் மாத்திரை சாப்பிட்டவர்களில் யாரும் மரணிக்கவில்லை. பாக்ஸ்லோவிட் மாத்திரை எடுத்துக் கொண்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையோ, இறப்பு ஏற்படும் நிலையோ 89% குறையும்” என பைசர் நிறுவனம் கூறியிருந்தது. இதனால் உலக அளவில் விற்பனையில் சாதனையும் படைத்தது.
ஆனால் தற்போது, பைசர் நிறுவனத்தின் பாக்ஸ்லோவிட் கொரோனா தடுப்பு மாத்திரையை உட்கொண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது என்று மருத்துவ ஆய்வு உறுதி செய்து அறிவித்துள்ளது. இந்த மருத்துவ அறிக்கை உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.