இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், குஜராத்தில் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்து, இலங்கை மருத்துவமனைகளில் 30 -க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குத் தொற்று பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணையைத் தொடங்கி உள்ளது.
ஏப்ரல் மாதம் நோயாளிகளுக்குக் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு ப்ரெட்னிசோலோன் (Prednisolone Eye drops) கண் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சொட்டு மருந்தினை, இண்டியானா ஆப்தல்மிக்ஸ் (Indiana Ophthalmics) நிறுவனம் தயாரித்து வருகிறது. இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட பின்னர், 2017-ம் ஆண்டு முதல், இம்மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போதைய சம்பவத்திற்குப் பிறகு, இலங்கையின் சுகாதார அமைச்சகத்தால் இந்த கண் சொட்டு மருந்துகள் உடனடியாக திரும்பப் பெறப்பட்டன.