நகம் கடிக்கும் பழக்கம்… விடுபட எளிய வழிகள்! | Nail biting habit… easy ways to get rid of it!

Share

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  பலருக்கும்  நகம் கடிக்கும் பழக்கம்  உள்ளது.   சிலர்,  பதற்றம், கோபம், கவலை, யோசனை போன்ற சூழல்களில் நகம் கடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.  இந்தப் பழக்கத்தை ‘ஆனிசோபேஜியா’ ‘Onychophagia’ எனக் குறிப்பிடுகிறது மருத்துவம். இந்த நகம் கடிக்கும் பழக்கம் என்ன மாதிரியான தீங்குகளை விளைவிக்கும்.  பார்க்கலாம்:

நகங்களை கடிக்கும்போது, அதிலுள்ள அழுக்குகள் வாய் வழியாக உடலுக்குள் சென்று நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும். முக்கியமாக குடல்புழுப் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உண்டு. நகத்தை கடிக்கும்போது அதன் சதைப் பகுதியையும் கடித்துவிட்டால்  விரல்களில் வீக்கம் ஏற்பட்டு, சீழ்ப்பிடிக்கும் அபாயமும் உண்டு.நகத்தைத் தொடர்ந்து கடிப்பதனால், நகங்கள், சரியான வளர்ச்சியின்றி  காணப்படும். இதற்கு காரணம், அதைச் சுற்றியுள்ள நகம் வளருவதற்கு உதவும் திசுக்கள் அழிந்துவிடுவதுதான்.

நகம் கடிக்கும் பழக்கம் ஈறுகளுக்கு, பற்களுக்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும். மேலும் பற்களில் கறைகளை உருவாக்கி இறுதியில் பற்களை சிதைத்துவிடும். நகங்களை கடிக்கும்போது அதிலிருக்கும் துகள்கள் ஈறுகளுக்குள் சென்றடைந்து பல் வலி, வீக்கம், நோய்தொற்று போன்ற வற்றை ஏற்படுத்திவிடும். கடித்த நகத்தை விழுங்கிவிட்டால் வயிறுதொடர்பான பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.

குழந்தைக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறதென்றால், பல் வளர்வதில் சிக்கல் ஏற்படும். ‘தொடர்ந்து நகம் கடிப்பது, Obsessive-compulsive disorder (OCD) எனப்படும் எண்ண சுழற்சி நோயின் அறிகுறியாக இருக்கும்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சில எளிய வழிகள்…

நகம் கடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு நெயில் பாலிஷ் உபயோகிக்கலாம். அதில் டெனாடோனியம் பென்சோயேட் எனும் ரசாயனம் கலந்திருக்கிறது. அது கசப்பு தன்மை கொண்டது. அது நகம் கடிக்கும் எண்ணத்தை கட்டுப்படுத்த வழிவகுக்கும். பிடித்தமான பொருளை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். நகம் கடிக்க தோன்றும்போதெல்லாம் அந்த பொருளை கையில் வைத்து ரசிக்கலாம்.

நகங்களை அவ்வப்போது வெட்டி, கடிக்க முடியாத அளவுக்கு சிறியதாக, அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்.வேப்பெண்ணெய் போன்ற கசப்பான சுவையுள்ள ஏதாவதொன்றை நகத்தில் தடவி விடலாம்.  இதனால், நகம் கடிக்கும்போதெல்லாம் கசப்புணர்ச்சி உண்டாகி, நகத்தின் மீதான  கவனம் குறைந்துவிடும்.

தொகுப்பு : சுவாதி

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com