தாய்ப்பாலால் தாய்க்கு விளையும் நலன்கள்
தாய்-சேய் பிணைப்பு
ஆக்ஸிடோசின் (Oxytocin), புரோலாக்டின் (Prolactin) ஹார்மோன்கள், தாய்ப்பாலூட்டலின்போது சுரக்கின்றன. குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுத்தால், ஆக்ஸிடோசின் ஹார்மோன் மேலும் சுரந்து, கர்ப்பப்பை சுருங்கி, பிரசவத்துக்குப் பிந்தைய ரத்தப்போக்கைத் தடுக்கிறது. தாய், சேய் பிணைப்பு அதிகரிக்கிறது.
எடைக்குறைப்பு
கருத்தரிப்பு காலத்தில் தாய்க்கு 10 – 16 கிலோ வரை எடை கூடும். குழந்தை பிறந்த பிறகு, குறைந்தபட்சம் 6 மாத காலத்துக்கு முழுமையாகத் தாய்ப்பாலூட்டுவதால், உடலில் படிந்துள்ள கொழுப்பு சக்தி பயன்படுத்தப்பட்டு, தாய்மார்கள் கருத்தரிப்புக்கு முந்தைய உடல் எடைக்குத் திரும்ப உதவுகிறது.
கருத்தடை
தாய்ப்பாலூட்டும் காலத்தில், தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன்களின் மாறுதலால், மாதவிடாய் இன்மை (Lactational Amenorrhea) ஏற்படும். முழுமையாகத் தாய்பாலூட்டும் தாய்களில், குழந்தை பிறந்து 6 மாதத்துக்கு 98% கருக்கட்டல் ஏற்பட வாய்ப்பில்லாத நிலை காணப்படும். குழந்தை மற்றும் தாயின் நலன் கருதி, குழந்தை பிறந்ததிலிருந்து அடுத்த குழந்தைக்கு 2 – 3 வருட இடைவெளி தர வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு
தாய்ப்பாலூட்டும் தாய்மார்களில் மார்பகப் புற்றுநோய், சூலகப் புற்றுநோய் (Ovarian Cancer) ஏற்படும் அபாயம் குறைவாகவே காணப்படுகிறது. மேலும், தாய்ப்பாலூட்டும் தாய்மார்களில் நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறைவாகவே காணப்படுகிறது.
இவ்வாறு தாய்க்கும் சேய்க்கும் பல்வேறு நன்மைகளை விளைவிக்கும் தாய்ப்பால் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம். ஆறு மாத மகப்பேறு விடுப்பு முடிந்து வேலைக்குத் திரும்பும் தாய்மார்கள் வேலை நேரத்தில் தாய்ப்பாலளிக்க ஏற்ற சூழலும் தாய்ப்பாலூட்டும் அறைகளும் உருவாக்கப்பட வேண்டும். மேலும் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தாய்ப்பாலூட்டும் அறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
அடுத்த வாரம், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவு மற்றும் மருத்துவ முறைகள் பற்றி விரிவாகக் காண்போம்.
பராமரிப்போம்…