டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதம் விளாசினார் சுப்மன் கில்: வெற்றியை நோக்கி இந்தியா! | Shubman Gill century against Bangladesh match india towards victory

Share

சட்டோகிராமில் நடைபெறும் இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் முதல் சதத்தை எடுத்தார். இந்திய அணி 452 ரன்கள் என்ற வலுவான முன்னிலையைப் பெற்று வெற்றிக்கு அடிக்கல் நாட்டியுள்ளது.

சட்டோகிராம் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று குல்தீப் யாதவ் தன் 5-வது விக்கெட்டைக் கைப்பற்ற வங்கதேச அணி தன் முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்குச் சுருண்டது. அதன்பிறகு ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் மீண்டும் 23 ரன்களில் புல் ஷாட்டில் கையில் கேட்ச்சைக் கொடுத்து விட்டு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

ஆனால், முதல் இன்னிங்சில் 20 ரன்களில் ஆட்டமிழந்த சுப்மன் கில், இந்த இன்னிங்சில் கவனமாக ஆடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் முதல் சதத்தை எடுத்தார். அவர் 152 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 110 ரன்கள் எடுத்து, மெஹதி ஹசன் பந்தை இன்னொரு சிக்சருக்கு முயன்றபோது டாப் எட்ஜ் ஆகி கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இன்று கவனமாகத் தொடங்கிய சுப்மன் கில் பிறகு கொஞ்சம் தைரியமாக ஆட ஆரம்பித்தார். 84 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்ட சுப்மன் கில் அதன் பிறகு கொஞ்சம் ஆக்ரோஷத்தைக் கூட்டி 147 பந்துகளில் சதம் கண்டார். இதில் 10 பவுண்டரி 2 சிக்சர்கள் அடங்கும். சதத்துக்கு முன்னால் லிட்டன் தாஸை ஒரு பெரிய சிக்சரை விளாசினார். 95 ரன்களிலிருந்து ரிவர்ஸ் ஸ்வீப்பில் 99 ரன்களுக்கு வந்தார்.

சதத்தை நெருங்குகிறோம் என்று பதற்றப்படமால் அதே ஓவரில் மெஹதியை ஏறி வந்து லாங் ஆனில் பவுண்டரி அடித்து தன் முதல் சதத்தை ஸ்டைலாக எடுத்து முடித்தார். 104 ரன்களிலிருந்து மெஹதியை மீண்டும் ஒரு பெரிய சிக்சரை அடித்து 110 ரன்கள் எடுத்ததுடன் அதே ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

கடினமான பிட்சில் அருமையான இன்னிங்ஸை ஆடி சதம் எடுத்துள்ளார் சுப்மன் கில். ரோஹித் சர்மா அடுத்த டெஸ்ட்டுக்கு வந்தால் இவரை அணியிலிருந்து நீக்க முடியுமா? ராகுல் திராவிட்டுக்கு பெரிய தலைவலி காத்திருக்கிறது.

இப்போது புஜாரா 8 பவுண்டரிகளுடன் 69 ரன்களுடனும் கோலி 5 ரன்களுடனும் ஆடி வருகின்றனர், இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. மொத்த முன்னிலை 465 ரன்கள்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com