இதுவரை அவை நிகழ்வு முழுவதுக்கும் இருக்கும் முதல்வர் விஜய், இன்றெல்லாம் மதிய சாப்பாட்டு வேளையில் கிளம்பிவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் அவையை விட்டு அவர் அறைக்கு வந்துவிட்டார். எப்போதும் எல்லா பத்திரிகையாளர்களுக்கும் பேட்டி கொடுத்துவிட்டு செல்லும் சௌமியா அன்புமணி இன்று களைப்பில் யாருக்கும் தனியாக பேட்டி கொடுக்காமலேயே சென்றார்.
உள்ளே அவை நடந்துகொண்டிருக்க வெளியே கோணிப்பையை அணிந்து கொண்டு பயிர்க்கடன் தள்ளுபடி வேண்டி விவசாயிகள் போராடி கைதாகிக் கொண்டிருந்தனர்.

தவெக எம்.எல்.ஏ தஞ்சை சரவணனுக்கும் இன்று பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ‘நீங்கள் நடித்ததோ கெத்து. நீங்கள்தான் தமிழ்நாட்டின் சொத்து’ பாணியில் விஜய் நடித்த படங்களை காவலன், நண்பன் என வரிசையாக கட்டி புகழ் மாலை என மூக்கில் நெடி ஏறும் அளவுக்கு முதல்வரை புகழ்ந்து தள்ளினார். ‘ஓஹோ…அமைச்சர் பதவி எதிர்பார்க்குறாப்ல போல…’ என்கிற அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் மைண்ட் வாய்ஸ் நமக்கே கேட்டது. இதன்பிறகு நடந்ததுதான் ஹைலைட். அரைமணி நேரமாக முதல்வரை புகழ்ந்து பாட்டாக படித்துவிட்டு என்னுடைய தொகுதி மக்களின் கோரிக்கையை சீட்டில் எழுதி தருகிறேன் என சபாநாயகரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்துவிட்டார். அது மக்கள் மன்றமா…துதிபாடும் அரங்கமா என்கிற சந்தேகம் எழுந்தது.
‘துதி பாடுறதுல எங்களை மிஞ்ச முடியுமா’ என்கிற தொனியில் எழுந்த அதிமுகவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ‘மின்னலை விழுங்கி மின்சாரத்தை கொப்பளிக்கும் எடப்பாடியார்’ என ஷாக் கொடுக்க தொண்டையில் மின்னல் கீற்று சிக்கியதை போல வினோதமாக விழித்தார் எடப்பாடி பழனிசாமி. ‘சட்டமன்ற சன்னிதானம்….வானவில்லுக்கு வளைகாப்பு’ என அக்ரி கிருஷ்ணமூர்த்தி அடித்த பன்ச்செல்லாம் பட்டாசாக இருந்தது.
இன்றைக்கு அவையை பார்க்க பார்வையாளராக நடிகர் ஜெய்யும் வந்திருந்தார். அவரும் தன் பங்குக்கு ‘அண்ணன் தளபதி வாழ்க’ என சட்டையை சுழற்றியிருந்தால் அவை மனநிம்மதியோடு நிறைவு பெற்றிருக்கும். கட்சித் தலைமையை நோக்கிய துதிபாடல்களை தடை செய்யும் வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி விஷயத்தை மட்டுமே பேச வைத்தாலே அவையை மிக சீக்கிரமாக நடத்தி முடித்து பிரயோஜனமான வேலைகளை பார்க்க முடியும்.