இலவச டிக்கெட் விவகாரத்தால் ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்திற்கு மாற்றம்! | IPL Final venue change Bengaluru Ahmedabad

Share

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் (RCB) சொந்த மைதானத்தில் நடைபெறுவதற்குப் பதிலாக அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில அரசிடமிருந்து அதிக அளவிலான இலவச டிக்கெட்டுகள் கோரப்பட்டதாலும், பெங்களூரு மைதானத்தின் குறைந்த கொள்ளளவு காரணமாகவும் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஐபிஎல் தலைவர் அருண் தூமல் வியாழக்கிழமை விளக்கமளித்துள்ளார்.

இந்த அதிரடி மாற்றத்தால், மே 31 அன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டி, 1.30 லட்சம் ரசிகர்கள் அமரக்கூடிய அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் விதிகளின்படி, முந்தைய தொடரில் கோப்பையை வென்ற அணியின் சொந்த ஊரில்தான் இறுதிப்போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணியின் சொந்த மைதானமான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில்தான் இந்தாண்டு இறுதிப்போட்டி நடந்திருக்க வேண்டும். ஆனால், கர்நாடக மாநில அரசு அதன் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ), மேலவை உறுப்பினர்கள் (எம்.எல்.சி) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி) ஆகியோருக்கு தலா மூன்று இலவச டிக்கெட்டுகளை வழங்குமாறு கோரியுள்ளது. சுமார் 40,000 பேர் மட்டுமே அமரக்கூடிய பெங்களூரு மைதானத்தில் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது “சாத்தியமற்றது” என்று பிசிசிஐ கருதுகிறது.

பெங்களூரு சின்னசாமி மைதானம்

பெங்களூரு சின்னசாமி மைதானம்

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அருண் தூமல், “கோட்பாட்டளவில் இறுதிப்போட்டி பெங்களூருவில்தான் நடந்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு ஏற்பட்ட சில சவால்களையும் நாங்கள் கருத்தில் கொண்டோம். மாநில அரசுக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவச டிக்கெட்டுகளை வழங்க வேண்டியுள்ளது. அதே சமயம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கும் (KSCA) அதன் உறுப்பினர்களுக்கு சில கடமைகள் உள்ளன,” என்றார்.

மேலும், “மைதானத்தின் கொள்ளளவு குறைவாக இருப்பதால், லீக் போட்டிகளுக்கே குறைவான டிக்கெட்டுகள்தான் விற்பனைக்கு வந்தன. இறுதிப்போட்டிக்கு உலகெங்கிலுமிருந்து ரசிகர்கள் வருவார்கள் என்பதால், அவர்களுக்கு அதிக டிக்கெட்டுகளை ஒதுக்க வேண்டியுள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com