சென்னை: டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பங்கேற்றனர். எடப்பாடி அணியினர் கூட்டத்தை புறக்கணித்தனர். புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்கான ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மாதிரியை, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையம் நேற்று இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு காட்சிப்படுத்த திட்டமிட்டது. இந்த கூட்டத்தில், 8 தேசிய கட்சிகள் மற்றும் 57 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பியது.தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தம்பிதுரை, சந்திரசேகர் பங்கேற்பதாக டெல்லி வட்டார தகவல்கள் கூறின. ஆனால், இறுதி வரை இந்த கூட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டனர். அதேநேரம், முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு விரைவு தபால் அனுப்பி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு இந்த அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என கூறி தபாலை பெற்றுக் கொள்ள அதிமுக நிர்வாகிகள் மறுத்து விட்டனர். பின்னர், தேர்தல் அலுவலக ஊழியர் ஒருவர் மூலம் நேரடியாக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கடிதத்தையும் அதிமுகவினர் பெற்றுக்கொள்ளாமல் திரும்ப அனுப்பினர்.இந்த சம்பவத்தை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தினார். மேலும், கடிதத்தை பெற்றுக்கொள்ளாததால் அதிமுகவில் இருந்து யாரும் 16ம் தேதி (நேற்று) டெல்லியில் தேர்தல் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், அதிமுகவில் திடீர் திருப்பமாக ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து மட்டுமே இரண்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அணியினரிடம் கேட்டபோது, ‘‘அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பதவியை குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் கடிதம் அளித்திருந்தால் கூட்டத்தில் பங்கேற்றிருப்போம்’’ என்றனர்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ் அணியினர் பங்கேற்பு: எடப்பாடி அணியினர் புறக்கணிப்பு
Share
