ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்த 15 பேர் யார்? தவெகவினர் எத்தனை பேர்?

Share

விசிக சார்பில் போட்டியிட்ட வன்னி அரசு  வெற்றி பெற்றதையொட்டி கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் வாழ்த்து பெற்றார்

பட மூலாதாரம், Vanniarasu/X

படக்குறிப்பு, விசிக சார்பில் போட்டியிட்ட வன்னி அரசு வெற்றி பெற்றதையொட்டி கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் வாழ்த்து பெற்றார்

“ஒரு ஓட்டுனால என்ன மாறப்போகுது” என்ற விஜய் படத்தின் வரிகள் இன்று அவரது கட்சி வேட்பாளருக்கே அந்த ஒரு ஓட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.

முதல் தேர்தலிலேயே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், திமுக அதிமுகவை பின்னுக்கு தள்ளி 108 இடங்களை பெற்றிருந்தாலும் ஆட்சியமைக்க தேவையான 118 என்ற இலக்கை அவரால் அடைய முடியவில்லை. இதற்கு அக்கட்சியின் வேட்பாளர்கள் பலர் ஆயிரம் வாக்குகளுக்கும் கீழ் தோற்றதும் முக்கிய காரணமாக மாறியுள்ளது.

தவெக மட்டுமல்லாமல் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் இந்த ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வெற்றியையும் தோல்வியையும் வழங்கியுள்ளது.

குறைந்த வாக்கும்… அதிக வாக்கும்…

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், EdappadiPalanisamy/X

படக்குறிப்பு, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் வென்றுள்ளன.

எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 98110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக உள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் 1 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி பெற்ற வெற்றி, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக உள்ளது.

ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளில் வெற்றி மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்கள் யார்?

தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி

எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி?

  • கம்பம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ஜெகநாத் மிஸ்ரா தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணனை 751 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
  • கள்ளக்குறிச்சி தொகுதியில் தவெக வேட்பாளர் அருள் விக்னேஷ் அதிமுக வேட்பாளர் ராஜிவ்காந்தியை 798 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
  • கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் திமுக வேட்பாளர் மகேஷை காட்டிலும் 214 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
  • கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளர் கருணாநிதி தவெக வேட்பாளர் பாலசுப்பிரமணியனை காட்டிலும் 843 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
  • குளித்தலை தொகுதியில் திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன், தவெக வேட்பாளர் பாலசுப்பிரமணியைக் காட்டிலும் 579 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
  • கும்பக்கோணம் தொகுதியில் போட்டியிட்ட தவெகவின் வினோத் திமுக வேட்பாளர் அன்பழகனை விட 679 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
  • பழனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவி மனோகரன் தவெக வேட்பாளர் பிரவீன்குமாரை காட்டிலும் 693 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
  • பரமத்தி வேலூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சேகர் திமுக வேட்பாளர் மூர்த்தியை விட 308 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
  • போளூர் தொகுதியில் தவெக வேட்பாளர் அபிஷேக் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரை விட 227 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது யார்? தோற்றது யார்?

பட மூலாதாரம், TVKHQ/X

  • திண்டிவனம் சட்டப்பேரவை தொகுதியில் விசிக வேட்பாளர் வன்னியரசு அதிமுக வேட்பாளர் அர்ஜுனனை காட்டிலும் 734 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
  • திருக்கோயிலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பழனிசாமி தவெக வேட்பாளர் விஜய் பரணி பாலாஜியை விட 285 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
  • விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சிவக்குமார் தவெக வேட்பாளர் விஜய் வடிவேலுவை விட 910 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
  • திருப்பத்தூர் தொகுதியில் இரவு வரை நீடித்த வாக்கு எண்ணிக்கையில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி திமுக வேட்பாளரான அமைச்சர் பெரிய கருப்பனை 1 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதுவே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.
  • உதகமண்டலம் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக வேட்பாளர் போஜராஜன் தவெக வேட்பாளர் இம்ராஹிமை விட 976 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
  • வேப்பணஹள்ளி தொகுதியில் திமுக வேட்பாளர் ஸ்ரீனிவாசன் அதிமுக வேட்பாளரும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமியை விட 138 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

தவெகவுக்கான பாதிப்பு என்ன?

தவெகவால் தனித்து ஆட்சியமைக்கும் வகையிலான எண்ணிக்கை கிடைக்காத நிலையில் ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்று தோற்றதில் அக்கட்சியை சேர்ந்த 6 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். திமுகவில் 5 வேட்பாளர்களும், அதிமுகவில் 3 வேட்பாளர்களும் , தேமுதிகவில் ஒருவரும் வெற்றி வாய்ப்பை ஆயிரம் வாக்குகளுக்குள் பறிகொடுத்துள்ளனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com