Doctor Vikatan: என்னுடைய உறவினர் ஒருவர் சில நாள்களாக மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டுள்ளார். கொஞ்சதூரம் நடந்தாலோ அல்லது வேலை செய்தாலோகூட மூச்சு வாங்கியிருக்கிறது. அவர் டாக்டரிடம் காண்பித்தபோது ஈஸ்னோபிலியா இருக்கலாம் என்று கூறி மருந்து கொடுத்துள்ளார் மருத்துவர். ஆனாலும் 10 நாள்கள் ஆகியும் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மறுபடியும் அவர் டாக்டரிடம் சென்று எந்த முன்னேற்றமும் இல்லை….இப்போது இன்னும் மோசமாகி 2 அடிகள் நடந்தாலே மூச்சுத்திணறல் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.
அவர்கள் இசிஜி, எக்கோ, எம்ஆர்ஐ எடுத்துப் பார்த்துவிட்டு சிறிய அடைப்பு உள்ளதாகச் சொல்லியிருக்கிறார்கள். ‘உங்களுடைய இதயத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் கடுகு அளவில் ஓர் அடைப்பு உள்ளது. அதை மருந்து கொடுத்து சரிசெய்துவிடலாம்’ என்று கூறியுள்ளார். இந்த பாதிப்பு, சிறுவயதில் ஏதாவது அடிபட்டதன் பாதிப்பாகவும் இருக்கலாம் என்றும் சொல்கிறார். இதை எப்படிப் புரிந்துகொள்வது? இது பயப்படக்கூடிய பிரச்னையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி.
உங்களுடைய தகவல்களை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் குறிப்பிட்டுள்ள நபருக்கு வயது 40 ப்ளஸ் இருக்கலாம் என நினைக்கிறேன். மருத்துவர் குறிப்பிட்டுள்ள அந்த அடைப்பு, நுரையீரலில் உள்ளதா அல்லது இதயத்திலா என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை.
ஒருவேளை இதயத்தில் என அனுமானம் செய்துகொண்டால், அது இந்த வயதில் பலருக்கும் வரக்கூடிய விஷயம்தான். இதயநோய் மருத்துவரை அணுகினால் அவர் அந்தப் பிரச்னைக்கான மருந்துகளைப் பரிந்துரைப்பார்.