Doctor Vikatan: இதுவரை தடுப்பூசி பற்றியே நினைக்காத பலரும், கொரோனா காலத்தில் அது குறித்து யோசிக்க ஆரம்பித்தார்கள். ஒன்றுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டார்கள். இந்நிலையில் அடுத்து ஃப்ளு தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். கொரோனா தடுப்பூசிக்கும் ஃப்ளு தடுப்பூசிக்கும் இடையில் எத்தனை மாத இடைவெளி இருக்க வேண்டும்? யாருக்கெல்லாம் இந்தத் தடுப்பூசி அவசியம்? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்
பிறந்து 6 மாதங்களைக் கடந்த குழந்தை முதல், யார் வேண்டுமானாலும் இன்ஃப்ளுயென்ஸா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள், நீரிழிவு, இதயநோய்கள், ஆட்டோஇம்யூன் நோய்கள் உள்ளவர்கள் அவசியம் ஃப்ளு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
6 மாதங்களுக்குக் குறைவான குழந்தைகள், ஃப்ளு தடுப்பூசியில் சேர்க்கப்படும் கெமிக்கல்களில் ஏதேனும் ஒன்றுக்கு ஒவ்வாமை இருப்பவர்கள், ஆபத்தான அலர்ஜி பாதிப்பு உள்ளவர்கள், முன்பு ஃப்ளு தடுப்பூசி போட்டுக்கொண்டு அதன் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் ஃப்ளு தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்க்கலாம்.