Doctor Vikatan: குளித்து முடித்ததும் வியர்வை… இருக்கை நனையும் தர்மசங்கடம்… தீர்வு உண்டா?

Share

Doctor Vikatan: குளித்து முடித்து உடலை நன்றாகத் துடைத்துவிட்டு வந்தாலும் தொடை இடுக்குகளில் அளவுக்கு அதிகமாக வியர்வை கசிகிறது. சில நேரத்தில் நாற்காலியை விட்டு எழுந்தால் அந்த இடம் ஈரமாகிவிடுகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

இப்படி அளவுக்கு அதிகமாக வியர்வை சுரக்கும் பிரச்னையை `ஹைப்பர் ஹைட்ரோசிஸ்’ (Hyperhidrosis) என்று பெயர். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டோருக்கு, உள்ளங்கைகள், பாதங்கள் போன்ற இடங்களில் அதிகம் வியர்ப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாகவே, இப்படி வியர்வை சுரப்பு அதிகம் இருப்பவர்கள், தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் அளவுகளை சரிபார்ப்பது அவசியம். ஹார்மோன் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டாலே, இந்தப் பிரச்னை தானாக குணமாகும். இதைத் தாண்டி தினசரி கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். சிலருக்கு வருடத்தின் எல்லா நாள்களிலும் வெந்நீரில் குளித்தால்தான் நிம்மதியாக உணர்வார்கள். அதிக சூடான நீரில் குளிப்பது கூடாது. வெதுவெதுப்பான நீரிலோ, சாதாரண தண்ணீரிலோ குளிப்பதுதான் எப்போதும் சிறந்தது.

குளியல்

பென்ஸாயில் பெராக்ஸைடு (Benzoyl peroxide) போன்ற ஆன்டிசெப்டிக் சோப் உபயோகித்துக் குளிப்பது நல்லது. இந்த மாதிரியான சோப்புகள், பாக்டீரியா கிருமிகள் உடலில் தங்காமல் பார்த்துக்கொள்ளும். வியர்வையுடன் பாக்டீரியா கிருமிகள் சேரும்போதுதான் துர்நாற்றம் வருகிறது. ஆன்டிசெப்டிக் சோப் பயன்படுத்துவது இதற்குத் தீர்வாக அமையும்.

அலுமினியம் ஹைட்ராக்ஸைடு (Aluminum hydroxide) கலந்த ஆன்டிபெர்ஸ்பிரன்ட் (Antiperspirant ) உபயோகிக்கலாம். இது வியர்வை சுரப்பிகளைக் கட்டுப்படுத்தி, அதிக வியர்வை சுரப்பதைத் தடுக்கும். இதை, தற்காலிகமாகப் பயன்படுத்தலாம்.  உட்காரும்போதும் இருக்கை நனைகிற அளவுக்கு வியர்க்கிறது என்றால் அதற்கான காரணத்தை மருத்துவரிடம் கலந்தாலோசித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் வேறு ஏதேனும் பிரச்னைகளுக்கு மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா, தைராய்டு சுரப்பு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கிறதா, வேறு  ஹார்மோன் பிரச்னைகள் உள்ளனவா என்றெல்லாம் பார்க்க வேண்டும். 

வியர்வை

உடை விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். வியர்வையை உறிஞ்சுகிற மாதிரியான காட்டன் உள்ளாடைகள், உடைகள் அணிவது சிறந்தது. சிந்தெடிக் உள்ளாடைகள் மற்றும் உடைகளால் வியர்வையை உறிஞ்ச முடியாது. எனவே, அந்த இடத்தில் வியர்வை தேங்கி, துர்நாற்றம் வீசுவதோடு, சூட்டுக்கட்டி உள்ளிட்ட பலவித சரும பிரச்னைகள் வரவும் வாய்ப்புகள் அதிகம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com