Doctor Vikatan: என் வயது 43. கண்களைச் சுற்றி கருவளையம் காணப்படுகிறது. நன்றாகத் தூங்குகிறேன். அதிக நேரம் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில்லை. ஆனாலும் கருவளையம் ஏன் ஏற்படுகிறது? க்ரீம் உபயோகிப்பது இதற்குப் பலன் அளிக்குமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் ஷர்மதா
கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மெல்லியது. கண்களைச் சுற்றிய எலும்பு அமைப்பு, கருவிழியின் அளவோடு பொருந்திப்போகிற மாதிரி சரியாக இருக்க வேண்டும். கருவிழி சிறியதாகவும், எலும்பு அமைப்பு பெரியதாகவும் இருந்தால், கண்கள் சுருங்கினாற் போலத் தோற்றமளிக்கும்.
வயதாவது, எடைக்குறைப்பு போன்ற பல காரணங்களால் கண்களைச் சுற்றியுள்ள கொழுப்பானது குறையத் தொடங்கும். அதன் விளைவாகவும் கண்களுக்கடியில் கருவளையங்கள் ஏற்படலாம்.
வெறும் க்ரீமால் இந்தப் பிரச்னையை சரிசெய்துவிட முடியாது. கண்களைச் சுற்றிய கருமைக்கு காரணம் என்னவென்று தெரிந்துதான் சிகிச்சை கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் சிலருக்கு போடாக்ஸ், ஃபில்லர்ஸ் போன்ற சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.