இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக 2022 அக்டோபர் முதல் செயல்பட்டு வந்த ரோஜர் பின்னி, கடந்த ஜூலைவில் 70 வயதை நிறைவு செய்ததையடுத்து, பிசிசிஐ விதிப்படி அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.
அதனால், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, தற்போதைய துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இவ்வாறிருக்க, செப்டம்பர் 28-ம் தேதி பிசிசிஐ-யின் 94-வது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதால், அக்கூட்டத்தில் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சச்சின் டெண்டுல்கர் அடுத்த தலைவராகப் போகிறார் என்ற பேச்சு வெளியானது. ஆனால், சச்சின் தரப்பு அதனை நிராகரித்துள்ளது.
இந்த நிலையில், தலைவர் பதவி குறித்து ஐ.பி.எல் (IPL) தலைவர் அருண் துமால் புதிய அப்டேட் வழங்கியுள்ளார்.

என்.டி.டி.வி (NDTV) ஊடகத்துடனான நேர்காணலில் பேசிய அருண் துமால்,
“வேட்புமனு தாக்கல் தொடங்கும். பின்னர் யார் பதவியேற்பார்கள் என்பது நீங்கள் அறிவீர்கள். ஆனால் இதில் தேர்தல் நடைபெறும் என்று நான் நினைக்கவில்லை.
ஒருமனதாகத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். எனவே உறுப்பினர்கள் கூடி ஒரு முடிவெடுக்கட்டும். இப்போதைக்கு அனைவரும் தங்கள் பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும். அந்தப் பட்டியல் வெளியானதும் யார் எந்தப் பதவியை எடுப்பார்கள் என்பது தெரியவரும்.” என்று தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ-க்கு புதிய தலைவராக யார் வரலாம் என்பது குறித்த உங்கள் எதிர்பார்ப்பை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.