செல்வந்தர்களிடம் பேசி நட்பாக்கிக் கொள்ளும் சோப்ராஜ், அவர்களை கொலை செய்து சொத்துகளை அபகரிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தான். மும்பையில் இவனின் கொலை, கொள்ளைகளுக்கு பார்ட்னராக பார்பரா, மேரி ஹெலன் ஆகிய இரு ஐரோப்பியப் பெண்கள் இருந்தனர். அவர்களுடன் சேர்ந்து டெல்லி சென்ற சோப்ராஜ், அங்கு சுற்றுலா வந்த பிரெஞ்சு மாணவர்களுக்கு பேதி மாத்திரை கொடுத்து கொள்ளையடிக்க முயன்று போலீஸில் சிக்கினான்.
ஐரோப்பிய பெண்கள் அப்ரூவராக மாற… திகார் சிறையில் அடைக்கப்பட்டான். திகார் சிறையில் செல்வாக்குடன் இருந்தவன், 1984-ம் ஆண்டு தன்னுடைய பிறந்த நாள் பார்ட்டி என்று அனைவருக்கும் பழங்கள், பிஸ்கெட் கொடுத்தான். மயக்க மருந்து கலந்திருந்த அதை சாப்பிட்ட சிறைக்காவலர்கள் மயங்க, அங்கிருந்து நான்கு பேருடன் தப்பினான். ஆனால், சுதாரித்த டெல்லி போலீஸார் குறுகிய காலத்திலேயே மீண்டும் பிடித்து சிறையில் அடைத்தது.
ஒருவழியாக 1997-ம் ஆண்டு தண்டனை முடிந்து வெளியே வந்தான். பிரான்ஸ் சென்றவன், தன்னை ஒரு சாகச கொலை, கொள்ளைக்காரனாக பெருமையாக சித்திரித்து, வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிட ஒப்பந்தம் போட்டு, அதிலும் காசு பார்த்தான். இவன் மீது இருந்தகொலை வழக்குகளுக்காக நேபாள போலீஸ் 2003-ல் இவனை கைது செய்தது. 35 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில், நேபாள கீழ் நீதிமன்றம் இவனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து இவனுடைய பெண் வக்கீல் சகுந்தலா தபா மனுத்தாக்கல் செய்த நிலையில், 2010-ல் உச்ச நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து தண்டனையை ஊர்ஜிதம் செய்தது. கோவாவில் வைத்து சோப்ராஜை கைது செய்த மும்பை போலீஸ் அதிகாரி மதுகர், ‘சோப்ராஜ் எப்போதும் பணத்தின் மீதே குறியாக இருப்பவன். மிகக் கொடூரமான குற்றவாளி. குற்றம் என்பது அவன் ரத்தத்தில் ஊறிய விஷயம். அதை ஒருபோதும் அவனால் விட முடியாது. நான் விசாரித்த வகையில், அவன் குறைந்தது 32 கொலை செய்திருப்பான்.