அ.தி.மு.க-வில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரட்டை தலைமை விவகாரம் பூதகரமாக வெடித்தது. அதைத் தொடர்ந்து, ஏற்பட்ட பிரச்னைகளால், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரண்டு பிரிவாகச் செயல்படத் தொடங்கினர். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அந்தப் பொதுக்குழுவிலேயே ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டதுடன், ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கட்சியின் உரிமை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கும் தற்போது நடந்த வருகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொதுக்குழு தீர்மானங்கள், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சம்ர்பிக்கப்பட்ட நிலையில், அந்தத் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியிருந்தது.