ஒரே வாரத்தில் 108 ஆம்புலன்ஸில் 3 சுகப்பிரசவங்கள்; ஊழியர்களுக்குக் குவியும் பாராட்டுகள்!

Share

ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுகா, மல்லன்குழி ஊராட்சிக்குட்பட்ட  அருள்வாடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரின் மனைவி காவியா (23) நிறைமாத கர்ப்பிணியால இருந்தார். நேற்று முன்தினம் இரவு 10:50 மணியளவில் பிரசவ வலியால் துடித்தார். உறவினர்கள் உடனடியாக 
108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, தாளவாடியில் இருந்து 108 ஆம்புலன்ஸ், அந்த கிராமத்துக்குச் சென்றது. அதற்குள் காவியாவுக்கு பிரசவ வலி அதிகரித்ததால் அவரை ஆம்புலன்ஸில் ஏற்ற முடியவில்லை.

இதை அறிந்த 108 மருத்துவ நுட்புநர் ரங்கசாமி, ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். அவருக்கு உதவியாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அந்தோணிராஜும் செயல்பட்டார். 15 நிமிடங்கள் இருவரும் போராடி பிரசவம் பார்த்த நிலையில் இரவு 11:22 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர், பத்திரமாக தாயையும், சேயையும் ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்று தாளவாடி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் ரங்கசாமிக்கும், வாகன ஓட்டுநர் அந்தோணிராஜுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.  

அருள்வாடியில் பிரசவம் பார்த்த நுட்புநரும், ஓட்டுநரும்.

இதேபோல கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா, புன்செய் புளியம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் மனைவி கலாமணி (20), இரவு 7 மணியளவில் பிரசவ வலியால் துடித்தார். அவரது உறவினர்கள் உடனடியாக புளியம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் அவரைச் சேர்த்தனர். கலாமணியை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ் சத்தியமங்கலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே சென்றபோது, கலாமணிக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தயாநிதி வாகனத்தை ஓரமாக நிறுத்தி மருத்துவ நுட்புநர் அஜீத்குமார் உதவியுடன் பிரசவம் பார்த்தார். கலாமணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தையையும், தாயையும் பத்திரமாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கலாமணிக்கு பிரசவம் பார்த்த நுட்புநர்.

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கார்த்தியின் மனைவி வள்ளி (20). நிறைமாத கர்ப்பிணியான வள்ளிக்கு, கடந்த 10-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து கோபி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் பிரசவத்துக்காக அழைத்து வரப்பட்டார். கருக்கன்பாளையம் அருகே வரும்போது வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் நுட்புநர் ரமேஷ், ஓட்டுநர் சக்திவேல் ஆகியோர் பிரசவம் பார்த்தனர். சில நிமிடங்களிலேயே வள்ளிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸின் ஈரோடு மாவட்ட மேலாளர் வசந்த் கூறுகையில், “கடந்த ஒரு வாரத்தில் ஈரோடு மாவட்டத்தில்  108 ஆம்புலன்ஸில் பிரசவத்துக்காக கொண்டு வரப்பட்ட 3 பெண்களுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. இந்த 3 பேருக்கும் சுகப்பிரசவம் ஆனதுடன், அவர்களுக்கு ஆம்புலன்ஸ் நுட்புநரும், ஓட்டுநருமே சுகப்பிரசவம் பார்த்துள்ளனர். இவர்களுக்கு நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.  

பாராட்டுகள்!

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com