கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அதிக மஞ்சள் அட்டை (yellow card) வழங்கப்பட்டதால் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணியினர் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆட்டத்தில் விதிமுறைகளை மீறியதற்காகவும், தவறான நடத்தைகளில் ஈடுபட்டதற்காகவும் அர்ஜென்டினா அணி மீது விசாரணை மேற்கொள்வதற்காக குழு ஒன்றை அமைத்துள்ளது, FIFA. இக்குழு விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்த பின்னர், ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
போர்ச்சுக்கல் அணி, உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியேறியது. மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத ரெனால்டோ, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “போர்ச்சுகலுக்கு உலகக் கோப்பையை வெல்வதே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமும் கனவும் ஆகும். அதிர்ஷ்டவசமாக, பல சர்வதேசப் பட்டங்களை வென்றேன், ஆனால் நமது நாட்டின் பெயரை உலகின் மிக உயர்ந்த இடத்தில் வைப்பதே எனது மிகப்பெரிய கனவாக இருந்தது.” என வருத்தத்துடன் நன்றி கூறி பதிவிட்டிருந்தார். விராட் கோலியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நீங்கள் தான் எனக்கு எப்பொழுதும் GOAT, (Greatest of all time)’ என ரொனால்டோ குறித்து நெகழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.