அர்ஜென்டினா vs போலாந்து : கத்தாரில் கால்பந்து ராஜா மெஸ்ஸியுடன் மோதும் லெவன்டோவ்ஸ்கி

Share

போலாந்து

பட மூலாதாரம், Getty Images

லியோனல் மெஸ்ஸியை அவரது ஆதரவாளர்கள் கால்பந்து ராஜா என்கிறார்கள். ஒரு சிலர் மாரடோனாவின் பெயரைக் கொண்டு கால்பந்துக் கடவுள் என்றுகூட அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் மாரடோனாவின் பெயரைப் பெற அவருக்கு இன்னும் ஒன்றே ஒன்று பாக்கி இருக்கிறது. அதுதான் ஃபிபா உலகக் கோப்பை. 

அதைப் பெறுவதற்கு பெரும் தடையாக இருக்கப் போகிறவர் போலாந்து அணியின் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி. இருவருக்கும் ஒரு வயதுதான் வேறுபாடு. மெஸ்ஸிக்கு 35 வயது. போலாந்து முன்கள வீரருக்கு 34 வயதாகிறது. 

லெவன்டோவ்ஸ்கியின் தாக்குதல் ஆட்டமும் பந்தைக் கடத்திச் செல்லும் திறனும் மெஸ்ஸியின் அணிக்கு கடும் சவாலாக இருக்கப் போகின்றன என்ற கணிக்கப்படுகிறது.

5-ஆவது முறையாக கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் மெஸ்ஸி, சாதாரண வீரராகவும் அணியின் தலைவராகவும் கோப்பையை வெல்வதற்கு இதுவரை முயன்றிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணீருடன் களத்தைவிட்டு வெளியேறுவதுதான் வாடிக்கையாக இருந்திருக்கிறது. இது அவருக்கு கடைசி வாய்ப்பு.

போலாந்து அணியின் தலைவரான லெவன்டோவ்ஸ்கிக்கு இது இரண்டாவது உலகக் கோப்பை போட்டி. அவர் மிக வயதான வீரராக அடுத்த உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடக் கூடும். கிளப் போட்டிகளிலும் சர்வதேசப் போட்டிகளிலும் பிரபலமான வீரர் இவர். 

கண்ணீரை வரவழைத்த முதல் போட்டிகள்

அர்ஜென்டினாவும் போலாந்தும் உலகக் கோப்பை சி பிரிவில் இருக்கின்றன. அர்ஜென்டினா அணி சௌதி அரேபியாவுடனும், போலாந்து அணி மெக்சிகோவுடனும் மோதின.

சௌதி அரேபியாவுடனான போட்டியில் பெனால்ட்டி முறையில் தனது முதல் கோலை மெஸ்ஸி அடித்தார். ஆனால் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து சௌதி அரேபிய அணி மெஸ்ஸியின் அணிக்கு அதிர்ச்சியளித்தது. அர்ஜென்டினாவுக்கு இது பெரும் சோகமாக அமைந்தது.

போலந்து அணி மெக்சிகோவுடன் ஆடிய போட்டியிலும் இதுபோன்ற சோகமான நிகழ்வு லெவன்டோவ்ஸ்கிக்கு நடந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை லெவன்டோவ்ஸியால் கோலாக்க முடியவில்லை. 

போலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த அவரால் உலகக் கோப்பையில் ஒரு கோல்கூட அடிக்க முடியாத இருந்த சூழலில் ஒரு பெனால்ட்டி வாய்ப்பை வீணாக்கியது அவருக்கு கண்ணீரை வரவழைத்துவிட்டது. அந்தப் போட்டியில் போலாந்து அணியால் கோல் எதுவும் அடிக்க முடியாமல் 0-0 என்ற கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது. 

பட மூலாதாரம், Getty Images

இரு வீரர்களுக்குமே அடுத்த போட்டியில் நிம்மதி கிடைத்தது என்றே கூற வேண்டும். போலந்து அணி சௌதி அரேபியாவுடனான போட்டியில் வெற்றி பெற்றதுடன் லெவன்டோவ்ஸ்கி தனது முதலாவது உலகக் கோப்பை கோலை அடித்தார்.

அதே போல் சௌதி அரேபியாவுடன் தோற்றிருந்த அர்ஜென்டினா அணி மெக்சிகோவுடன் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மெக்சிகோவுடனான போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மெஸ்ஸி, ‘அடுத்த போட்டியை வேறுவகையில் அணுகுவோம்’ என்று கூறினார். அந்த உத்தி என்ன என்பதை இன்றைய போட்டியில் பார்க்கலாம்.

பட மூலாதாரம், Getty Images

மெஸ்ஸி vs லெவன்டோவ்ஸ்கி

தற்போதைய கால்பந்து உலகில் மெஸ்ஸி முதல் நிலை வீரராக பலராலும் அறியப்படுகிறார். அதே நேரத்தில் போலந்து அணிக்காக அதிக கோல்களை அடித்த லெவன்டோவ்ஸ்கி, முன்களத்தில் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடும் வீரர்களில் முன்னிலை வீரர்களுள் ஒருவர். மத்திய-முன்கள வீரர்களில் அவரே உலகில் சிறந்தவர் என்று கூறுவோரும் உண்டு. 

இவ்விருவரும்தான் போலந்துக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையேயான ஆட்டத்தில் அதிகமாகக் கவனிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

“ஆனால் இது மெஸ்ஸிக்கும் லென்டோவ்ஸிக்கும் இடையேயான போட்டியாக இருக்காது. இது போலாந்துக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையேயான போட்டியாகத்தான் இருக்கும்” என்கிறார் போலாந்து அணியின் பயிற்சியாளர் மிக்னியேவிச்.

இரு வீரர்கள் தனித்தனியாக மோதிக் கொள்ள இது ஒன்றும் டென்னிஸ் போட்டி அல்ல. ராபர்ட்டுக்கு அவரது அணி சகாக்கள் தேவை. மெஸ்ஸிக்கும் அதுவே. இது நட்பான ஆட்டமாக இருக்கப் போவதில்லை. மோதலாக இருக்கும்” என்று அவர் கூறியிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

அர்ஜென்டினா அடுத்த சுற்றுக்கு முன்னேற என்ன செய்ய வேண்டும்?

சி பிரிவைப் பொறுத்தவரை 4 அணிகளில் எந்த அணியும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற முடியும். நான்கு அணிகளுக்குமே வாய்ப்பு இருக்கிறது என்பதால் அனைத்து அணிகளுமே வெற்றிக்காக முயற்சி செய்யும்.

போலாந்து – அர்ஜென்டினா  போட்டியில் அதிக நெருக்கடியில் இருக்கும் அணி அர்ஜென்டினாதான். ஏனென்றால் போலாந்து அணி ஏற்கெனவே 4 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. போட்டி சமனில் முடிந்தாலே அந்த அணி அடுத்த சுற்றுக்குச் சென்றுவிடும். தோல்வியடைந்தால் சௌதி அரேபியா – மெக்சிகோ இடையேயான போட்டியின் முடிவைப் பொறுத்து அடுத்த சுற்றுக்குச் செல்ல முடியும்.

பட மூலாதாரம், Getty Images

1986-ஆம் ஆண்டுக்குப் பிறகு போலாந்து அணி நாக்-அவுட் சுற்றுக்குச் செல்லவில்லை என்பதால், இந்தப் போட்டியில் வெல்வதற்கு அந்த அணி தீவிரமாக முயற்சி செய்யும்.

அதே நேரத்தில் அர்ஜென்டினா இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு இல்லை. வெற்றி பெற்றுவிட்டால் பிரிவின் முதல் இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்குப் போக முடியும். போட்டி சமனில் முடிந்தால் சௌதி அரேபியாவின் முடிவைப் பொறுத்து வாய்ப்புக் கிடைக்கும்.

பிரிவின் கடைசிப் போட்டிகள் என்பதால் இவ்விரு போட்டிகளும் ஒரே நேரத்தில்தான் நடத்தப்படுகின்றன. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com