நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். பீட்டா குளுக்கன் என்பதும் கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும். இது ஓட்ஸ், பார்லி மற்றும் சோயாவில் அதிகமிருக்கும்.
பார்லி வேகவைத்த நீராகக் குடிக்கலாம். பார்லியை மாவாக அரைத்து அதை சப்பாத்தி மாவுடன் சேர்த்துச் செய்யலாம். அடுத்து ஓட்ஸ்… இதில் நிறைய வகைகள் கிடைக்கின்றன. அவற்றில் ஸ்டீல்கட் ஓட்ஸும், ரோல்டு ஓட்ஸும் மிகச் சிறந்தவை. கஞ்சியாக, உப்புமாவாக, இட்லி, தோசை மாவில் சேர்த்து எப்படி வேண்டுமானாலும் இதைச் சாப்பிடலாம்.
ரெடிமேடு ஓட்ஸ் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சோயாவிலுள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜென் எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளாது. வாரத்துக்கு 2 – 3 முறை சாப்பிடலாம். ஒரு கப் சப்பாத்தி மாவுடன் கால் கப் சோயா மாவும் சேர்த்துச் செய்து சாப்பிடலாம். சோயா புரதச்சத்து நிறைந்ததும்கூட.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள மீன், வால்நட்ஸ், சியா சீட்ஸ், ஆளிவிதை போன்றவையும் நல்ல கொழுப்பு அதிகரிக்க உதவும். இவற்றில் சீட்ஸ் வகைகளைப் பொடித்து சப்பாத்தி மாவுடன் சேர்த்துச் செய்தோ, சீட்ஸை முழுதாக ஸ்மூத்தி போன்றவற்றில் சேர்த்தோ எடுத்துக்கொள்ளலாம். மீன் சாப்பிட முடியாதவர்கள் காட்லிவர் ஆயில் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையோடு எடுத்துக்கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.