`உலகின் மூத்த குழந்தைகள்’: 30 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கருமுட்டையில் இருந்து பிறந்த இரட்டையர்கள்! | World’s ‘oldest’ babies born from embryos frozen 30 years ago

Share

அமெரிக்காவில், 30 ஆண்டுகளுக்கு முன்பு, 1992-ல் உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகளில் இருந்து இரட்டைக் குழந்தைகளை, ஒரு தம்பதி பெற்றெடுத்துள்ளனர். லிடியா மற்றும் தீமோத்தி ரிட்ஜ்வே என்ற இந்த இரட்டையர்கள், கடந்த அக்டோபர் 31-ம் தேதி ரேச்சல் ரிட்ஜ்வே மற்றும் அவரின் கணவர் பிலிஃப் ரிட்ஜ்வே தம்பதிக்குப் பிறந்தனர்.

இதுகுறித்து, தேசிய கருமுட்டைதான மையத்தினர் கூறுகையில், “லிடியா மற்றும் தீமோத்தி ரிட்ஜ்வே என்று பெயரிடப்பட்ட இந்தக் குழந்தைகள்தான் உலகத்தின் நீண்டநாள்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்ட கருமுட்டைகளிலிருந்து பிறந்தவர்கள். இவர்களில் பெண் குழந்தை லிடியா 5 பவுண்டுகள், 11 அவுன்ஸ், (2.5 கிலோ), ஆண் குழந்தை திமோதி 6 பவுண்டுகள், 7 அவுன்ஸ் (2.92 கிலோ) உடல் எடையுடன் பிறந்தனர்.

30 ஆண்டுகளுக்கு முன்பு செயற்கைமுறை கருத்தரித்தல் (IVF) சிகிச்சைக்காகச் சென்ற ஒரு தம்பதியிடம் இருந்து எடுக்கப்பட்ட கருமுட்டைகள் இவை. அவர்களுக்கு அப்போது குழந்தை பிறந்ததை அடுத்து, பூஜ்ஜியத்திற்குக் கீழே 200 டிகிரியில் அந்த கருமுட்டைகளை பாதுகாத்து வந்துள்ளனர். ஏப்ரல் 22,1992-ல் வெஸ்ட் கோஸ்ட் கருவுறுதல் ஆய்வகத்தில் உள்ள குளிர்சாதன கிடங்கில் உறையவைக்கப்பட்ட இந்தக் கருமுட்டைகள், 2007-ம் ஆண்டு வரை அங்கேயே இருந்தன. அதன்பின் அந்த தம்பதி இந்தக் கருமுட்டைகளை, தேசிய கருமுட்டை தான மையத்திற்கு வழங்கினர். இந்நிலையில், அந்தக் கருமுட்டைகளிலிருந்து இரட்டையர்கள் லிடியா மற்றும் தீமோத்தி ரிட்ஜ்வே பிறந்துள்ளனர்” என்றனர்.

ரிட்ஜ்வே தம்பதிக்கு ஏற்கெனவே 8, 6, 3, 2 ஆகிய வயதுகளில் நான்கு குழந்தைகள் உள்ளநிலையில், தானமாக வழங்கப்பட்ட கருமுட்டைகள் மூலம் மீண்டும் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, தானமாகப் பெறப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்த இந்த கருமுட்டைகள் அவர்களுக்குக் கிடைத்துள்ளன.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com