கத்தாரில் நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய ஃபிஃபா (FIFA) கால்பந்து உலகக்கோப்பைத் தொடர் டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரில் பிரேசில், அர்ஜெண்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின், பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுகல் உள்ளிட்ட 32 நாடுகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியைக் காண உலகின் பல பகுதிகளிலிருந்தும், கோடிக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டுக்கு வருகை புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
தொடக்க ஆட்டத்தில் ஈரானை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி, 6 – 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இதனைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற அர்ஜெண்டினா – சவுதி அரேபியா இடையிலான போட்டியில் அர்ஜெண்டினா அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சவுதி அரேபிய அணி அதிர்ச்சியளித்தது.
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில், சவுதி அரேபிய அணி வெற்றி வாகையைச் சூடியது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் சவுதி அரேபிய அரசு ஒரு நாள் தேசிய விடுமுறையையும் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் போட்டியின் நடுவே, மைதானத்தில் நடைபெற்ற சம்பவமும் அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. போட்டியின் போது சவுதி அரேபியாவின் நட்சத்திர வீரரான Yasser Alshahrani-க்கு அவரது அணியின் கோல் கீப்பரான Mohammed Alowais மூலம் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மைதானத்திலேயே வைத்து முதலுதவி அளிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் அவரை ஸ்டெரெச்சரில் எடுத்துச் செல்லும் போது கட்டை விரலை உயர்த்திக் காட்டி, ‘நான் நன்றாக உள்ளேன்’ என்பதைத் தெரிவித்துள்ளார். பின்னர் அவருக்குப் பதிலாக Mohammed Alburayk களத்தில் இறங்கியுள்ளார். போட்டியின் போது இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலும் சவுதி அரேபிய அணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.