சென்னை: அண்ணாமலை கூறுவதை ஏற்க முடியாது என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரனுக்கும், OBC அணியின் மாநில பொது செயலாளர் திருச்சி சூர்யா சிவா-வுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் அடுத்த 6 மாதம் பா.ஜ.,விலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
வெளிநாடு வாழ் மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; என்னை கட்சியில் இருந்து எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் நீக்கியுள்ளார்கள். எனது கருத்தை கேட்காமலேயே என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். என்னிடம் எந்த விசாரணையும் நடைபெறவில்லை.
உண்மையை பேசினேன், அதனால் நீக்கப்பட்டு உள்ளேன். தனிப்பட்ட முறையில் என்னை தாக்கியவர்களுக்கு, நேரடியாக பதிலடி கொடுத்தேன். என் உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுப்பது நியாயமில்லை. என்னால் பாஜகவிற்கு களங்கம் என சொல்வது வேதனை அளிக்கிறது. 8 ஆண்டுகள் நான் பாஜகவில் உழைத்துள்ளேன். 5 பைசா ஆதாயம் இல்லாமல், கடன் வாங்கி மக்களுக்கு உதவியுள்ளேன். கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன்; வெளிநாடுகளில் சிக்கியவர்களை சொந்த செலவில் மீட்டுள்ளேன். சமீபத்தில் கட்சிக்கு வந்தவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தம்.
என்னிடம் விளக்கம் கேட்காமல் பொறுப்பில் இருந்து நீக்கியது வேதனையாக உள்ளது. கட்சி பொறுப்பு இல்லையென்றாலும் நான் பாஜக தொண்டர் தான். பாஜக மேலிடம் அழைத்தால் நிச்சயம் விளக்கம் அளிப்பேன். மேலிடம் அழைக்கும்போது, தமிழக பாஜகவில் நடப்பதை தெளிவாக தெரிவிப்பேன். ஒரு பெண்ணை தவறாக பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஒரு பெண்ணாக, பெண்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது எனது கடமை. பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. நான் பாஜகவிற்கு எதிராக இருப்பதாக யார் கூறினாலும் அவர்களுக்கு நான் எதிரானவள்.
அண்ணாமலை இந்த கருத்தை தெரிவித்தால் அவரையும் எதிர்ப்பேன். கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக அண்ணாமலை கூறுவதை ஒருபோதும் ஏற்கமாட்டேன்; ஆபாச பேச்சை தட்டிக் கேட்டதால் கட்சியில் இருந்து நீக்குவதா? ‘War Room அமைத்து கோவை குரூப் என்னை குறிவைத்து சமூக வலைதளங்களில் தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர். என்னை தாக்கும் செல்வக்குமார் தரப்பினர் பாஜக தொண்டர்களா? சம்பளத்துக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களா? என தெரியவில்லை. சூர்யா சிவாவை கண்டிப்பாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் சூர்யா சிவா மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.