ருச்சி என்ற பெண்ணுக்குத் தன்னுடைய தாயைப் போலவும், தங்கையைப் போலவும் இரட்டை கண்ணிமைகள் இல்லாததால், தன்னை அழகாக அவர் உணரவில்லை. நீண்ட வருடங்களாக தாழ்வுமனப்பான்மையோடு வாழ்ந்து வந்துள்ளார். தன்னுடைய 18-வது வயதை அடைந்ததும், உடனடியாக இரட்டை கண்ணிமை அறுவைசிகிச்சையை (Double Eyelid Surgery) செய்துள்ளார்.
தற்போது இவர் ஒரு தாயாக மாறிய பின், தன்னுடைய ஒன்பது வயது மகள் இதுபோன்ற சங்கடங்களை எதிர்கொள்ளக் கூடாது என அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அவர் மகளும் வலிமிகுந்த அறுவைசிகிச்சையைச் செய்து கொள்ள ஆர்வமாக உள்ளார். அதோடு தன்னுடைய கண் குறுகலாகவும், மற்றவரை உற்றுப் பார்ப்பது போன்ற தோற்றம் உள்ளதால், சிகிச்சை செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.
“பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் வலியைத் தாங்கிக் கொள்ள உங்களால் முடிந்தால், அது உங்களை ஒரு அழகான நபராக மாற்ற முடியும் என்பது என்னுடைய கருத்து’’ என அந்த பெண்ணின் மகள் தெரிவித்துள்ளார். பெற்றோரின் சம்மதத்தின் அடிப்படையில் சிறுவர்களுக்கு இத்தகைய வலிமிகு சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
உலகிலேயே பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை செய்வதில் ஜப்பான் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதிலும் இரட்டை கண்ணிமை அறுவைசிகிச்சை பொதுவாகவே செய்யப்படுகிறது. 2020-ம் ஆண்டில் மட்டும் சுமார் 1,20,000 அறுவைசிகிச்சைகள் கண் அழகுக்காக மட்டும் செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
உங்களை அழகாக காட்டிக் கொள்ள, புற அழகை குறித்த பிம்பங்களை தகர்த்து, அக அழகை வளர்த்துக் கொள்ளுங்கள்!