Doctor Vikatan: என் மருமகளுக்கு 45 நாள்களுக்கு ஒருமுறைதான் பீரியட்ஸ் வருகிறது. அவள் இன்னும் கருத்தரிக்கவில்லை. நான் என் மகன், மருமகளுக்கு அது குறித்து எந்த அழுத்தமும் தருவதில்லை. ஆனாலும் மாதவிடாய் தள்ளிப்போவதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதனால் அவள் கர்ப்பம் தரிப்பது பாதிக்கப்படுமா?
Uma, விகடன் இணையத்திலிருந்து…
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.
மாதவிடாய் சுழற்சியானது 21 நாள் முதல் 37 நாள் வரை இருப்பதை நார்மல் என்றே குறிப்பிடுவோம். 37 நாள்களைக் கடந்து வருவது முறையற்ற சுழற்சியாகவே கருதப்படும்.
நீங்கள் கேட்டிருப்பதைப் போல உங்கள் மருமகளுக்கு மருத்துவப் பரிசோதனை தேவைதான். ஒரு பெண்ணுக்கு முறையற்ற மாதவிலக்கு சுழற்சி இருந்தால் அவருக்கு கருமுட்டை வெளியேறுவதில் ஏதாவது பிரச்னைகள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டியிருக்கும். அந்நிலையில் அவர்களுக்கு அடிப்படையாக ஒரு ஸ்கேன் பரிசோதனை தேவைப்படும்.
கூடவே ஃபாலிக்குலர் மானிட்டரிங்கும் தேவைப்படும். அதாவது கருமுட்டைகள் சரியாக வளர்கின்றனவா, சரியான நேரத்தில் கருமுட்டைகள் வெளியேறுகின்றனவா என்று ட்ராக் செய்ய வேண்டும்.