சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலையில் முடிந்த பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப் பேரவை தலைவர், சட்டமன்றக் கூட்டம் நடைபெறுவது குறித்தும், கலந்து கொள்வது குறித்தும் எங்களுக்கு தகவல் வந்தது. அதிமுக சார்பாக எங்களது ஜனநாயக கடமையாற்றுவதற்காக சட்டப் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம். ஏற்கனவே, சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே சபாநாயகரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.
அலுவல் ஆய்வுக்குழுவில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறோம். எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா கடைபிடித்த விதியை, எந்தவித மாசும் படாமல் காப்பாற்றுகின்ற பொறுப்பில்தான் நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். தொண்டர்கள் தான் இந்த இயக்கத்தின் அடித்தளம், ஆணி வேர், அந்த தொண்டர்களுக்கு எம்ஜிஆர் மிகப் பெரிய அந்தஸ்தை தந்திருக்கிறார். ஒரு சாதாரண தொண்டனும் தலைமை பொறுப்புக்கு வரமுடியும் என்பதை சட்டவிதிகள் மூலம் வகுத்து தந்திருக்கிறார்.
இப்பொழுது இருக்கின்ற சட்ட விதிகள் மாற்றப்படுகின்ற அபாயகரமான ஒரு சூழல், எம்ஜிஆர், ஜெயலலிதா எண்ணத்துக்கு மாறுபட்டு, கழகத்தின் தலைமை பொறுப்புக்கு வருகின்றவர்கள் 10 மாவட்டச் செயலாளர் முன்மொழிய வேண்டுமென்றும், 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்றும், அந்தப் பொறுப்புக்கு போட்டியிடுகின்றவர்கள் 5 ஆண்டு காலம் தலைமை கழகத்தின் நிர்வாகியாக பணியாற்றியிருக்க வேண்டும் என்கின்ற அந்த விதி எம்ஜிஆரின் இதயத்தில், பெரிய வலியை அவரது ஆண்மாவில் உண்டு பண்ணும் என்பதை எதிர்த்து, ஜனநாயகத்தில் சாதாரண தொண்டன் கூட கழகத்தின் தலைமை பொறுப்பினை ஏற்கின்ற, எம்ஜிஆரின் விதியின்படி தான் கழகம், நடைபெற வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக நின்று போராடிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
* இணைந்தால் தான் நல்லது
எடப்பாடி பழனிசாமி பிரிய வேண்டும் என்று நினைக்கிறார், நீங்கள் இணைய வேண்டும் என்கிறீர்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதில், ‘‘முதலில் இருந்தே நான் கட்சியின் நலனுக்காக இணைய வேண்டும் என்றுதான் கூறி வருகிறேன். அப்படி இணைந்தால்தான் கட்சிக்கு நல்லது என்பதே எனது கருத்து’’ என்றார் ஓபிஎஸ்.