சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும், மல்லிகார்ஜூன கார்கே நேற்று சென்னையில் வாக்கு சேகரித்தார். அவருக்கு, தமிழக காங்கிரஸ் தலைமை சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கேவும், நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரும் நேரடியாக களம் காண்கின்றனர். கடந்த வாரம் சென்னை வந்த சசிதரூர் சத்தியமூர்த்திபவனில் வாக்கு சேகரித்தார். அவருக்கு வாக்கு சேகரிப்பதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்திருந்தனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என யாரும் பெரிய அளவில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், மற்றொரு வேட்பாளரான மல்லிகார்ஜூன கார்கே தமிழக காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் வாக்கு சேகரிக்கும் வகையில் நேற்று மாலை சென்னை சத்திமூர்த்திபவனுக்கு வருகை தந்தார். அவருக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விஜய்வசந்த் எம்பி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், முத்தழகன், டில்லிபாபு மற்றும் முன்னாள் எம்எல்ஏ முருகானந்தம், பொன்.கிருஷ்ணமூர்த்தி, சுமதி அன்பரசு, மயிலை தரணி உட்பட ஏராளமான நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, சத்தியமூர்த்திபவனில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் நின்று கொண்டு, முன்னால் அமர்ந்திருந்த தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டினார். அவருடன் கேரள மாநில எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பல்லம் ஆகியோர் வந்திருந்தனர். சசிதரூர், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு இடையே நேரடி போட்டி எழுந்துள்ள நிலையில், சென்னை வந்த சசிதரூக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பளித்தனர். ஆனால் மல்லிகார்ஜூன கார்கே நேற்று ஆதரவு கேட்டு வந்த நிலையில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 8 பேர் நியமனம்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் சத்தியமூர்த்திபவனில் இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் மொத்தம் உள்ள 711 பேர் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்கள். அவர்கள் வாக்களிக்கும் வகையில் சத்தியமூர்த்திபவனில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்களாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சுமதி அன்பரசு, தளபதி பாஸ்கர், நிசார் அகமது, இமயா கக்கன், ரஞ்சித் குமார், விருகை பட்டாபி, மலர்கொடி, லட்சுமி ஆகிய 8 பேரை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது.