ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் இந்த 4 அணிகளுமே அரையிறுதிக்குள் நுழைந்திருந்தன. ஆனால் இப்போது எதிர்பாராத வகையில் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. 2022 ஃபிஃபா உலகக் கோப்பை கத்தாரில் நவம்பர் 20ம் தேதி தொடங்குகிறது. அந்தத் தொடருக்கு முன்பான கடைசி சர்வதேச பிரேக் இந்த இரண்டு வாரங்கள்தான். அதனால் அனைத்து அணிகளும் தங்களின் காம்பினேஷன்களை முயற்சி செய்து பார்த்துக்கொண்டிருக்கின்றன. உலகக் கோப்பைக்குள் நம்பிக்கையாக நுழைய முயற்சி செய்கின்றன.
கடந்த உலகக் கோப்பையில் நான்காம் இடமும், 2020 யூரோ தொடரில் இரண்டாம் இடமும் பிடித்த இங்கிலாந்து அணி சமீப காலமாக பெரும் தடுமாற்றத்தைச் சந்தித்து வருகிறது. இந்த நேஷன்ஸ் லீக் தொடரில் நடந்த முதல் 4 போட்டிகளிலுமே வெற்றி பெறத் தவறியது. இத்தாலி, ஜெர்மனி, ஹங்கேரி அணிகள் கொண்ட பிரிவில் இருக்கும் அந்த அணி, நேஷன்ஸ் லீகின் ஏ லீகில் நீடிக்க வெற்றி அவசியமாகத் தேவைப்பட்டது.
இந்நிலையில் இத்தாலி அணிக்கெதிரான போட்டியில் 1-0 எனத் தோல்வியடைந்தது இங்கிலாந்து. இந்தத் தோல்வி அந்த அணியை லீக் ஏவில் இருந்து ரிலகேட் செய்திருக்கிறது. இத்தாலி அணிக்கான கோலை கியாகோமா ரேஸ்படோரி அடித்தார். இங்கிலாந்து போன்ற மிகப்பெரிய அணிக்கு இந்தத் தோல்வி சாதாரணமானது அல்ல. பெரிய தொடர்களில் தொடர்ந்து சீராகச் செயல்பட்டு வந்த இங்கிலாந்து கடைசியாக 5 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. மூன்றில் தோற்றிருக்கிறது. 5 போட்டிகளிலும் சேர்த்து ஒரேயொரு கோல் மட்டுமே அடித்திருக்கிறது. அந்த ஒரு கோலும் பெனால்டியால் அடிக்கப்பட்டது.