ரஃபேல் நடால் தொடங்கி ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா வரை உலகின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இத்தொடரில் பங்கேற்றிருக்கின்றனர். 1996-ம் ஆண்டு டெல்லியில் ஒரு சர்வதேச டென்னிஸ் தொடர் ‘Mc-dowell open’ என்ற பெயரில் நடைபெற்றது. பின்னர் 1997-ல் இத்தொடர் சென்னைக்கு மாற்றப்பட்டது. 2000-ம் ஆண்டு முதல் இது ATP தொடராக மாறியது. ‘Gold flake open, Tata open, Chennai open, Aircel Chennai open’ என வெவ்வேறு ஸ்பான்சர் பெயர்களில் அழைக்கப்பட்டது. ஏர்செல் நிறுவனம் விலகிய பின்னர், இத்தொடருக்கு புதிய ஸ்பான்சர் கிடைக்காததால் 21 ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்று வந்த தொடர் புனே நகருக்கு மாற்றப்பட்டது. இப்போது மறுபடியும் இத்தொடர் சென்னை மாநகருக்கே திரும்பியிருக்கிறது. அதுவும் பெண்களுக்கான WTA தொடராக!
பில்லே ஜீன் கிங் என்பவரால் 1973-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது WTA. பெண்களுக்கான தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இத்தொடரே முதல் இடத்தில் உள்ளது. 80-கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1650 வீராங்கனைகள் உலகம் முழுவதும் நடைபெறும் 50 தொடர்களில் ஆண்டுதோறும் பங்கேற்று வருகின்றனர்.