இந்த பிரீமியர் லீக் சீசன் இதுவரை கொடுத்த ஆச்சர்யங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த வாரம் மான்செஸ்டர் சிட்டியின் மிரட்டல் கம்பேக், செல்சீயின் ஹாட்ரிக் ரெட் கார்ட், ஆர்செனலின் வெற்றிப் பயணம் என நிறைய விஷயங்கள் இருந்தாலும், பெரும்பாலனவர்களை பேச வைத்தது லிவர்பூல் தான்.
90 நிமிடங்களில் 9 கோல்கள் அடித்து மிரள வைத்திருக்கிறது ஜார்ஜன் கிளாப்பின் அணி. சீசனின் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றியைத் தவறவிட்டிருந்த அந்த அணி. 2021-22 சீசனை மிகச் சிறப்பாக முடித்த லிவர்பூல் அணிக்கு இந்த சீசன் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஃபுல்ஹாம், கிறிஸ்டல் பேலஸ் என இரண்டு சிறிய அணிகளுக்கு எதிரான போட்டிகளையும் டிரா செய்தது அந்த அணி. மூன்றாவது போட்டியில் மான்செஸ்டர் யுனைடடை பந்தாடும் என்று எதிர்பார்த்திருக்க, தடுமாறிக்கொண்டிருந்த அந்த அணியிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஆன்ஃபீல்ட் மைதானத்தில், புதிதாக புரமோட் ஆன போர்ன்மௌத் அணியை சந்தித்தது லிவர்பூல். இடைவெளியே இல்லாமல் முதலில் இருந்தே போர்ன்மௌத் அணியை என்கவுன்ட்டர் செய்தது லிவர்பூல்.

மூன்றாவது நிமிடத்தில் கோலடித்து லூயிஸ் டியாஸ் ஸ்கோர் போர்டுக்கு வேலை கொடுத்தார். அடுத்த மூன்றே நிமிடங்களில் இரண்டாவது கோலை அடித்தார் இளம் மிட்ஃபீல்டர் ஹார்வி எலியாட். அலெக்சாண்டர் அர்னால்ட், ராபர்டோ ஃபிர்மினோ, விர்ஜைல் வேன் டைக் ஆகியோரும் ஆளுக்கு ஒரு கோல் அடிக்க, முதல் பாதியை 5-0 என முடித்தது லிவர்பூல். பிரீமியர் லீக் வரலாற்றில் முதல் பாதியில் அந்த அணி 5 கோல்கள் அடிப்பது இதுவே முதல் முறை. ஃபிர்மினோ, டியாஸ் இருவரும் இரண்டாவது பாதியிலும் ஒரு கோல் அடித்தனர். ஹார்வி எலியாட் போல், மற்றொரு இளம் வீரர் ஃபேபியோ கர்வாலோவும் இந்தப் போட்டியில் லிவர்பூல் அணிக்காக தன் முதல் கோலை அடித்தார். கிறிஸ் மேஃபம், அலெக்சாண்டர் ஆர்னால்டின் கிராஸை தன் கோலுக்குள் அடித்தார். இரண்டாவது பாதியில் மொத்தம் 4 கோல்கள் விழ, 9-0 என மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது லிவர்பூல்.
எடிஹார் மைதானத்தில் ஒரு அற்புதமான கம்பேக்கை நிகழ்த்தி தங்கள் முழுத் திறனையும் காட்டியிருக்கிறது நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி. வழக்கம்போல் இந்த மைதானத்தில் மான்செஸ்டர் சிட்டியை வதைக்கத் தொடங்கியது கிறிஸ்டல் பேலஸ். நான்காவது நிமிடத்தில் ஜான் ஸ்டோன்ஸ் ஓன் கோல் அடித்தது அந்த அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தது.
21வது நிமிடத்தில் அந்த அணிக்கு ஒரு கார்னர் கிடைக்க, ஜோயகிம் ஆண்டர்சன் அதை ஹெட்டர் மூலம் கோலாக்கி முன்னிலையை இரட்டிப்பாக்கினார். முதல் பாதியில் எவ்வளவோ முயன்றும் கார்டியோலாவின் அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால் இரண்டாவது பாதியில் முற்றிலும் ஆட்டத்தை மாற்றியது மான்செஸ்டர் சிட்டி. 53வது நிமிடத்தில் பெர்னார்டோ சில்வா அந்த அணியின் முதல் கொலை அடித்தார். அதன்பிறகு 20 நிமிட இடைவெளியில் மூன்று கோல்கள் அடித்து பிரீமியர் லீகில் தன்னுடைய முதல் ஹாட்ரிக்கைப் பதிவு செய்தார் எர்லிங் ஹாலண்ட். 62வது நிமிடத்தில் ஃபில் ஃபோடனின் கிராஸை ஹெட்டர் மூலம் கோலாக்கி போட்டியை சமனாக்கினார் ஹாலண்ட். 8 நிமிடங்கள் கழித்து தன்னுடைய இரண்டாவது கோலை அடித்தார் அவர். சிட்டிக்கு கிடைத்த கார்னர் பல வீரர்களைக் கடந்து இரண்டாவது போஸ்ட்டுக்கு அருகில் இருந்த ஹாலண்டுக்கு வர, அதை எளிதாக கோலாக்கினார் அவர். 81வது நிமிடம் குண்டோகன் கொடுத்த பாஸை சிறப்பாக கன்ட்ரோல் செய்து, மீதமுள்ள டிஃபண்டர்களை சமாளித்து அற்புதமாக கோலாக்கி ஹாட்ரிக்கை நிறைவு செய்தார் அவர். இறுதியில் 4-2 என மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றது.

கடந்த வாரம் லீட்ஸ் யுனைடட் அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவிய செல்சீ, இந்த வாரம் லெஸ்டர் சிட்டியை வீழ்த்தியது. ஆனால் இந்தப் போட்டி டுகெலின் அணிக்கு எளிதாக அமையவில்லை. முதல் பாதியில் இரண்டு மஞ்சள் அட்டைகள் பெற்று ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் அந்த அணியின் நடுகள வீரர் கானர் காலகர். 28வது நிமிடத்திலேயே 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது அந்த அணி. இந்த சீசனில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியிருக்கும் அந்த அணி, கடைசி 3 போட்டிகளிலுமே தலா ஒரு ரெட் கார்ட் பெற்று ஹாட்ரிக் அடித்திருக்கிறது. டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் செல்சீ பயிற்சியாளர் டுசெல் சிவப்பு அட்டை பெற்றார். லீட்ஸ் அணியுடனான போட்டி முடியும்போது டிஃபண்டர் கலீடு கூலிபாலி வெளியேற்றப்பட்டார். இப்போது காலகர். இருந்தாலும் அந்த அணி அட்டாக் செய்வதைக் குறைத்துக்கொள்ளவில்லை. அதன் விளைவாக இரண்டாவது பாதி தொடங்கிய இரண்டே நிமிடங்களில் கோலடித்தது அந்த அணி. மார்க் குகுரேயா கொடுத்த பாஸை, அற்புதமாக கர்லர் ஷாட்டால் கோலாக்கினார் ரஹீம் ஸ்டெர்லிங். செல்சீ அணிக்காக அவர் அடிக்கும் முதல் பிரீமியர் லீக் கோல் இது. அடுத்த 16 நிமிடங்களில் தன்னுடைய இரண்டாவது கோலையும் அடித்தார். இம்முறை இரண்டாவது போஸ்ட் நோக்கி ரீஸ் ஜேம்ஸ் அனுப்பிய அற்புத கிராஸை எளிதாக தட்டி விட்டு கோலாக்கினார் அவர். அடுத்த மூன்று நிமிடங்களிலேயே ஹார்வி பார்ன்ஸ் மூலம் லெஸ்டர் பதில் கோல் திருப்பியது. ஆனால் அதன் பிறகு அவர்களால் இரண்டாவது கோலை அடிக்க முடியவில்லை. 10 வீரர்களை வைத்துக்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு போட்டியை வென்றது அந்த அணி!
பிரீமியர் லீக் முடிவுகள் – கேம் வீக் 4
சௌதாம்ப்டன் 0 – 1 மான்செஸ்டர் யுனைடட்
செல்சீ 2 – 1 லெஸ்டர் சிட்டி
பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான் 1 – 0 லீட்ஸ் யுனைடட்
மான்செஸ்டர் சிட்டி 4 – 2 கிறிஸ்டல் பேலஸ்
லிவர்பூல் 9 – 0 போர்ன்மௌத்
பிரென்ட்ஃபோர்ட் 1 – 1 எவர்டன்
ஆர்செனல் 2 – 1 ஃபுல்ஹாம்
வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் 1 – 1 நியூகாசிள் யுனைடட்
ஆஸ்டன் விலா 0 – 1 வெஸ்ட் ஹாம் யுனைடட்
நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் 0 – 2 டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்