புது நம்பிக்கையளித்த 2007 உலகக்கோப்பை:
2007-ல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பையை மிக மோசமாக தோற்றிருந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரசிகர்கர்கள் இந்திய அணியை வெறுக்கத் தொடங்கினர். அணிக்குள்ளும் எக்கச்சக்க முரண்பாடுகள். இந்த சமயத்தில்தான் முதல் டி20 உலகக்கோப்பைக்காக இளம் வீரரான மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கவிற்குப் புறப்பட்டது. அவநம்பிக்கைகள் சூழ அந்தத் தொடருக்குச் சென்றிருந்த இந்திய அணி அசாத்தியங்களை நிகழ்த்தத் தொடங்கியது. யுவராஜ் 6 பந்தில் 6 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். கம்பீர், உத்தப்பா, இர்ஃபான், தோனி என ஒட்டுமொத்த அணியுமே மிகச்சிறப்பாக செயல்பட்டது. நடந்ததெல்லாம் நல்லவையாக மட்டுமே இருக்க, இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்திய அணியின் மீதான நம்பிக்கை புத்துயிர் பெற்றது.
1983-ல் இந்திய அணி உலகக்கோப்பையை வென்று ஏறக்குறைய 28 ஆண்டுகள் கடந்திருந்த சமயத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி மீண்டும் சாதித்துக் காட்டியது. 2011 உலகக்கோப்பைத் தொடரை சொந்த மண்ணிலேயே வென்று ஒட்டுமொத்த தேசத்தையுமே இந்திய அணி கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. இந்த உலகக்கோப்பையின் சூப்பர் ஸ்டாரும் யுவராஜ்தான். ஒரு ஆல்ரவுண்டராக முழுமையாக தனது பங்களிப்பை அணிக்குக் கொடுத்திருந்தார்.
இளம்படையை அடையாளம் காட்டிய 2013 மினி உலகக்கோப்பை:
2013-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் தோனி தலைமையிலான இந்திய அணியே வென்றிருந்தது. உலகக்கோப்பை வெற்றிகளோடு ஒப்பிடுகையில் இது அவ்வளவு பெரிய வெற்றி கிடையாதுதான். ஆனாலும், இந்த வெற்றி இந்திய அணியில் ஏற்படுத்திய தாக்கம் தவிர்க்க முடியாதது. சீனியர்களையெல்லாம் மெது மெதுவாக ஓரங்கட்டிவிட்டு அடுத்தக்கட்ட இந்திய அணியை தோனி உருவாக்கத் தொடங்கியிருந்தார். அந்தச் சமயத்தில்தான் இந்த சாம்பியன்ஸ் டிராபி நடந்திருந்தது. இளம் வீரர்களை மட்டுமே முக்கியமான துருப்புச்சீட்டாக வைத்துக்கொண்டு தோனி இந்தத் தொடரை வென்று காட்டியிருப்பார். அடுத்த 7-8 ஆண்டுகளுக்கான இந்திய அணியின் பயணம் இங்கிருந்தே தொடங்கியது.