சென்னை: 10 நாட்களுக்கு பிறகு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.இந்த கலவரத்தை தொடர்ந்து தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், ‘சீலிடப்பட்ட அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் தர வேண்டும். பாதுகாப்பு கருதி ஒரு மாத காலத்துக்கு கட்சி தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்லக்கூடாது,’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கோட்டாட்சியர் , வட்டாட்சியர் தலைமையில் போலீஸ் பாதுகாப்போடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சீலை மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம் அகற்றினார். கடந்த 11ம் தேதி நடந்த மோதலால் சீல் வைக்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்கு பிறகு அகற்றப்பட்டுள்ளது. சீலை அகற்றிய ஜெகஜீவன்ராம், அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த மேலாளரிடம் வழங்கினார்.சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அதிமுக அலுவலக பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.