நாளின் முடிவில் அப்போராட்டம் தோல்வியில் முடிந்தாலும் வெற்றியைத் தழுவினாலும், விலை மதிப்பற்றதாகத்தான் அவரது இன்னிங்ஸ்கள் அமைந்துள்ளன. அயர்லாந்துடன் ஆடினாலே இவரது ஒரு பெரிய இன்னிங்ஸை எதிர்பார்த்துதான் மற்ற அணிகள் தற்போதெல்லாம் ஆட வேண்டியுள்ளது. இவற்றையும் தாண்டி உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் டி20 லீக்குகளிலும், டி10 தொடரிலும் ஒன்றுவிடாமல் அத்தனையிலும் ஸ்டிர்லிங்கின் சாம்ராஜ்யம் தொடர்கிறது. அவை எல்லாவற்றிலும் பௌலர்களைச் சரணடையச் செய்வதாகவே அவரது ஸ்ட்ரைக் ரேட் இலக்கங்கள் மாறுகின்றன. பண்ட்டின் பயமறியா இயல்போடு இங்கிலாந்தின் அட்டாக்கிங் கிரிக்கெட் முறையையும் கலந்து செய்ததே ஸ்டிர்லிங்கின் ஆட்டமுறை.
கடந்த ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற டி10 லீக்கின் எலிமினேட்டரில், டீம் அபுதாபி சார்பாக பெங்கால் டைகர்ஸுக்கு எதிராக ஆடியபோது, புயல் மனிதர் கெய்லே மறுமுனையில் இருந்து பிரமிக்கும் வகையில் 20 பந்துகளில் 57 ரன்களை விளாசி, அணியை அடுத்த கட்டத்திற்கு முன்னேறச் செய்தார் ஸ்டிர்லிங். அந்த ஒரு இன்னிங்ஸ் போதும் ஸ்டிர்லிங்கின் ஒட்டுமொத்த கிரிக்கெட் கரியருக்குமான சாராம்சமாக…
ஆகமொத்தம் எல்லா நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அவரது பெயர் பரிச்சயம்தான், எல்லா நாட்டு லீக்கிலும் ஆடிவிட்டார்தான். இருப்பினும் ஐ.பி.எல் மட்டும் அவருக்கு இன்னமும் வரவேற்புரை வாசிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவரது பெயர் ஏல மேஜைக்கு வராமல் இல்லை. இந்த வருட ஐ.பி.எல் ஏலத்தில்கூட 50 இலட்சம் அடிப்படைத் தொகையோடு வந்து சேர்ந்தது. ஆனால், அவரை எடுக்கத்தான் அணிகள் முன்வரவில்லை.