முதலில் ராய் மற்றும் ரூட் இருவரையுமே டக் அவுட்டாக்கி அதிர்ச்சித் தொடக்கம் கொடுத்தார். ஃபுல் லெந்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நகர்ந்த பந்து, இன்சைட் எட்ஜாகி ராயை வெளியேற்ற, களத்தில் கிடைத்த எக்ஸ்ட்ரா பவுன்ஸ், ரூட்டின் விக்கெட்டுக்கான ரூட்டு போட பும்ராவுக்கு உதவியது. களத்தில் பும்ரா, பேட்ஸ்மேன் மற்றும் பண்ட் மட்டும்தான் இருக்கிறார்களா என்னும் அளவு அவர்களின் மீதே பார்வையாளர்களின் முழு கவனமும் இருக்க வேண்டியிருந்தது. ஸ்கெட்சை பும்ரா போட, பேட்ஸ்மேன் அதில் விழ, கேட்ச்களைத் தவற விடாது அதனை உறுதிப்படுத்திப் படுத்திக் கொண்டே இருந்தார் பண்ட். அவரது ஒன் ஹாண்டட் சிக்ஸர்களைப் போன்றே ஒன் ஹாண்டட் கேட்சுகளும் இப்போட்டியில் அசர வைத்தன. ஒரு விக்கெட் கீப்பராகப் பல படிகள் முன்னேற்றம் அடைந்துவிட்டார் இந்த ஸ்பைடர்மேன்!
அதே பாணியில் இந்த இருவரது கூட்டணிதான் பும்ராவின் அடுத்த பலியாக பேர்ஸ்டோவை ஆக்கியது. மரண ஃபார்மில் இருக்கும் அவரும் பட்லரும் தொடர்ந்திருந்தால் இந்தியாவுக்குச் சேதாரம் சர்வ நிச்சயம். ஆனால், ஷார்ட் ஆஃப் லெந்தில் வந்து பேட்டில் எட்ஜான பும்ராவின் பந்து அதற்கான முடிவுரை எழுதியது. அடுத்ததாக லிவிங்ஸ்டோன், பும்ராவின் லைன் அண்ட் லெந்தைக் குழப்பும் வகையில் நகர்ந்து கொண்டே இருக்க, அவருக்கு எதிர்வினையாற்ற நேரம் தராமல் இன்ஸ்விங்கிக் யார்க்கர் ஒன்று ஸ்டம்பைத் தகர்த்தது.
எட்டு ஓவர்களுக்குள் இங்கிலாந்து எடுத்திருந்த வெறும் 26 ரன்களும் இழந்திருந்த 5 விக்கெட்டுகளும், அதில் டக் அவுட் ஆகியிருந்த நான்கு பேட்ஸ்மேன்களும் இந்தியாவின் ஏகாதிபத்தியத்தைச் சொல்லாமல் சொல்லியிருந்தனர். கடைசியாக டி20 ஆக முடிய வேண்டிய போட்டி, 20 ஓவர்கள் தாண்டியும் இழுத்துக் கொண்டிருக்க, ‘டெய்ல் எண்டர்கள் ஸ்பெஷலிஸ்ட்’ பும்ராவை ரோஹித் கூப்பிட, பும்ராவின் யார்க்கர், கேர்ஸை தனது ஐந்தாவது விக்கெட்டாகவும், ராம்ப் ஷாட் ஆட முயன்ற வில்லேயின் விக்கெட்டை ஆறாவதாகவும் வீழ்த்தி, ஒருநாள் போட்டிகளில் தனது சிறந்த பௌலிங் ஸ்பெல்லாக இதை மாற்றிக் கொண்டார் பும்ரா. ஸ்டூவர்ட் பின்னி, கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக இந்திய பௌலர் ஒருவரின் சிறந்த ஒருநாள் போட்டி பௌலிங் ஸ்பெல் (6/19) இதுதான்.