2. 79 vs KXIP
” திரும்பி வந்துட்டோம்ன்னு சொல்லு ” என 2018-ம் ஆண்டு சிஎஸ்கே கம்பேக் கொடுத்த வருடம். முதல் போட்டி மும்பையுடன் பிராவோ அடுத்த ஆட்டத்தில் பில்லிங்கிஸ் என வெற்றிக்கான இன்னிங்ஸை ஒவ்வொருவரும் ஆடித்தர தோனியிடம் இருந்து அப்படி ஒரு இன்னிங்ஸ் வரவில்லை என்று ஏங்கினர் ரசிகர்கள். இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுடனான மூன்றாம் போட்டி மொஹாலியில் நடைப்பெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் கெயிலின் அதிரடியால் 197 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய சென்னை அணியின் விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தாலும் தோனி-ராயுடு இணை அணியை சரிவிலிருந்து மீட்டனர். “ஊருக்காக ஆடும் கலைஞன், தன்னை மறப்பான்; தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்” என்பது போல இந்த போட்டியில் முதுகு வலியால் அவதிப்பட்டார் தோனி. அதையும் மீறி அவரின் டிரேட்மார்க் மந்திரமான ‘Take game into deep’-ஐ பின்பற்றி ஆட்டத்தை இறுதி ஓவர் வரை அழைத்துச் சென்றார். பரீந்தர் ஓவரைத்தான் தோனி டார்கெட் செய்வார் என அனைவரும் எதிர்பார்க்க ஆண்ட்ரூ டை ஓவரை அட்டாக் செய்தார் அவர். கடைசி பந்தில் சிக்சர் அடித்தாலும் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதில் மோஹித் ஷர்மா வீசிய வைட் யார்க்கரை மிஸ் செய்வார், இதையே கோரே ஆண்டர்சன் செய்ய முற்படும்போது நகர்ந்து நின்று டீப் மிட்விக்கெட்டில் சிக்சர் அடித்து பெங்களூருக்கு எதிராக ஆட்டத்தை முடிப்பார் தோனி.
1. 84 vs RCB
ஐபிஎல் தொடரில் CSK vs MI ஆட்டங்களைப் போல் தான் CSK vs RCB ஆட்டங்களும். ஆல்பி மோர்க்கல் கேமியோ, ஆர்பி சிங் நோபால், தோனியின் ஃபினிஷிங் என இந்த அணிகளுக்கு இடையிலான எத்தனையோ ஃபிளாஷ்பேக்கள் நினைவுக்கு வரும். அப்படி ஒரு போட்டிதான் 2019 பெங்களூருவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 161 ரன்களை எடுத்தது. பின்னர் சேஸிங் செய்த சென்னை அணியை ஸ்டெயின் பதம் பார்த்தார். அதுவும் ரெய்னாவை போல்டாக்கிய பந்தைப் பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம்.
பின்னர் ராயுடுவுடன் சேர்ந்து ஆடினார் தோனி. கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 26 ரன்கள் தேவை. பெங்களூரு அணிக்கே வெற்றி பெற அதிகம். ஆனால், “எதிர்த்து ஆடுறவன் பேரு தோனிமா!” என முதல் பந்து பவுண்டரி, அடுத்த பந்து 111 மீட்டருக்கு பிரம்மாண்ட சிக்ஸர், அடுத்தது சிக்ஸர், அடுத்த 2 பந்துகளும் பவுண்டரி, என கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையை எட்டியது பொட்டி. ஆனால் அப்பந்தில் ரன் அவுட்டானார் தாக்கூர். தோனி தன் அதிகபட்ச டி20 ஸ்கோரான 84 ரன்களை இப்போட்டியில் எடுத்தார். போட்டிக்கு பின்னர் கோலி சொன்ன வார்த்தைகள் இவை, “He gave us all an massive scare!” வெற்றி பெற்றிருந்தால் ஐபிஎல்லில் ஆகச்சிறந்த சேஸாக இந்த ஆட்டம் அமைந்திருக்கும்.
தன் கடைசி ஆட்டம் சென்னையில்தான் இருக்கும் என கூறியிருக்கும் தோனி, அடுத்த ஐபிஎல்லில் கோப்பையுடன் விடைபெறுவார் என எதிர்பார்ப்போம்!