பட மூலாதாரம், Getty Images
உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவகங்கள், கடைகளில் நடத்தும் சோதனைகள் அவ்வப்போது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகின்றன. ஐஸ்கிரீம் கடைகள், பால் பண்ணைகள், ஹோட்டல்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள உணவகங்களில் சோதனைகள் நடத்தப்படுவது உண்-
இதையொட்டி கலப்படம், தரமற்ற உணவு மற்றும் சுகாதாரமற்ற சூழல் ஆகியவை குறித்த விவாதமும் எழுகிறது. உணவு நஞ்சாதல் (Food poisoning) மற்றும் அதன் விளைவுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
உணவு நஞ்சாதல், கலப்படம் மற்றும் இந்த சூழ்நிலைகளின் விளைவுகள் ஒரு நாள் வயிற்றுப்போக்கு, வாந்தி பிரச்னைகளுக்கு மருத்துவர் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மாத்திரைகள் கொடுப்பதுடன் முடிந்துவிடுவதில்லை.
இதற்கு நீண்டகால விளைவுகள் உண்டு.
உணவு நஞ்சாதல் என்பது வெறும் வயிற்றுக்கோளாறு மட்டும் தான் என்பது ஒரு மிகப்பெரிய தவறான எண்ணமாகும். அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
பட மூலாதாரம், Getty Images
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள் மற்றும் பழங்களில் கலப்படம் செய்யப்படும் சம்பவம் புதிதுஅல்ல.
உண்மையில், உலகம் முழுவதும், குறிப்பாக மேலைநாடுகளில் உணவின் தரம், அதன் சேமிப்பு மற்றும் விற்பனை குறித்து பல கடுமையான தரநிலைகள் உள்ளன.
இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் சில இடங்களில் இத்தகைய தரநிலைகள் பின்பற்றப்படுவதில்லை என்பது கடந்த சில நாட்களாக வெளிவரும் செய்திகளில் இருந்து புலனாகிறது.
கலப்படம் மற்றும் விதிமுறைகளைப் புறக்கணிப்பதன் காரணமாக, பல வேதிப்பொருட்கள், கன உலோகங்கள் , செயற்கை நிறமிகள் மற்றும் பூச்சிக்கொல்லி எச்சங்கள் சிறிய அளவிலேயே இருந்தாலும் தொடர்ந்து உடலுக்குள் நுழைகின்றன. அவற்றின் விளைவுகள் பல ஆண்டுகளாகக் காணப்படுகின்றன. இத்தகைய நச்சுப் பொருட்கள் உடலின் பல்வேறு உறுப்புகளில் குவிகின்றன.
இதன் விளைவாக, இது கல்லீரல், சிறுநீரகங்கள், செரிமான மண்டலம், இதயம் மற்றும் ஹார்மோன் மண்டலத்தைப் பாதிக்கலாம்.
சில ஆய்வுகள் இத்தகைய மாசடைந்த உணவுகளை சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல் நோய், நீரிழிவு நோய் ஆகியவற்றுடனும், மேலும் சில ஆய்வுகள் புற்றுநோயுடனும் தொடர்புபடுத்தியுள்ளன, ஆனால் இவற்றுக்கான காரண-விளைவுத் தொடர்பு இன்னும் நிறுவப்படவில்லை.
ஓர் உணவைச் சாப்பிட்ட பிறகு அது உடனடியாக அசௌகரியத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்காகவே, அது முற்றிலும் பாதுகாப்பானது என்று அர்த்தமல்ல.
எனவே, கலப்படப் பிரச்னை என்பது வெறும் உணவு நஞ்சாதலுடன் முடிந்துவிடாமல், நீண்டகாலப் பொதுச் சுகாதாரக் கவலையாக உள்ளது.
1. இந்தியாவில் விதிகள் இல்லையா?
அரசுத் தரவுகளின்படி, 2022 மற்றும் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்ட உணவு மாதிரிகளில் தோராயமாக ஆறில் ஒன்று உணவுப் பாதுகாப்புத் தரங்களில் தோல்வியடைந்துள்ளது. அதே காலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட உணவு வணிக உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த மாதிரி சோதனைகளின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மோசமான சுகாதாரம், லேபிளிங் விதிமுறைகளை மீறுதல், மாசுபடுதல் அல்லது கலப்படம் ஆகியவை இதில் அடங்கும்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம், ஏப்ரல் 2026- ஆம் ஆண்டில் நடைபெற்ற கூட்டத்தில் உணவு கலப்படத்திற்கு எதிராக பல முக்கியமான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தது.
முழு உணவு விநியோகச் சங்கிலியையும் வரைபடமாக்கி, ஒவ்வொரு கட்டத்திலும் அசுத்தமடைவதற்கான சாத்தியக்கூறுகளைச் சரிபார்த்தல், உணவுப் பாதுகாப்பு அமைப்புகளில் குடிமக்களின் பங்களிப்பை அதிகரித்தல், விழிப்புணர்வுப் பிரசாரங்களை நடத்துதல், பள்ளி அளவில் உணவுப் பாதுகாப்புக் கல்வியை அறிமுகப்படுத்துதல், ஆய்வகம் மற்றும் பரிசோதனை வசதிகளை வலுப்படுத்துதல், மற்றும் உணவு கலப்பட புகார்களுக்கான டிஜிட்டல் அமைப்பை உருவாக்குதல் ஆகியவை இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
கூடுதலாக, உணவின் தரத்தை உடனுக்குடன் கண்காணிக்க குறைந்த விலையிலான செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துதல், உணவுப் பரிசோதனையில் அதிக வெளிப்படைத்தன்மை, விற்பனையாளர்களின் விதிமுறை இணக்கத் தகவல்களைப் பொதுமக்களுக்கு வெளியிடுதல், மற்றும் மத்திய மற்றும் மாநில அளவிலான முகமைகளுக்கு இடையே அதிக ஒருங்கிணைப்பு ஆகியவையும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
பட மூலாதாரம், Getty Images
இந்த விவகாரம் குறித்து பிபிசியின் நிகிதா யாதவ் சில அதிகாரிகள் மற்றும் நிபுணர்களிடம் பேசினார்.
இந்தியாவில் உணவு கலப்படத்தைத் தடுக்க விதிகள் உள்ளன.
2006-ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), உணவின் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து மற்றும் விற்பனையைக் முறைப்படுத்துகிறது. இதற்கு முன்பு நடைமுறையிலிருந்த பல்வேறு பழைய சட்டங்களுக்குப் பதிலாக இந்த அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
விதிகளின்படி, பெரிய உணவு நிறுவனங்கள் முதல் சிறிய உணவு விற்பனையாளர்கள் வரை அனைவரும் உரிமம் பெற வேண்டும். ஆய்வுகளை மேற்கொள்வது, மாதிரிகளைச் சேகரிப்பது மற்றும் புகார்களை விசாரிப்பது போன்ற பணிகளும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், Getty Images
நிகிதா யாதவிடம் எப்ஃஎஸ்எஸ்ஏஐ -இன் முன்னாள் தலைவர் பவன் அகர்வால் பேசுகையில், “இது உலகின் மிகவும் நவீனமான உணவுப் பாதுகாப்புச் சட்டங்களில் ஒன்றாகும். உணவு எவ்வாறு விற்கப்பட வேண்டும், எவ்வாறு விற்கப்படக் கூடாது என்பதற்கான தெளிவான தரநிலைகளை இது அமைக்கிறது” என்று கூறினார்.
இருப்பினும், உண்மையில், ஒரு சிக்கல் கண்டறியப்பட்ட பின்னரே இந்த முறையைச் செயல்படுத்தும் பணி பெரும்பாலும் தொடங்குகிறது.
“பெரிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் சந்தைக்கு வருவதற்கு முன்பு அவற்றைச் சோதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உணவு அமைப்பின் பெரும்பகுதி அவ்வாறு செயல்படுவதில்லை” என்று அகர்வால் கூறினார்.
“பெரும்பாலும், புகார்கள் வரப்பெற்ற பிறகோ அல்லது சந்தேகங்கள் எழுந்த பிறகோ மட்டுமே உணவுப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.”
பட மூலாதாரம், Getty Images
உணவுப் பொருட்களைப் பரிசோதிக்கும் ஆய்வகமான அரிகோ ரிசர்ச்சின் நிர்வாக இயக்குநர் சௌரப் அரோராவுடனும் நிகிதா யாதவ் பேசினார்.
உணவு பரிசோதனை முறையில் ஓர் அடிப்படை குறைபாடு இருப்பதாக அரோரா கூறியிருந்தார்.
சௌரப் அரோரா கூறுகையில், “வணிக நிறுவனங்கள் 6 அல்லது 12 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே பரிசோதனைக்காக மாதிரிகளை அனுப்ப வேண்டும். ஆனால் இந்த வரையறுக்கப்பட்ட பரிசோதனை முறைகூட பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” என்கிறார்.
“பரிசோதனைக்கு அனுப்பப்படும் மாதிரி அனைத்துத் தர நிலைகளையும் பூர்த்தி செய்வதை அவர்கள் உறுதிசெய்கிறார்கள். இருப்பினும், அதே தயாரிப்பின் பிற பகுதிகள் அதே தரத்தைக் கொண்டிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை”என்றும் அவர் குறிப்பிட்டார்.
2. கலப்பட உணவால் நம் உடலில் எந்தெந்த உறுப்புகளுக்கு ஆபத்து?
கலப்படம் செய்யப்பட்ட உணவின் அனைத்து விளைவுகளும் உடனடியாகத் தெரிவதில்லை. பெரும்பாலும் உடலுக்குள் நுழையும் நச்சுகள் பல ஆண்டுகளாக அமைதியான முறையில் சேதத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.
சாயம், கன உலோகங்கள், பூச்சிக்கொல்லி எச்சங்கள் அல்லது சில தொழிற்துறை வேதிப்பொருட்கள் போன்றவை உடலுக்குள் நுழைந்தால், அந்தச் சிறிய அளவிலான வேதிப்பொருட்களை வெளியேற்றுவதற்குப் பிரதானமாக கல்லீரலும் சிறுநீரகங்களுமே பொறுப்பு வகிக்கின்றன.
இத்தகைய பொருட்களின் தொடர்ச்சியான தாக்கம் இந்த உறுப்புகளுக்குக் கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும்.
பட மூலாதாரம், Getty Images
சில நச்சுகள் செல்லுலார் செயல்பாட்டில் தலையிட்டு, உடலில் நுண்ணிய அழற்சியை உருவாக்கலாம், ஹார்மோன் சமநிலையைக் குலைக்கலாம் அல்லது செரிமான அமைப்பில் உள்ள பயனுள்ள பாக்டீரியாக்களைப் பாதிக்கலாம்.
ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் இல்லாததால் பலர் இதை உணர்வது கூட இல்லை. ஆனால் காலப்போக்கில், ஆரோக்கியத்தில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களின் விளைவுகள் வெளிப்படத் தொடங்குகின்றன.
சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே கல்லீரல், சிறுநீரகம் அல்லது பிற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக ஆபத்தைச் சந்திக்க நேரிடலாம்.
எனவே, உடனடி நோயைத் தடுப்பதற்கு மட்டுமல்லாமல், எதிர்கால ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உணவுப் பாதுகாப்பு முக்கியமானது.
பட மூலாதாரம், Getty Images
இந்தக் கலப்படத்தால் பாதிக்கப்படும் உறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி விளக்குமாறு, நவி மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் செரிமானவியல், கல்லீரலியல், இன்டர்வென்ஷனல் எண்டோஸ்கோபி மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஆலோசகரான மருத்துவர் தீபக் பாங்கலேவிடம் கேட்டோம்.
இதுகுறித்துப் பேசிய அவர், “கலப்பட உணவின் உடனடி விளைவுகள் கலப்படப் பொருளின் வகை மற்றும் உட்கொள்ளப்படும் அளவைப் பொறுத்தது. குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வயிறு உப்பசம், தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். சிலருக்கு ஒவ்வாமை, தோலில் தடிப்புகள் அல்லது மூச்சுத் திணறல் ஏற்படலாம். தீவிர நிகழ்வுகளில், நச்சுகள் கல்லீரல், சிறுநீரகம் அல்லது நரம்பு மண்டலத்தைப் பாதித்து, நீரிழப்பு, வலிப்பு அல்லது பிற மருத்துவ அவசர நிலைகளை உருவாக்கலாம். சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
பொதுவாகக் கலப்படம் மற்றும் தரமற்ற உணவால் எந்தெந்த உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன என்பது குறித்து மருத்துவர் பாங்கலேவிடம் கேட்டோம். அதற்கு அவர் விரிவான பதில்களை அளித்தார்.
கேள்வி– கலப்படம் செய்யப்பட்ட உணவைத் தொடர்ந்து உட்கொள்வதால் எந்தெந்த உறுப்புகளுக்கு அதிக ஆபத்து உள்ளது?
மருத்துவர் பாங்கலே: உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றுவதற்குப் பொறுப்பாக இருப்பதால் கல்லீரலும் சிறுநீரகங்களுமே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. தொடர்ச்சியான நச்சுத் தாக்கம் இந்த உறுப்புகளுக்கு அழுத்தத்தைக் கொடுத்து, திசுக்களில் தழும்புகளை உருவாக்கி, இறுதியில் உறுப்பு செயலிழப்பிற்கு வழிவகுக்கிறது.
வயிறும் குடலும் கூட சேதமடைந்து, வீக்கம் மற்றும் செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. ஈயம் மற்றும் காட்மியம் போன்ற கன உலோகங்கள் உடலில் குவிந்து இதயம், ரத்தக் குழாய்கள் மற்றும் நரம்பு மண்டலத்தைச் சேதப்படுத்துகின்றன.
கேள்வி– கலப்படம் செய்யப்பட்ட உணவு கல்லீரலை எவ்வாறு பாதிக்கிறது?
மருத்துவர் பாங்கலே– கல்லீரல் தான் உடலின் முக்கிய வேதியியல் வடிகட்டி. உணவில் வேதிச் சாயங்கள், ஃபார்மலின் போன்ற பதப்படுத்திகள் அல்லது பூஞ்சை நச்சுகள் இருக்கும்போது, அவற்றை சிதைக்க கல்லீரல் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். இந்தச் செயல்பாட்டில், ‘ஃப்ரீ ரேடிக்கல்கள்’ எனப்படும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உற்பத்தியாகி, கல்லீரல் செல்களைச் சேதப்படுத்துகின்றன.
இது வீக்கம், கொழுப்பு படிதல் மற்றும் ஃபைப்ரோசிஸ் ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது. இத்தகைய நச்சுகளின் தொடர்ச்சியான தாக்கம் கொழுப்பு கல்லீரல் , சிர்ரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கிறது.
கேள்வி– கலப்படம் செரிமான அமைப்பு மற்றும் குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலையைக் குலைக்க முடியுமா?
மருத்துவர் பாங்கலே– ஆம். ரசாயனக் கலப்படங்கள், தொழிற்துறை சாயங்கள் மற்றும் சலவை சோப்பு எச்சங்கள் ஆகியவை வயிறு மற்றும் குடலின் பாதுகாப்பு அடுக்கை அழிக்கின்றன. இந்த நேரடி எரிச்சல் வயிற்றுப் புண், அசிடிட்டி மற்றும் நாட்பட்ட இரைப்பையழற்சிக்கு வழிவகுக்கும். கூடுதலாக, இந்த நச்சுகள் செரிமானத்திற்கு உதவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் லட்சக்கணக்கான ‘நல்ல’ பாக்டீரியாக்களை அழிக்கின்றன.
இந்த பயனுள்ள பாக்டீரியாக்கள் குறையும் போது, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வளரத் தொடங்கி ‘லீக்கி கட்’ (leaky gut) என்ற நிலை உருவாகலாம். இது நச்சுகள் நேரடியாக ரத்த ஓட்டத்தில் கலக்க அனுமதிக்கிறது, இதனால் உடல் முழுவதும் வீக்கம், வயிறு உப்பசம், ஊட்டச்சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படாமை மற்றும் நாள்பட்ட செரிமானக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
கேள்வி– இதயம் அல்லது ரத்தக் குழாய்களில் ஏதேனும் விளைவுகள் ஏற்படுமா ?
மருத்துவர் பாங்கலே: ஆம், உணவுக் கலப்படம் இதய ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். கடுகு எண்ணெயில் நச்சுத்தன்மை வாய்ந்த ஆர்ஜெமோன் (argemone) எண்ணெய் கலப்படம் செய்யப்படுவது இதற்கு ஒரு பிரபல உதாரணமாகும்.
இந்த நச்சுகள் ரத்தக் குழாய்களைப் பலவீனப்படுத்தி, அதிகப்படியான நீர் தேக்கம், வீக்கம் மற்றும் இதய செயலிழப்பு ஆபத்தை அதிகரிக்கின்றன. அங்கீகரிக்கப்படாத உணவுச் சாயங்களில் காணப்படும் ஈயம் மற்றும் காட்மியம் போன்ற கன உலோகங்கள் ரத்தக் குழாய்களில் படிந்து, அவற்றை கடினமாகவும் குறுகலாகவும் மாற்றக்கூடும். இது ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோய் ஆபத்தை உயர்த்துகிறது.
தரம் குறைந்த கலப்படம் செய்யப்பட்ட கொழுப்புகள் ‘கெட்ட’ கொழுப்பை அதிகரித்து, இதயத் தமனிகளை அடைத்து, திடீர் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தை கணிசமாக அதிகரிக்கின்றன.
3. ஹார்மோன்களை எது பாதிக்கிறது?
பிஸ்ஃபீனால்கள் (BPA, BPS), தாலேட்டுகள்(DEHP, DBP, DEP), பிஃபாஸ் (PFAS: PFOA, PFOS), ஆர்கனோகுளோரின் பூச்சிக்கொல்லிகள் (DDT/DDE), பிசிபிக்கள் (PCBs), பிபிடிஇக்கள் (PBDEs), மற்றும் ஈயம், காட்மியம், ஆர்சனிக் போன்ற கன உலோகங்கள் என கலப்பட உணவில் காணப்படும் சில வேதிப்பொருட்கள் உடலின் ஹார்மோன் மண்டலத்தைக் சீர்குலைக்கக்கூடும்.
இந்தச் செறிவில் அரிதாக ஏற்படும் தொடர்பு உடனடியாகப் பிரச்னைகளை உருவாக்காது. இருப்பினும், தொடர்ச்சியான தாக்கம் ஹார்மோன்களின் உற்பத்தி, கடத்தல் மற்றும் செயல்பாட்டைப் பாதிக்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
மும்பை சென்ட்ரலில் உள்ள வோக்கார்ட் மருத்துவமனையின் எண்டோக்ரினாலஜிஸ்ட் மற்றும் நீரிழிவு நிபுணரான மருத்துவர் பிரணவ் கோடி, தைராய்டு சுரப்பியில் இந்த வேதிப்பொருட்கள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்துக் குறிப்பிடுகிறார்.
மருத்துவர் பிரணவ் கோடி கூறுகையில், “பிஸ்ஃபீனால்கள் (BPA, BPS), தாலேட்டுகள் (DEHP), தீ தடுப்பான்கள் (PBDE), பிஃப்ஏஎஸ் (PFAS: PFOA, PFOS), பிசிபிக்கள் (PCBs), அத்துடன் பெர்குளோரேட்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் போன்ற வேதிப்பொருட்கள் தைராய்டு ஹார்மோன்களின் செயல்பாட்டைப் பாதிக்கின்றன என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
உடலின் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளிலும், குறிப்பாகக் கர்ப்பகாலம் மற்றும் குழந்தைப் பருவத்தில் மூளை வளர்ச்சியிலும் தைராய்டு சுரப்பி முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, இத்தகைய வேதிப்பொருட்களின் நீண்டகால தாக்கம் கவலைக்குரிய விஷயமாகும்” என்கிறார்.
கர்ப்பிணிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
இது குறித்துப் பேசிய மருத்துவர் பிரணவ், “கர்ப்பகாலம் என்பது மிகவும் முக்கியமான காலகட்டமாகும். இந்த காலத்தில், கருவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பிபிஏ, தாலேட்டுகள், பிஎப்ஃஏஎஸ், பிசிபி போன்ற வேதிப்பொருட்களும், ஈயம் மற்றும் காட்மியமும் தொப்புள்கொடி வழியாகக் கருவைச் சென்றடைந்து, அதன் தைராய்டு செயல்பாடு, இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி மற்றும் பிறப்பிற்குப் பிந்தைய ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்” என்று தெரிவித்தார்.
4. சிறுநீரக ஆரோக்கியத்தை எது பாதிக்கிறது?
ரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்களை வடிகட்டி உடலிலிருந்து வெளியேற்றும் முக்கியமான பணியைச் சிறுநீரகங்கள் செய்கின்றன. கலப்பட உணவில் உள்ள அசுத்தங்களின் தொடர்ச்சியான தாக்கம் சிறுநீரகங்களுக்குக் கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்து, வீக்கம், வடிகட்டும் திறன் குறைபாடு அல்லது சிலருக்கு நீண்டகாலச் சேதத்தை ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கிறது.
காட்மியம் மற்றும் ஈயம் போன்ற கன உலோகங்கள் நீண்ட காலத்திற்குச் சிறுநீரகத் திசுக்களில் படிந்து, ரத்தத்தை வடிகட்டும் சிறுநீரகங்களின் திறனைக் குறைக்கின்றன.
மும்பை சென்ட்ரலில் உள்ள வோக்கார்ட் மருத்துவமனையின் சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் நிகில் பாசின் இதுகுறித்து கூறுகையில், “ஈயம், காட்மியம், ஆர்சனிக் மற்றும் பாதரசம் போன்ற கன உலோகங்கள் மிகவும் ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன; ஏனெனில் காலப்போக்கில் அவை சிறுநீரகத் திசுக்களைச் சேதப்படுத்தும்.
சில தொழிற்துறை வேதிப்பொருட்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் மெலமைன் போன்ற வேதிப்பொருட்களின் அதிகப்படியான பயன்பாடும் சிறுநீரகங்களைச் சேதப்படுத்தும்” என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ரத்த ஓட்டத்தில் நுழைந்த பிறகு, சிறுநீரகங்கள் அவற்றை வடிகட்டி சிறுநீர் வழியாக உடலிலிருந்து வெளியேற்றுகின்றன. இருப்பினும், மீண்டும் மீண்டும் அல்லது நீண்டகாலத் தாக்கம் ஏற்படும் போது, சில நச்சுகள் சிறுநீரகங்களின் திசுக்களில் படிந்துவிடக்கூடும் என்று அவர் கூறுகிறார்.
ஆரம்பக் கட்டங்களில் அறிகுறிகளைக் கண்டறிய முடியாது என்பதால், சிறுநீரகப் பாதிப்பின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் இல்லாவிட்டாலும், காலப்போக்கில் கால்கள் அல்லது முகத்தில் வீக்கம், சிறுநீர் வெளியேற்றம் குறைதல், தொடர்ச்சியான சோர்வு, குமட்டல், பசியின்மை, ரத்த அழுத்தம் அதிகரிப்பு அல்லது சிறுநீரில் ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று மருத்துவர் பாசின் கூறுகிறார். எனவே, வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மிகவும் அவசியமாகும்.
5. பாதுகாப்பாக இருப்பது எப்படி?
- நம்பகமான இடங்களிலிருந்து உணவை வாங்குங்கள்.
- பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாகக் கழுவுங்கள்.
- சந்தேகத்திற்குரிய நிறங்கள் அல்லது தோற்றம் கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
- பிபிஏ அல்லது தாலேட்டுகள் உள்ள பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவைச் சூடாக்குவதைத் தவிர்க்கவும்.
- பதப்படுத்தப்பட்ட மற்றும் டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகளின் நுகர்வைக் குறைக்கவும்.
- உணவுக் கலப்படம் குறித்து சந்தேகம் எழுந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும்.
- சீரான மற்றும் பலதரப்பட்ட உணவை உட்கொள்வது உடலுக்கு ஏற்படும் சாத்தியமான ஆபத்தைக் குறைக்கும்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு