பட மூலாதாரம், Getty Images
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே சிஜேபி-யின் பிரதான கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், இந்த பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தர்மேந்திர பிரதான் தனது பதவி விலகல் குறித்த தகவலை சமூக ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “ஜந்தர் மந்தர் மற்றும் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சூழலை தேசவிரோத சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது; நாட்டின் ஒற்றுமை காக்கப்பட வேண்டும்; இந்தியாவின் ஒரு மாணவரின் எதிர்காலம் கூட சட்டச் சிக்கல்களில் சிக்கிக்கொள்ளக் கூடாது; நமது குழந்தைகள் தங்கள் நேரத்தை படிப்பிலும், சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதிலும் செலவிட வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, எனது ராஜிநாமா கடிதத்தை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தர்மேந்திர பிரதான் ராஜிநாமா அறிவிப்பு வெளியானதுமே டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி போராட்டம் நடக்கும் இடத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, டெல்லியின் ஜந்தர் மந்தரில் அவருக்கு எதிராக சிஜேபி அமைப்பு கடந்த ஒரு மாதமாகப் போராட்டம் நடத்தி வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் அவர் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தன.
தர்மேந்திர பிரதான் தனது அறிக்கையில் கூறியது என்ன?
தர்மேந்திர பிரதான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், “நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சீர்திருத்தத்திற்காக நான் அர்ப்பணித்துள்ளேன். வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தொலைநோக்கு கல்வி முறை ஒரு வலுவான தேசத்தின் அடித்தளம் என்று நான் எப்போதும் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
“நாட்டின் இளைஞர்களின் அபிலாஷைகள், உணர்வுகள் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகளை நான் ஆழமாக மதிக்கிறேன். இந்தியாவின் இளம் தலைமுறையினரின் கனவுகளை நனவாக்குவது அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் நம் அனைவரின் தார்மீக அர்ப்பணிப்பாகும். பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ் நாட்டுக்கு சேவை செய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்புக்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்தும் அறிக்கையில் பேசியுள்ள தர்மேந்திர பிரதான், “முதல் நாளில் இருந்தே நான் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டேன், இந்தச் சூழ்நிலையில் இருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை. தேர்வு மாஃபியாவால் எந்தவொரு திறமையான மாணவரின் எதிர்காலமும் பாழாக விடமாட்டோம், எந்தவொரு மாணவருக்கும் அநீதி நடக்க விடமாட்டோம் என்பதே எனது தீர்மானமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், ANI
“இந்த நேரத்திலும்கூட, பொறுப்பான பதவிகளில் இருந்தவர்கள் பல மாணவர்களைத் தவறாக வழிநடத்த, தடைகளை உருவாக்க முயன்றனர், இது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக” குறிப்பிட்டுள்ள அவர், “ஜந்தர் மந்தரிலும் நாட்டிலும் ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது, நாட்டின் ஒற்றுமை பேணப்பட வேண்டும், இந்தியாவில் ஒரு மாணவரின் எதிர்காலம்கூட சட்டச் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளக் கூடாது, நமது பிள்ளைகள் தங்கள் நேரத்தைப் படிப்பில் செலவிட வேண்டும், ஒரு தொழிலை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும், இதையெல்லாம் மனதில் கொண்டு, நான் எனது ராஜிநாமாவை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
‘கரப்பான் பூச்சிகளுடன் வம்பு வைத்துக் கொள்ளாதீர்’
தர்மேந்திர பிரதான் பதவி விலகியது குறித்து காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனத் தலைவரான அபிஜித் தீப்கே கூறுகையில், “பயப்படத் தேவையில்லை. இது ஜனநாயகம். அவர் பதவி விலகிவிட்டார், ஆனால் எங்களுக்கு இன்னும் இரண்டு கோரிக்கைகள் உள்ளன. நாங்கள் சும்மா போய்விட மாட்டோம். தர்மேந்திர பிரதான் பதவி விலகிவிட்டார்; ஆனால், தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.”
“அவர்களுக்கு அது கிடைக்க வேண்டும்; அந்த அனைத்துக் குடும்பங்களுக்கும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வேண்டும். இரண்டாவது, 20-ஆம் தேதி அராஜகமாக நடந்துகொண்ட அந்தப் போலீஸ் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், கரப்பான் பூச்சிகளுடன் வம்பு வைத்துக் கொள்ளாதீர்கள்…” என்று கூறினார்.

மத்திய அரசுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து, சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் கூறுகையில், “…அவர்கள் எங்களை அழைக்கும்போது நாங்கள் செல்வோம். சரியான நேரத்தை அவர்களே தெரிவிப்பார்கள்,” என்று கூறினார்.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து எக்ஸ் பக்கத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ள சோனம் வாங்சுக், “இது ஜனநாயகத்தின் வெற்றி, நேரடியான ஜனநாயகம், நேரடியாக வீதிகளில் இருந்து உருவானது. இது அமைதி, பொறுமை, விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி. சிஜேபி மற்றும் நாட்டின் ஜென்ஸி தலைமுறையிருக்கு வாழ்த்துகள். அத்துடன், அச்சத்தை உதறித் தள்ளிவிட்டு, நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இதில் உடன் நின்ற மக்கள் அனைவருக்கும் நன்றி. இப்போது பொறுப்புக் கூறலில் இருந்து சீர்திருத்தங்களை நோக்கி நகர்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு இருந்த அரசியல் அழுத்தம்
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தால் மட்டுமின்றி, நாட்டின் பல பகுதிகளிலும் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி இளைஞர்கள் வீதிகளில் இறங்கிப் போராடியதால் மத்திய அரசுக்குக் கடும் அழுத்தம் ஏற்பட்டது.
இதுமட்டுமின்றி, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள எதிர்க்கட்சிகளும் கல்வி அமைச்சரின் பதவி விலகல் விவகாரத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன.
பட மூலாதாரம், Getty Images
சனிக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மெட்ரோ ரயில் சேவை, கடைகள், இணையம், சாலைப் போக்குவரத்து, உணவு விநியோகம் ஆகியவற்றை முடக்கிய மோதியால், தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க முடியவில்லை என்று குறிப்பிட்டார்.
ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் மீது அரசு கொடூரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ராகுல் காந்தி சனிக்கிழமை காலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
“மெட்ரோவை முடக்கினார்கள். சாலைகளை முடக்கினார்கள். கடைகளை முடக்கினார்கள். இணையத்தை முடக்கினார்கள். உணவைத் தடுத்தார்கள். தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய மாணவர்கள் மீது அரசு இத்தகைய கொடூரமான நடவடிக்கைகளை எடுத்தது,” என்று அவர் எழுதினார்.
மேலும், “மோதியால் தடுக்க முடியாத ஒரே விஷயம் – வினாத்தாள் கசிவுதான்,” என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
சனிக்கிழமையன்றும், அடுத்த உத்தரவு வரும் வரை டெல்லியில் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், போராட்டக்களம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக சிஜேபி அமைப்பும் அதன் ஆதரவாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
நிலைமை தீவிரமடைந்தது எப்படி?
ஜந்தர் மந்தரில் சிஜேபி அமைப்பினர் நடத்தி வந்த போராட்டம் கடந்த வாரம் ஜூலை 18 அன்று ஒரு முக்கிய திருப்பத்தை எட்டியது. அன்று, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக்கை டெல்லி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உண்மையில், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நாளான ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப் போவதாக சோனம் வாங்சுக் மற்றுகம் சிஜேபி அமைப்பினர் அறிவித்திருந்தனர். ஆனால், அது நடப்பதற்கு முன்பாகவே சோனம் வாங்சுக் அங்கிருந்து அகற்றப்பட்டார்.
இதன் பிறகு, ஜந்தர் மந்தரில் கூடியிருந்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஜூலை 20 அன்று, சோனம் வாங்சுக் இல்லாமலேயே அவர்கள் ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தனர்.
காவல்துறை நடவடிக்கையின்போது, பாதுகாப்புப் படையினர் பல இளைஞர்களைத் தாக்கினர். இந்தத் தாக்குதல்கள் குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்ட நிலையில், இது ஒரு முக்கிய அரசியல் விவகாரமாக மாறியது.
தற்போது, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நீக்குவது மட்டுமின்றி, இளைஞர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அழுத்தமும் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பல எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணைந்து பிரதமரின் இல்லத்திற்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது ஒரு முக்கிய அரசியல் விவகாரமாக உருவெடுத்தது.
பட மூலாதாரம், AFP via Getty Images
இது ஏன் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது?
கடந்த 2014இல் ஆட்சிக்கு வந்தது முதல், எதிர்ப்புக் குரல்களை பிரதமர் மோதி தலைமையிலான அரசு அரிதாகவே சகித்துக் கொண்டதுடன், போராட்டங்களை வழக்கமாகக் கடுமையாக ஒடுக்கியும் வந்துள்ளது.
இதற்கு முன்பும் அது சவால்களைச் சந்தித்துள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் சுமார் ஓர் ஆண்டாகப் போராடிய பிறகு, சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்தபோதுதான் அது பின்வாங்கியது.
இந்த முறை, போராட்டக்காரர்களின் கோபத்தையும், அவர்களின் மன உறுதியையும் அரசு தெளிவாகக் குறைத்து மதிப்பிட்டுவிட்டது.
வாரக்கணக்கில் அவர்களைப் புறக்கணித்த பிறகு, நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி செல்ல முயன்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய கொடூரமான அடக்குமுறை, பொது மக்களிடையே பெரும் கோபத்தைத் தூண்டியதால், இந்த வாரம் அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு அரசு தள்ளப்பட்டது.
ஆனால், அரசின் மூத்த அமைச்சரான தர்மேந்திர பிரதான் உண்மையில் ராஜிநாமா செய்வாரா இல்லையா என்பது இன்று அறிவிப்பு வரும் வரை தெளிவாகத் தெரியாமல் இருந்தது. இதை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கின்றனர்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
