ஐபிஎல் 2026 தொடரில் ப்ளேஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. இந்தச் சோகம் ஒருபுறம் இருக்க, அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சமூக வலைதளத்தில் செய்ததாகக் கூறப்படும் ஒரு செயல், இப்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. காயம் காரணமாக கடைசி இரண்டு போட்டிகளில் ஆடாத நிலையில், ஹர்திக் மீதான விமர்சனங்கள் மேலும் வலுத்துள்ளன.
சர்ச்சையைக் கிளப்பிய “Unfollow’ நாடகம்!
கடந்த ஞாயிற்றுக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு, கேப்டன் ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தை ‘அன்ஃபாலோ’ (Unfollow) செய்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் காட்டுத்தீயாகப் பரவின.
பின்னர், மீண்டும் அவர் ‘ஃபாலோ’ (Follow) செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை என்றாலும், கடந்த சில நாட்களாக ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். தனது அதிருப்தியை வெளிக்காட்ட ஹர்திக் தேர்ந்தெடுத்த வழி இதுதானா என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“இது மாபெரும் அவமரியாதை!” – கொந்தளித்த முன்னாள் கேப்டன்கள்
‘ஸ்டிக் டு கிரிக்கெட்’ என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்களான மைக்கேல் வான் மற்றும் அலஸ்டர் குக், ஹர்திக் பாண்டியாவின் இந்தச் செயலைக் கடுமையாகச் சாடியுள்ளனர். ஹர்திக்கின் இந்த “நாடகம்” அணிக்குச் செய்யும் அப்பட்டமான அவமரியாதை என இருவரும் ஒரே குரலில் கூறியுள்ளனர். இது குறித்துப் பேசிய குக், “இந்த நவீன உலகில், ஒருவரை அன்ஃபாலோ செய்வது என்பது மிகப் பெரிய அவமதிப்பு, இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மைக்கேல் வான், “இது மிகவும் கீழ்த்தரமான செயல்” என்று குறிப்பிட்டார்.