பட மூலாதாரம், Getty Images
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
{2026-ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் குறித்த கட்டுரைகளை பிபிசி தமிழ் வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.)
தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த சில ஆண்டுகளில் மாநிலக் கட்சியின் தலைவர் என்ற அடையாளத்தைத் தாண்டி, இந்தியா முழுவதும் கவனிக்கத்தக்க ஒரு தலைவராக மாறிவருகிறார்.
2016-ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் தி.மு.க. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டது. இதற்கு சில மாதங்களுக்குப் பிறகு, கட்சியின் தலைவரான மு. கருணாநிதி உடல்நலக் குறைவால் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட, கட்சியின் பொறுப்பு அவரது மகன் மு.க. ஸ்டாலினின் வசம் வந்தது. கட்சியின் செயல் தலைவராகப் பதவியேற்ற மு.க. ஸ்டாலின், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து இயங்க ஆரம்பித்தார்.
2016க்கும் 2019க்கும் இடைப்பட்ட அந்த மூன்றாண்டு காலத்தில் அவர் விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவற்றில் பல விமர்சனங்கள் தனிப்பட்ட வகையில் இருந்தன. தலைவர்களை விமர்சிக்க அவர்களுக்கு பட்டப்பெயர் சூட்டி, கேலிப் பொருளாக்கும் அகில இந்தியப் போக்கிற்கு மு.க. ஸ்டாலினும் தப்பவில்லை.
ஆனால், 2019ஆம் ஆண்டின் தேர்தல் முடிவுகள் வந்தபோது, அவரைப் பற்றிய பார்வை அரசியல் களத்தில் மாறத் துவங்கியது. உடனடியாகவே, 2021-ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அடுத்த பயணத்தைத் துவங்கினார் மு.க. ஸ்டாலின். இப்போது அவர் முதலமைச்சராக பதவியேற்று ஐந்தாண்டுகள் நிறைவடையவிருக்கின்றன.
இந்தத் தருணத்தில் இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் உருவெடுத்திருக்கிறார் மு.க. ஸ்டாலின். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான மு. கருணாநிதியின் மகனாக இருந்தாலும், அவர் இந்த இடத்தை வந்தடைய கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு ஆகியிருக்கிறது.
1953ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி மு. கருணாநிதிக்கும் அவரது இரண்டாவது மனைவி தயாளு அம்மாளுக்கும் பிறந்தார் மு.க. ஸ்டாலின். மு.க. முத்து, மு.க. அழகிரிக்கு அடுத்தபடியாக மு. கருணாநிதியின் மூன்றாவது குழந்தை இவர்.
பட மூலாதாரம், Getty Images
ஸ்டாலினுக்கு விவரம் தெரிய ஆரம்பித்த காலத்திலேயே தந்தை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிலையில், 1960களிலேயே மு.க. ஸ்டாலின் அரசியலில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். அந்த காலகட்டத்தில் பொங்கல் விழாவையும் அண்ணாவின் பிறந்த நாளையும் தி.மு.க. விமரிசையாகக் கொண்டாடிவந்த நிலையில், 1960களின் பிற்பகுதியில் கோபாலபுரத்தில் அப்பகுதி இளைஞர்களைச் சேர்த்துக்கொண்டு, இளைஞர் தி.மு.க. என்ற பெயரில், தலைவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுவதை மையமாகக் கொண்ட அமைப்பு ஒன்றை உருவாக்கினார் ஸ்டாலின்.
இந்த அமைப்பு நடத்திய கூட்டங்களில், மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., நாஞ்சில் மனோகரன், ப.உ. சண்முகம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பேசியிருக்கின்றனர். பிற்காலத்தில் இந்த அமைப்பே தி.மு.க. இளைஞரணியாக உருவெடுத்தது. இதற்குப் பிறகு, சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில், 75வது வட்ட தி.மு.கவின் பகுதி பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டதுதான் மு.க. ஸ்டாலினுக்குக் கட்சியில் கிடைத்த முதல் பதவி.
1968-இல் சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில், 99வது வட்ட தி.மு.க. வேட்பாளர் டி.கே. கபாலி, 109வது வட்ட வேட்பாளர் சடகோபன், 57வது வட்ட வேட்பாளர் ஜேசுதாஸ் ஆகியோருக்காக பிரசாரத்தில் ஈடுபட்டார் ஸ்டாலின். இதற்குப் பிறகு, தி.மு.கவின் மேடைகளில் அதிக எண்ணிக்கையில் பேச ஆரம்பித்தார் அவர். 1971-இல் நடந்த பொதுத் தேர்தலின்போது, முரசே முழங்கு என்ற நாடகத்தை நடத்தி வாக்கு சேகரித்தார் மு.க. ஸ்டாலின்.
1975-இல் மு.க. ஸ்டாலினுக்கு துர்காவதி என்ற சாந்தாவோடு திருமணம் நடைபெற்றது. அடுத்த சில மாதங்களிலேயே இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. 1976-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மு.க. ஸ்டாலின் தனது கோபாலபுரம் வீட்டில் கைதுசெய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது கடுமையாகத் தாக்கப்பட்டதாக நெருக்கடி கால அனுபவங்களை பல்வேறு தருணங்களில் அவர் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். ஓராண்டு சிறைவாசத்திற்குப் பிறகு, 1977 ஜனவரி மாதம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஸ்டாலின்.
இதற்குப் பிந்தைய தசாப்தம் தி.மு.கவுக்கு சவால் மிகுந்த ஒன்றாக இருந்தது. மாநிலத்தில் தொடர்ந்து எதிர்க்கட்சியாக இருந்தாக வேண்டிய, நிச்சயமற்ற இந்த காலகட்டத்தில் கட்சிக்குள் மெல்லமெல்ல வேரூன்ற ஆரம்பித்திருந்தார் மு.க. ஸ்டாலின். நெருக்கடி நிலையின்போது அவருக்குக் கிடைத்த சிறைவாசம் தனியான ஒரு அடையாளத்தைத் தந்திருந்தது. 1980 ஜூன் 20ஆம் தேதி தி.மு.கவின் துணை அணிகளில் ஒன்றாக இளைஞரணி துவங்கப்பட, மு.க. ஸ்டாலின் அதன் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இளைஞரணி துவங்கப்பட்ட காலகட்டத்தில் தி.மு.கவின் துணை அமைப்புகளில் அதன் தொழிலாளர் அமைப்பான தொ.மு.ச.வே மிக வலுவான அணியாக இருந்தது. ஆனால், விரைவிலேயே, தொ.மு.சவை பின்னுக்குத் தள்ளி வலுவான துணை அணியாக உருவெடுத்தது இளைஞரணி. மாவட்டம் தோறும் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் என கட்சிக்கு இணையான பதவிகளோடு வளர ஆரம்பித்தது.
பட மூலாதாரம், Getty Images
1984-இல் நடந்த சட்டமன்றத் தேர்தல் மூலம் முதன்முதலாக தேர்தல் அரசியலில் கால்பதித்தார் மு.க. ஸ்டாலின். மு. கருணாநிதியின் மகன் என்பதால் இந்த வாய்ப்பு எளிதில் அவருக்குக் கிடைத்துவிடவில்லை என கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் மறைந்த அரசியல் விமர்சகரான சோலை.
“அவர்தான் தங்கள் வேட்பாளர் என்று சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி கழகத்தினர் ஏகமனதாக முடிவுசெய்தனர். அதனை ஆயிரம் விளக்கு உசேன் தலைமையில் சென்று மு. கருணாநிதியிடம் தெரிவித்தனர். ஆனால், அவன் (மு.க. ஸ்டாலின்) வேட்பாளரல்ல, உசேன்தான் வேட்பாளர் என்றார் மு. கருணாநிதி” என்கிறார் சோலை. பிறகு, வாய்ப்புக் கிடைத்தாலும் அந்தத் தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை.
அந்த காலகட்டத்தில் ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் ஆகிய திரைப்படங்களிலும் குறிஞ்சி மலர், சூர்யா போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார் மு.க. ஸ்டாலின்.
1989-இல் நடந்த தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட மு.க. ஸ்டாலின் வெற்றிபெற்றார் . 1991-இல் நடந்த தேர்தலில் அதே தொகுதியில் தோல்வி. இந்தத் தருணத்தில்தான், கட்சிக்குள் தனது வாரிசாக மு.க. ஸ்டாலினை மு. கருணாநிதி முன்னிறுத்துவதாக குற்றம்சாட்டினார் வைகோ. இது கட்சிக்குள் மீண்டும் ஒரு பிளவுக்கு வழிவகுத்தது.
1996-இல் நடந்த தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்ற ஸ்டாலின், சென்னை மாநகராட்சியின் மேயர் தேர்தலிலும் வெற்றிபெற்றார். மாநகராட்சியின் மேயராக அந்தத் தருணத்தில் மு.க. ஸ்டாலினின் பணிகள் பரவலான கவனத்தைப் பெற்றன.
‘சிங்காரச் சென்னை’ என்ற முழக்கத்தை முன்வைத்த ஸ்டாலின், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார். அவற்றில், மழைநீர் வடிகால் திட்டத்தைச் செயல்படுத்தியது 65 கோடி ரூபாய் செலவில் சென்னையின் பல்வேறு இடங்களில் 9 மேம்பாலங்களைக் கட்டியது ஆகிய பணிகளை தற்போதும் நினைவுகூர்ந்து பேசுகிறார் ஸ்டாலின்.
2001-ஆம் ஆண்டுத் தேர்தலிலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மு.க. ஸ்டாலின், மீண்டும் சென்னையின் மேயராகவும் வெற்றிபெற்றார். ஆனால், ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டதால், தனது மேயர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்தார்.
2006-இல் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலின் செய்த பணிகளில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், அண்ணா கிராமப்புற மறுமலர்ச்சித் திட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
பட மூலாதாரம், Getty Images
அடுத்த கட்டமாக கட்சியில் பொருளாளராக நியமிக்கப்பட்ட மு.க. ஸ்டாலின், 2009-இல் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டார்.
2006 – 2011ஆம் ஆண்டு காலகட்டத்தில், தமிழக அரசில் அமைச்சராகவும் பிறகு துணை முதல்வராகவும் மு.க. ஸ்டாலின் மேலே வந்துகொண்டிருந்தாலும், கட்சிக்குள் அவருக்கு சவால்கள் நீடிக்கவே செய்தன. இந்தக் காலகட்டத்தில் அவரது மூத்த சகோதரரான மு.க. அழகிரியும் தி.மு.கவில் தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்தார். கட்சிக்குள் தென் மண்டல அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், மத்திய அமைச்சராகவும் பதவியேற்றார்.
ஆனால், மு. கருணாநிதி மு.க ஸ்டாலின் மீதே நம்பிக்கை வைத்திருந்தார் என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயமாகவே இருந்தது. 2014-இன் துவக்கத்தில், இது தொடர்பாக மு.க. அழகிரி தன்னிடம் மிக மோசமாக நடந்துகொண்டதாக மு. கருணாநிதியே சொல்லுமளவுக்கு இந்தப் பூசல் சென்றது. தொடர்ச்சியாக, மு. கருணாநிதி ஸ்டாலின் பக்கம் உறுதியாக நின்றுவிட, கட்சியைவிட்டே மு.க. அழகிரி வெளியேற வேண்டியிருந்தது.

2011-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்த பிறகு, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் என தொடர் தோல்விகளையே கட்சி எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2016-இல் மு. கருணாநிதிக்கு உடல்நலம் குன்ற, கட்சியின் செயல் தலைவராகப் பொறுப்பேற்றார் மு.க. ஸ்டாலின்.
இந்தப் பின்னணியில், மு. கருணாநிதி 2018-இல் மறைந்தபோது பெரிய சலசலப்புகளின்றி கட்சி அவருக்குக் கீழ் வந்தது. “பல தசாப்தங்களின் அனுபவம் இருப்பதால் கட்சியையும் சரி, ஆட்சியும் சரி சிறப்பாக புரிந்துகொள்கிறார். தி.மு.க. என்பது ஒரு நபர் கட்சி அல்ல. தலைமையில் ஒருவர் இருந்தாலும், ஒவ்வொரு பொறுப்புக்கும் ஒருவர் உண்டு. அதனைப் புரிந்துவைத்து கட்சியை நடத்திச் செல்கிறார். நடுவில் தொய்வடைந்திருந்த கட்சிக் கட்டமைப்பை மிகச் சிறப்பாக வலுப்படுத்தியிருக்கிறார்.” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான என். ராம்.
1970களிலும் 80களிலும் மு.க. ஸ்டாலினின் தனிப்பட்ட செயல்பாடுகள் குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவரது அரசியல் பயணம் நெடுக, அவரது தந்தையின் நிழல் தொடர்ந்து படிந்திருந்தது. இதனால், அவருடைய செயல்பாடுகள் தந்தையுடன் தொடர்ந்து ஒப்பிடப்பட்டே வந்துள்ளன.
பட மூலாதாரம், Getty Images
“2021-இல் அவர் ஆட்சிக்கு வந்தபோது, ஆட்சியை எப்படி நடத்துவார், அதற்கான பக்குவம் அவருக்கு இருக்கிறதா என்ற ஐயம் பலருக்கும் இருந்தது. அவருக்கு வாக்களித்தவர்களுக்கே இருந்தது. ஆனால், அந்த அச்சங்களைப் போக்கும் வகையில் அவர் செயல்பாடுகள் இருந்தன. தவிர, தொல்லியல், நூலகம், புத்தக வெளியீடு என ஒரு பண்பாட்டுக் கொள்கை என்பது இந்த அரசுக்கு இருந்தது. அதேபோல, எழுத்தாளர்களுக்கும் அறிவுஜீவுகளுக்கும் அங்கீகாரம் வழங்குவதைத் துவங்கிவைத்தார். இது ஒரு எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தியது. அவரது இந்தப் போக்கு, இந்த அரசை விமர்சனம் இல்லாமல் ஆதரிக்கும் நிலைக்கு அறிவுஜீவிகளை தள்ளியதையும் சுட்டிக்காட்ட வேண்டும்,” என்கிறார் வரலாற்றாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி.
2021-இல் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து, நான் முதல்வன், காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்களை அவர் செயல்படுத்தியிருந்தாலும், இந்த ஆட்சி மீது கடும் விமர்சனங்கள் இருக்கவே செய்கின்றன. இது அதிகாரிகளின் ஆட்சி என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
“அதிகாரிகளையும் அவர்களது அனுபவத்தையும் மதிக்கிறார். அதிகாரிகளின் விருப்பப்படி அவர் ஆட்சி செய்வதாக சிலர் இதனை விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், அவருக்கு என ஒரு தெளிவான அரசியல் சட்டகம் இருக்கிறது. அந்தச் சட்டகத்திற்கு உட்பட்டு அதிகாரிகள் சொல்லும் அறிவுரையை கேட்கிறார். அவர்கள் சொல்வதையெல்லாம் ஏற்பதில்லை. அது ஒரு நல்ல பண்பு.” என்கிறார் என். ராம்.
சமீபத்திய ஆண்டுகளில் தேசிய அளவிலான பிரச்னைகளில் அவரது குரல் கவனிக்கப்படக்கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை, ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு போன்ற விவகாரங்களில், தமிழ்நாட்டின் குரலாக மட்டுமல்லாமல் பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்த அடிப்படையிலான செயல்திட்டங்களுக்கு எதிரான தேசிய அளவிலான முக்கியக் குரலாகவும் அவர் ஒலித்தார்.

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு
பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றது, பிஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்றது ஆகியவற்றின் மூலம் தி.மு.கவின் குரலை மாநில எல்லைகளைக் கடந்து எடுத்துச் சென்றார். அதற்குக் காரணம், அவர் தனது போராட்டக் களங்களைத் தேர்வுசெய்து களத்தில் இறங்குவதுதான் என்கிறார் என். ராம். “எந்த விஷயங்களில் போராட வேண்டும் என்ற தெளிவும் அவரிடம் உண்டு. நிதிப் பகிர்வு, நீட் விவகாரம், ஆளுநர் என அவர் தனது போர்க்களங்களைத் தேர்வுசெய்தே களத்தில் இறங்குவார்” என்கிறார் அவர்.
2021ஆம் ஆண்டின் தேர்தல் தி.மு.கவின் எதிர்காலத்தையும் மு.க. ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் ஒரு தேர்தலாக இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால், 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு, தி.மு.க. தொடர்ச்சியாக ஆட்சியமைக்கும் சாதனையைப் படைத்தவராக மு.க. ஸ்டாலினின் பெயர் வரலாற்றில் இடம்பெறும்.
(2010-ஆம் ஆண்டு அப்போதைய திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் எழுதிய கட்டுரையில் இருந்து ஸ்டாலினின் ஆரம்ப கால அரசியல் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு