பட மூலாதாரம், Anadolu via Getty Images
இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக முன்வந்துள்ளது.
இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் நடைபெறக்கூடும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை அன்று ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் தெரிவித்ததை அடுத்து, இந்தப் பேச்சுவார்த்தை குறித்த செய்திகள் பரவத் தொடங்கின.
இரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தும் முடிவு ‘ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்’ அவர் தெரிவித்தார்.
இரான் இந்தப் பேச்சுவார்த்தைகளை மறுத்த போதிலும், விரைவில் பாகிஸ்தான் மூலமாக இந்நாடுகளுக்கு மத்தியஸ்தம் செய்யப்படுவதாக அறிக்கைகள் வெளியாகின.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை மாலை தனது எக்ஸ் பதிவில் இதுகுறித்துப் பதிவிட்டார்.
“மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை மூலம் மேற்கொள்ளப்படும் தற்போதைய முயற்சிகளுக்கு பாகிஸ்தான் முழு ஆதரவை வழங்குகிறது” என்று அப்பதிவில் கூறியிருந்தார்.
மேலும், “அமெரிக்காவும் இரானும் ஒப்புக்கொண்டால், இந்த மோதலைத் தீர்ப்பதற்கான அர்த்தமுள்ள மற்றும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது” என்றும் குறிப்பிட்டார்.
ஷாபாஸ் ஷெரீப்பின் இந்த அறிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் கீழ் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவும் தயாராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மறுபுறம், இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான சாத்தியமான பேச்சுவார்த்தைகள் குறித்து இரானிய தூதரக அதிகாரி ஒருவர் பிபிசி நியூஸ் உருதுவிடம் கூறுகையில், இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஓரளவுக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
“இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டால், மற்ற இடங்களுடன் பாகிஸ்தானும் இப்பேச்சுவார்த்தையை நடத்தும் இடமாக இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானின் இந்த அதிகாரப்பூர்வ முன்மொழிவு பல கேள்விகளை எழுப்புகிறது. இரானும் அமெரிக்காவும் பாகிஸ்தானை ஒரு மத்தியஸ்தராக ஏற்குமா? இந்த முயற்சி ஒரு ஒப்பந்தத்தில் முடிந்தால், பாகிஸ்தான் அதற்கு உத்தரவாதம் அளிக்குமா?
இந்த முயற்சிகளால் பாகிஸ்தானுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்பது மிக முக்கியமான கேள்வியாக உள்ளது.
பாகிஸ்தானின் முயற்சிகள்
கடந்த 48 மணிநேரத்தில், பாகிஸ்தான் தலைவர்கள் இரான் மற்றும் அமெரிக்க அதிபர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
அதிபர் டிரம்ப் மற்றும் பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் இடையே உரையாடல் நடந்ததை வெள்ளை மாளிகை பிபிசி நியூஸ் உருதுவிடம் உறுதிப்படுத்தியது.
இருப்பினும், மேலதிக விவரங்கள் எதுவும் பகிரப்படவில்லை.
மறுபுறம், பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பும் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் தொலைபேசியில் பேசி, “பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கை மூலம்” பதற்றங்களைக் குறைப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளுடனும் பாகிஸ்தான் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதால், அது ஒரு ‘வலிமையான மத்தியஸ்தராக’ திகழ்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தானின் குவைத்-இ-ஆசம் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் முகமது ஷோயப் பிபிசி உருதுவிடம் கூறுகையில், “தலைமை மட்டத்தில் அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளுடனும் பாகிஸ்தான் தனிப்பட்ட உறவுகளைக் கொண்டுள்ளது. அதன் நடுநிலைமை, அமைதிக்கான முயற்சிகள் மற்றும் அதன் மீது இரு நாடுகளும் வைத்துள்ள நம்பிக்கை ஆகியவை அதற்கு மத்தியஸ்தர் பாத்திரத்தை வகிக்க வாய்ப்பளிக்கிறது” என்றார்.
இரானுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஆசிப் துரானியும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறார். இரானும் அமெரிக்காவும் பாகிஸ்தானை நம்புவதாக அவர் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தப் பிராந்தியத்தில் இரானுடன் சிறந்த உறவைக் கொண்டுள்ள வேறு நாடு எது? வளைகுடா நாடுகளுடனான இரானின் உறவு கசப்பானதாக உள்ளது, துருக்கியுடனான அதன் உறவும் சீராக இல்லை. இத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தான் மட்டுமே ஒரு சிறந்த மத்தியஸ்தராக மாற முடியும்” என்றார்.
மேலும், இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்காவும் பாகிஸ்தானையே நம்பியிருக்கும் என்று ஆசிப் துரானி கூறுகிறார்.
இரான் மீதான தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மோதி இஸ்ரேலில் இருந்ததால், இந்தப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவால் ஒரு நடுநிலையான மத்தியஸ்தராகச் செயல்பட முடியாது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பாகிஸ்தானால் உத்தரவாதம் அளிக்க முடியுமா?
பட மூலாதாரம், AFP via Getty Images
அமெரிக்கா மீதான தனது அவநம்பிக்கையை இரானின் அறிக்கைகள் தெளிவாக உணர்த்துகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் இரானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன, ஆனால் இரண்டு முறையும் இரான் மீதான தாக்குதல்கள் காரணமாக பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டன.
இத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தானால் இந்த உரையாடலை ஏதேனும் ஒரு இறுதி முடிவுக்குக் கொண்டு செல்ல முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
பேராசிரியர் முகமது ஷோயப் கூறுகையில், “பாகிஸ்தான் இந்தச் செயல்முறைக்கோ அல்லது எந்தவொரு ஒப்பந்தத்துக்கோ உத்தரவாதம் அளிக்காது, ஆனால் ஒரு மத்தியஸ்தராக இரு தரப்பினருக்கும் இடையிலான தொடர்பை அதிகரித்து, இரு நாடுகளும் தங்கள் வாக்குறுதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்யும். அதாவது, ஏதேனும் விதிமீறல் ஏற்பட்டாலும் அது ஒரு மத்தியஸ்தராகத் தனது பங்கினைத் தொடர்ந்து ஆற்றும்” என்றார்.
பாகிஸ்தானின் முன்னாள் தூதரான ஆசிப் துரானியும், பாகிஸ்தானால் எதற்கும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றே நம்புகிறார், மாறாக இரான் மற்றும் அமெரிக்கா தங்களுக்கு இடையிலான மோதலைத் தனது மண்ணில் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள அது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
துரானி கூறுகையில், “தற்போது இந்த விவகாரங்கள் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகத் தெரிகிறது. பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில், மத்தியஸ்தம் செய்யும் நாட்டின் அதிகார வரம்பு என்னவாக இருக்கும் என்பது தீர்மானிக்கப்படும்,” என்றார்.
பாகிஸ்தானுக்கு என்ன கிடைக்கும்?
பட மூலாதாரம், Getty Images
ஒரு மத்தியஸ்தராகப் பாகிஸ்தான் எதை அடைய விரும்புகிறது என்ற கேள்வியும் எழுகிறது.
அண்டை நாடாக இருப்பதால், இரானில் நடக்கும் போர் பாகிஸ்தானையும் பாதிப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பதற்றம் குறைவது அதற்குப் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான நிம்மதியை அளிக்கும்.
பேராசிரியர் முகமது ஷோயப் கூறுகையில், “பதற்றம் குறைவது பாகிஸ்தானுக்குப் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நன்மைகளைத் தரும். நிலைத்தன்மை ஏற்பட்டால் வர்த்தகத்தின் மீதான அழுத்தம் குறையும், குறிப்பாக எரிபொருள் மற்றும் எண்ணெய் சந்தையில் சாதகமான சூழல் உருவாகும்,” என்றார்.
பாகிஸ்தான் வளைகுடா நாடுகளுடன் நல்லுறவைக் கொண்டுள்ளதுடன், சவுதி அரேபியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் கொண்டுள்ளது.
இருப்பினும், இந்தப் போர் தொடங்கியதிலிருந்து, இரான் பல வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் முகமது ஷோயப் கூறுகையில், பதற்றம் குறையும் பட்சத்தில், “பாகிஸ்தான் அதிகபட்ச அந்நிய செலாவணியைப் (வெளிநாட்டுப் பணம்) பெறும் வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்தின் மீதான அழுத்தமும் குறையும்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், பிராந்தியத்தில் நிலைத்தன்மை ஏற்பட்ட பிறகு, பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தான் விவகாரத்திலும், அதன் வடமேற்குப் பகுதிகளில் நிலவும் அமைதியின்மை ஆகியவற்றில் கவனம் செலுத்த முடியும் என்றார்.
மறுபுறம், எந்தவொரு லாபத்திற்காகவும் அமெரிக்கா மற்றும் இரான் இடையே மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வரவில்லை என்று முன்னாள் தூதர் ஆசிப் துரானி கூறுகிறார்.
“இரான் ஓர் அண்டை நாடு, அங்கு நடக்கும் போர் பாகிஸ்தானையும் பாதிக்கிறது. எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளதுடன் பொருளாதாரப் பிரச்னைகளும் எழுந்துள்ளன.”
இந்த மோதல் தொடங்கிய பிறகு, இரான் ஹோர்மூஸ் நீரிணையை மூடியிருந்தது குறிப்பிடத்தக்கது, அங்கிருந்துதான் உலகம் முழுவதற்கும் தேவையான எண்ணெயின் பெரும் பகுதி விநியோகிக்கப்படுகிறது.
இதில் உள்ள அபாயங்கள் என்னென்ன?
பட மூலாதாரம், X@ethrelkeld
முன்னாள் அமெரிக்க தூதரும் மற்றும் ஸ்டிம்சன் மையத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான இயக்குநருமான எலிசபெத் ட்ரெல்கால்ட், அமெரிக்கா மற்றும் இரான் உள்ளிட்ட மத்திய கிழக்கின் முக்கியமான நாடுகளுடன் உறவுகளைக் கொண்டுள்ள சில நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்று நம்புகிறார்.
“டிரம்ப் நிர்வாகத்தின் போது, இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதில் பாகிஸ்தான் அமைதியாக ஒரு பங்கினை ஆற்றியது, இதன் காரணமாக அது இரு தரப்பினரின் நம்பிக்கையையும் பெற்றது”என்பது அவரது கருத்து.
ஆனால் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்படும் பட்சத்தில் பாகிஸ்தான் அதற்கு உத்தரவாதம் அளிக்குமா?
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த எலிசபெத், “சாத்தியமான பேச்சுவார்த்தைகளின் முடிவைப் பற்றி நாம் அதிகம் தெரிந்துகொள்ளும் வரை, எந்த வகையான ஒப்பந்தத்தைப் பற்றியும் ஏதாவது கூறுவது மிக முன்கூட்டிய ஒன்றாகும்” என்கிறார்.
இருப்பினும், பாகிஸ்தான் இரு தரப்பினருடனும் தனது மையப் பாத்திரத்தைத் தக்கவைக்க முயற்சிக்கும் என்று அவர் கூறுகிறார்.

அப்படியானால் இந்த முயற்சிகளால் பாகிஸ்தானுக்கு என்ன கிடைக்கும்?
இதுகுறித்து எலிசபெத் கூறுகையில், “பாகிஸ்தான் ஒரு ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்வதில் வெற்றி பெற்றால், அது ஒரு மிகப்பெரிய ராஜ்ஜீய வெற்றியாக இருக்கும். ஒருபுறம், இது அமெரிக்காவுடனான அதன் உறவை மேலும் வலுப்படுத்தும், மறுபுறம், சௌதி அரேபியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் அண்டை நாடான இரானுடனான நெருங்கிய உறவுகள் தற்போதைய சூழ்நிலையைச் சமாளிக்க அதற்கு உதவும். கூடுதலாக, ஹோர்மூஸ் நீரிணை வழியாக பொருட்கள் மற்றும் எரிசக்தி தடையின்றி கிடைப்பதன் மூலம் பாகிஸ்தான் பயனடையும்” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு