பட மூலாதாரம், ANI
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்தின்போது தன்னை அவதூறாகப் பேசிய குழந்தைகளை மன்னிப்பதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்த காணொளியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் காணொளியில் “சில குறும்புக்கார குழந்தைகள் என்னையும் எனது தாயையும் அவதூறாகப் பேசினார்கள். குழந்தைப் பருவம் என்பது தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பும்கூட. இவர்கள் தவறாக வழிநடத்தப்பட்ட குழந்தைகள், இவர்களுக்கு சரியான பாதையைக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன்.” என்று அவர் தெரிவித்தார்.
அதே காணொளியில், பெண்கள் அவதூறான மொழியைப் பயன்படுத்துவது ‘கலாசார அதிர்ச்சி’ என்று தெரிவித்த மோதி “நம்முடைய மகள்கள் எவ்வாறு அத்தகைய மொழியைப் பயன்படுத்தலாம்?” என்றும் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
மன்னிப்பு பற்றி பிரதமர் மோதி பேசியது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
மறுபுறம் பல காங்கிரஸ் தலைவர்கள், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், எதிர்க்கட்சி எம்.பிக்கள் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த பலரும் மோதியின் மன்னிப்பு பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அதே வேளையில் ஆளுங்கட்சியுடன் தொடர்புடைய தலைவர்கள் பலரும் பிரதமர் மோதியைப் புகழ்ந்துள்ளனர்.
அபிஜித் தீப்கே கூறியது என்ன?
பட மூலாதாரம், ANI
சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே சனிக்கிழமை மாலை வெளியிட்ட காணொளியில், “மோதி இன்று இரவும்(01-08-2026) ஒரு காணொளி பதிவிடுவார் என நினைக்கிறேன். அதில் ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற கொடூரமான தடியடிக்கும் மன்னிப்பு கேட்பார் என நம்புகிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.
வினாத்தாள் கசிவு வழக்கில் அப்போது மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி அபிஜித் தீப்கே தர்ணா போராட்டத்தை நடத்தியிருந்தார்.
பல்வேறு மாணவர்கள் மற்றும் சோனம் வாங்சுக், நேஹா சிங் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சாகும் வரையிலான அவருடைய உண்ணாவிரதத்தில் இணைந்தனர். எனினும் ஜூலை 18-ஆம் தேதி சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட போது இந்த இயக்கம் மேலும் தீவிரமடைந்தது.
ஜூலை 24-ஆம் தேதி தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாலும் போராட்டத்தின் போது அவதூறான மொழி பயன்படுத்தப்பட்டதாக விவாதம் எழுந்தது.
போராட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட அவதூறான கருத்துகள் தொடர்பில் காவல்துறை நடவடிக்கை என்பது கடந்த வெள்ளிக்கிழமை தீவிரமடைந்தது. மோதிக்கு எதிராக ஆட்சேபனைக்குரியதாக கருதப்படும் கருத்துகளைத் தெரிவித்ததாக ஒரு சிறுமி மீது ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
அந்த எஃப்.ஐ.ஆர் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
எனினும் வெள்ளிக்கிழமை அந்த சிறுமி வெளியிட்ட காணொளியில் தனக்கு 15 வயது எனக் குறிப்பிட்டு மன்னிப்பு கோரினார். அந்தக் காணொளியும் சமூக ஊடகங்களில் வைரலானது. அந்தக் காணொளியின் உண்மைத்தன்மையை பிபிசியால் உறுதி செய்ய முடியவில்லை.
எஃப்.ஐ.ஆர் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அபிஜித் தீப்கே, “பெண்களைப் பல ஆண்டுகளாக தவறாக நடத்திய தகவல் தொழில்நுட்ப பிரிவினரை (ஐ.டி செல்) எதிர்த்தும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுமா?” என்றார்.
முன்னதாக பிரதமருக்கு எதிராக ஆட்சேபனைக்குரியதாகக் கருதப்படும் சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பான வழக்கிலும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல்துறை அந்தப் பதிவுகளை நீக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டது.
மோதியின் காணொளி பற்றி நகைச்சுவையாகப் பதிவிட்ட அபிஜித் தீப்கே, “நண்பரே, நீங்கள் ரீல்ஸில் மட்டும் தான் மன்னிப்பீரா அல்லது வழக்குகளையும் திரும்பப் பெறுவீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோதி கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
காணொளி மூலம் மோதி தெரிவித்த கருத்துகள் சமூக ஊடகங்கள் வைரலாயின.
“ஜந்தர் மந்தரில் என்ன நடந்தது என்பதை நாடும் உலகமுமே பார்த்தது. சில குறும்புக்கார குழந்தைகள் அநாகரிகமான மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தினர். எந்த நாகரிக சமூகத்திற்கும் பொருத்தமில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தினர். நானும் எனது மறைந்த தாயும் தனிப்பட்ட முறையில் அவதூறுக்கு உள்ளாக்கப்பட்டோம்,” என மோதி தெரிவித்தார்.
மேலும் அவர், “குழந்தைப் பருவத்தில் தவறுகள் செய்யப்படும். தவறுகளைச் சரி செய்வதற்கும் குழந்தைப் பருவம் என்பது ஒரு வாய்ப்பும்கூட. சமூகத்தில் நிலவுக் கோபத்தை என்னால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது. நம்முடைய மகள்கள் எவ்வாறு அத்தகைய மொழியைப் பயன்படுத்தலாம் என்பது கலாசார அதிர்ச்சியாக இருந்தது. அந்தக் குழந்தைகளை மன்னிக்க விரும்புகிறேன்.
அந்தக் குழந்தைகளை அரவணைத்து சரியான பாதையைக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்கள் வழிதவறிவிட்டனர். அவர்களுக்குச் சரியான வழியைக் காட்ட வேண்டியது நம்முடைய பொறுப்பு. அவர்களைத் தண்டித்து, நீதிமன்ற நடைமுறைகளில் ஈடுபடுத்தி சமூகத்தில் அவர்களை துன்புறுத்துவது சூழ்நிலையை மாற்றாது. நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன். சமூகமும் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். என் மனதில் ஒரேயொரு உணர்வே இருக்கிறது.
இவர்கள் நம்முடைய குழந்தைகள். வழிதவறிச் சென்றவர்களுக்கு சரியான பாதையைக் காட்டுவது கடினமானது. ஆனால் அது நாம் செய்ய வேண்டிய ஒரு பணி. நான் இந்தக் குழந்தைகளிடம் கூறுகிறேன், நாட்டுக்காக நாம் முன்னோக்கி நகர்வோம். நாம் புதிதாக சிலவற்றைக் கற்றுக்கொண்டு நமது தவறுகளிலிருந்து கற்றுக் கொள்வோம்.” எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக போராட்டத்தின் போது இன்ஸ்டாகிராமில் காணொளி வெளியிட்ட மோதி, ஜென் ஸி இளைஞர்களை நண்பர்களே’ என விளித்திருந்தார்.
ராகுல் காந்தி கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
“தங்கள் குழந்தைகளை இழக்கும் பெற்றோரின் கண்ணீரையும் அவர்களின் ஓலத்தையும்விட பெரிய துயரம் வேறெதுவும் இல்லை. அந்த வலி எப்போதும் அவர்களுடன் இருக்கும். இது இந்த உடைந்துபோன மற்றும் ஊழல் மலிந்த கல்வி அமைப்பு மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
வினாத்தாள் கசிவு, ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் பல்லாண்டு கால தயாரிப்பை ஒரே கணத்தில் வீணடித்துவிடுகின்றன. அடிப்படையிலே நேர்மையற்ற ஓர் அமைப்பில் நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என நமது மாணவர்களிடம் கூறுகிறோம்.” என்றார்.
“குழந்தையை இழந்த துயருற்ற குடும்பத்தினர் எவரையாவது அல்லது வினாத்தாள் கசிவால் தங்கள் சேமிப்பு, வாழ்க்கை, நேரம் மற்றும் கனவுகளைப் பறி கொடுத்தவர்களை பிரதமர் மோதி சந்தித்திருக்கிறாரா? என்றால் அதற்கான பதில் ‘இல்லை’ என்பதே ஆகும்.” என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
“பிரதமரின் மன்னிப்பு இந்திய மாணவர்களுக்கு தேவையில்லை, மோதி ஜி தான் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மன்னிப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்ன?
பட மூலாதாரம், X/Pawan Khera
பிரதமர் மோதியின் மன்னிப்பு செய்தி தொடர்பாக சமூக ஊடகத்தில் பல எதிர்வினைகள் எழுந்துள்ளன.
மோதியைக் குறிப்பிட்டு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், “மோதி ஜி, நீங்கள் அச்சத்தைப் பரப்பிவிட்டு பின்னர் அனுதாபம் உள்ளவராக காட்டிக் கொள்ள முடியாது. உங்களுடைய இந்துத்துவா படையும் காவல்துறையும் எந்த அளவிற்கு ஒரு 15 வயது பெண்ணை அச்சுறுத்தியிருக்கிறது என்றால், அது அவர் கைகளைக் கட்டிக் கொண்டு தலையைத் தாழ்த்தி காணொளி வெளியிட்டு தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்கும் நிலைக்குச் சென்றுள்ளது.” என்றார்.
அவர் கூறிய விஷயங்களை சிலர் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம் என்று கூறும் அவர், “ஒரு குழந்தையை இதுபோல மன்னிப்பு கேட்க நிர்பந்தித்து பின்னர் அதனைக் கொண்டாடுவது என்ன மாதிரியான சமூகம்? ஜூலை 20-ஆம் தேதி மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டபோது உங்களுடைய அனுதாபம் எங்கே சென்றது.” என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகேத் கோகலே தனது எக்ஸ் பக்கத்தில், “மோதி – அமித்ஷா தங்களது சூழலமைப்பு, காவல்துறை மற்றும் ஊடகத்தைப் பயன்படுத்தி ஒரு 15 வயது சிறுமியை துன்புறுத்தி அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்த வைத்துள்ளனர். அவர் மன்னிப்பு கேட்டு காணொளி வெளியிட்டு தனது வயதைக் கூறியபோது, கோழையான மோதி பதற்றமடைந்து, தான் ‘அவரை மன்னிப்பதாக’ப் பதிவிட்டார்.” என்றார்.
“56 அங்குல மார்பளவு கொண்ட ஒரு பிரதமர் ஏன் ஒரு குழந்தையிடமிருந்து வந்த சில அவதூறான சொற்களால் அச்சுறுத்தலாக உணர்கிறார். ஒரு சிறுமிக்கு எதிராக அரசு இயந்திரத்தை அனுப்புவது என்ன விதமான ஜனநாயகம்? குறிப்பாக, மாணவர்களைக் குறிவைத்ததற்காக அவரே மன்னிப்பு கேட்க வேண்டிய நிலையில் இருக்கும்போது! யாரையாவது ‘மன்னிப்பதற்கு’ மோடி யார்?” எனத் தெரிவித்திருந்தார்.
மூத்த பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர் தனது எக்ஸ் பக்கத்தில், “தரக்குறைவான மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்துவது பற்றி தனது அதிருப்தியையும் வருத்தத்தையும் பிரதமர் மோதி இப்போது வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களை ஒருமுறை திரும்பிப் பார்த்து, தங்களுக்கு உடன்பாடில்லாதவர்களை இனம், சமூகம் மற்றும் சாதி அடிப்படையில் இழிவுபடுத்தும் கருத்துகளால் தாக்குவதை நிறுத்த வேண்டிய நேரம் இது.” எனப் பதிவிட்டுள்ளார்.
யஷாஷ்வினி ராஜே சிங் என்பவர் தனக்கு வருகின்ற வெறுப்பு பேச்சு என்று கருதப்படும் செய்தியின் ஸ்கிரீன்ஷாட்களைப் பதிவிட்ட நிலையில் சுஹாசினி ஹைதர் அதனைப் பகிர்ந்திருந்தார்.
“கடந்த சில மாதங்களாக எனக்கு வருகின்ற செய்திகளின் ஒரு முன்னோட்டம் மட்டுமே இது. பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் என் காதலன், மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் மற்றும் பாலத்தீனம் குறித்த எனது நிலைப்பாடு ஆகியவற்றின் காரணமாக இது நடத்தப்படுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இணையத்தின் மிக மோசமான பகுதிகளிலிருந்து ‘அவதூறான மொழிப் பயன்பாடு’ குறித்து எழுப்பப்படும் கூச்சலும் அமளியும் துளியும் நம்பத்தகுந்ததாகத் தெரியவில்லை,” என்று யஷாஸ்வினி ராஜே சிங் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவித்த மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது எக்ஸ் பதிவில், “இறுதியாக, 75வது வயதில் அவதூறான மொழியைப் பயன்படுத்துவது நல்ல விஷயம் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். தற்போது இதே அறிவுரையை இரவும் பகலும் எங்கள் மீது அவதூறு பரப்பிக் கொண்டிருக்கும் உங்களின் நண்பர்களிடம் கூறுங்கள்.” என்று குறிப்பிட்டார்.
யூடியூபர் துருவ் ராத்தி இதே கருத்தைத் தெரிவித்திருந்த காணொளி ஒன்றையும் அவர் பகிர்ந்திருந்தார்.
மகள்கள் மீது இவ்வளவு முக்கியத்துவம் ஏன்?
பட மூலாதாரம், Getty Images
சுயாதீன பத்திரிகையாளரான ரூஹி திவாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட நீளமான பதிவில், அவதூறான மொழி என்று வருகிறபோது மகள்களை மட்டும் வலியுறுத்திக் கூறுவது பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.
“பொது வாழ்க்கையில் யாருமே அவதூறான மொழியைப் பயன்படுத்தக் கூடாது என்பது இயற்கையானது. ஆனால் மகள்கள் மீது ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? மகள்கள் மட்டுமே அதிக அளவிலான கண்ணியத்தைக் கடைபிடித்து அனைத்து பொறுப்புகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுவது ஏன்?
ஒரு குறிப்பிட்ட விதத்தில் அவர்களின் நடத்தையை ஏன் ‘கலாசார ரீதியானது’ என்று கருத வேண்டும்? நாங்கள் அனைவரும் ஏன் ஒரு மகள் அல்லது சகோதரி என்ற அடையாளத்தின் மூலமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும்? பெண்களுக்கும் உறவுகளுக்கு அப்பாற்பட்ட, தங்களுக்கென ஒரு சுதந்திரமான அடையாளம் இருக்க முடியும்.”
அவர் மேலும் தனது பதிவில், “மதிப்பிற்குரிய பிரதமர் மோதி அவர்களே, துரதிர்ஷ்டவசமாக, ‘பேட்டி பச்சாவ்…’ மற்றும் ‘நாரி சக்தி’ போன்ற பிரசாரங்கள் மூலம் நீங்கள் எதிர்த்துப் போராடுவதாகக் கூறும் அதே ஆணாதிக்க மற்றும் பாலினப் பாகுபாடு கொண்ட மனப்பான்மையையே இந்தச் சிந்தனை பிரதிபலிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் நிகில் வாக்லே தனது எக்ஸ் பக்கத்தில், “மோதி அவர்களே, கடந்த 12 ஆண்டுகளில் நீங்கள் பயன்படுத்திய அவதூறுகளுக்காக தயவுசெய்து மன்னிப்பு கேளுங்கள்!” என்று எழுதியுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, தான் பிரதமரிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புவதாக தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
“ரமேஷ் பிதுரி மற்றும் பிரக்யா தாக்கூர் போன்ற தலைவர்களுக்கு அவர் ஏன் சரியான வழியைக் காட்டவில்லை? முஸ்லிம்கள் அவமதிக்கப்பட்டு குறி வைக்கப்படும் போதோ அல்லது கிறிஸ்தவர்கள் மற்றும் தலித்துகள் மோசமாக நடத்தப்படும் போதோ அவர் ஏன் மௌனம் காக்கிறார்?”
மேலும் அவர், “பாஜக தலைவர்களின் தவறான நடத்தை ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும், அதேசமயம் மற்றவர்களின் தவறான நடத்தை தவறானதாகவும் இருக்க முடியாது. அனைத்து வகையான தவறான நடத்தைகளும் தவறானவையே.
அவற்றை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறுபான்மையினரும் தவறாக நடத்தப்படும் போது, பிரதமரால் இதே கருத்தைச் சொல்ல முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
பிரதமருக்கு ஆதரவாக வரும் பதிவுகள்
பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில் இந்திய முன்னாள் வெளியுறவு செயலாளர் கன்வால் சிபல் பிரதமர் மோதியைப் புகழ்ந்துள்ளார்.
சுஹாசினி ஹைதரின் பதிவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அவர், “பண்பாட்டு ரீதியாகப் புண்படுத்தும் மொழியைப் பயன்படுத்திய இந்தத் தவறான வழியில் சென்ற இளைஞர்கள் மீது வழக்குத் தொடர வேண்டாம் என்று பிரதமர் அறிவித்துள்ளார். அவர் இந்த விவகாரத்தை முடித்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்குச் செல்ல விரும்புகிறார்.
இருப்பினும், மிகவும் அறநெறியற்றவர்களால் மட்டுமே பயன்படுத்தக்கூடிய, மிகவும் புண்படுத்தும் பாலியல் ரீதியான வெளிப்படையான மொழியைப் பயன்படுத்தி, பிரதமரையும் இளம் பெண்களையும் கேமராவின் முன் கொலை செய்வதாக அச்சுறுத்துவதை, வெறும் ‘வெறுப்புப் பேச்சு’ என்று புறக்கணிக்கக் கூடாது.
இத்தகைய அருவருப்பான மொழியை இயல்பான ஒன்றாகக் கருதக்கூடாது. மிகவும் இழிவான இத்தகைய நடத்தையைச் சமூகத்தில் பாவமாகவோ அல்லது அவமானமாகவோ கருதாமல் அதற்கு ஆதரவு தெரிவித்தால், சமூகத்தின் தார்மீகச் சீரழிவுக்கு நாமே காரணமாகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் கட்சியின் தேசியச் செயல் தலைவருமான சஞ்சய் குமார் ஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தன்னையும் மறைந்த தனது தாயாரையும் குறித்து அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய குழந்தைகளிடம் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோதி ஜி காட்டிய எதிர்வினை, வெறுப்பை விட மன்னிப்பின் ஆற்றலையே வெளிப்படுத்துகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், “அவரது செய்தி எளிமையானது என்றாலும் ஆழமானது. இளைஞர்களை அவர்களின் தவறுகளுக்காகப் புறக்கணிக்காமல், சரியான பாதையில் செல்ல அவர்களை வழிநடத்த வேண்டும். நாம் ஒரு ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை’ உருவாக்க விரும்பினால், உள்கட்டமைப்பு மற்றும் நிறுவனங்களில் மட்டுமல்லாமல், நம் இளைஞர்களின் நற்பண்புகளை வளர்ப்பதிலும் முதலீடு செய்ய வேண்டும்.” என்றும் தெரிவித்த்தார்.
பிரதமர் மோதி எப்போதும் முன்னின்று வழிநடத்துபவர் என்று ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியரான ஜக்கா ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது எக்ஸ் பக்கத்தில், ” நாகரிகமான உரையாடலில் அவதூறான சொற்களுக்கோ அல்லது தரக்குறைவான மொழிக்கோ இடமில்லை என்று அவர் கூறுகிறார். பொதுவாழ்வில் பல தசாப்தங்களாக அவர் இத்தகைய அவதூறுகளுக்கு ஆளாகியுள்ளார்.”
“தன்னை அவதூறாகப் பேசிய அனைவரையும் அவர் மன்னித்துவிட்டார். இப்போது எழும் கேள்வி என்னவென்றால், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் (FIR) திரும்பப் பெறப்படுமா? பொதுவாழ்வில் இனி சிறந்த மொழிப் பயன்பாட்டை நாம் காணப் போகிறோமா?” என்று பதிவிட்டுள்ளார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு