முன்னாள் கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளரான லட்சுமண் சிவராமகிருஷ்ணன் தனது 17 வயதிலேயே கிரிக்கெட் உலகில் அறிமுகமானார். மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான சிவராமகிருஷ்ணன் இனவெறிப் பிரச்னையால் பாதிக்கப்பட்டார். அதோடு அவர் போதைப்பொருள் மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்ற செய்தி பரவியதால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதியில் நின்று போனது.
கொரோனாவுக்கு முன்பு கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றினார். ஆனால் கொரோனாவுக்கு பிறகு அதுவும் இல்லாமல் போய்விட்டது. இப்போது கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது பேட்டியில், “‘மக்கள் மோசமானதை பரப்புவதில் மிகவும் ஆர்வமுள்ளவர்கள். நான் 16 முதல் 19 வயதில் கிரிக்கெட் உலகில் பயணம் மேற்கொண்டேன். இந்த வயதில் எப்படி ஹோட்டலில் மது கொடுப்பார்கள். நான் ஒருபோதும் போதைப்பொருள் பயன்படுத்தியது கிடையாது. ஆனால் பின்னாளில் மது எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் 19 வயதில் என்னை மதுவிற்கும், போதைக்கும் அடிமையானவன் என்று செய்தியை பரப்பினர்.
எனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து தெரிவித்து எனக்கு திருமணத்திற்கு பெண் தேட மேட்ரிமோனியல் தளத்தில் எனது பெற்றோர் விளம்பரம் கொடுத்து இருந்தனர். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து அதனை பார்த்தபோது ஒருவர் கூட என்னை திருமணம் செய்ய விருப்பம் தெரிவிக்கவில்லை. மக்கள் எனது நற்பெயரை மிகவும் மோசமாக்கியுள்ளனர், யாரும் தங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்பவில்லை.
1987ம் ஆண்டு உலகக்கோப்பை முடிந்து நாடு திரும்பியபோது தமிழ்நாடு தேர்வுக்குழுவினர், `நீங்களே உடல் தகுதி பெறவில்லை’ என்று மீடியாவில் தெரிவித்துவிடும்படி என்னிடம் கேட்டுக்கொண்டனர்.
`ஆனால் நான் அப்படி கூற முடியாது, வேண்டுமானால் என்னை நீங்கள் அணியில் இருந்து நீக்கிக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டேன். இப்போது மோசமாக இருக்கிறேன். கண்ணாடியில் என்னைப் பார்க்க விரும்பவில்லை. நான் எதையும் தாங்கிக்கொள்ள முடியாமல் மது குடித்துவிட்டு தூங்குவேன். நான் விழித்திருக்கும் போதெல்லாம், நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். தூங்குவதற்காகவே மதுவுக்கு அடிமையாகிவிட்டேன். சில சமயங்களில், தற்கொலை எண்ணங்கள் மனதில் தோன்றின. சில சமயம் துபாயில் பயணிக்கும் போது வேகத்தடை இருக்காது. வாகனம் அதிவேகமாக சென்றால் கதவைத் திறந்து வெளியே குதிக்க வேண்டும் என்று மனதுக்குள் ஏதோ சொல்லும். எப்படியோ ஏதோ ஒன்று முட்டாள்தனமாக எதையும் செய்ய விடாமல் தடுத்தது.
கண்களை மூடும்போது கற்பனை செய்ய முடியாத படங்களைப் பார்க்கிறேன். அவை அனைத்தும் மிகவும் பயமுறுத்துகின்றன. கண்களைத் திறந்தால், எதுவும் இல்லை. ஆனால் மிகவும் சோர்வாக இருக்கிறது”என்று தெரிவித்தார்.