கன்னியாகுமரி: "மானம் உள்ளவர்கள் திமுக-வுக்கு ஓட்டு போடலாமா?" – ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த பொன்னார்!

Share

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் கடத்தல், போதை புழக்கத்தால் இளைஞர்கள் இளம்பெண்கள் வாழ்க்கை சீரழிவை கட்டுப்படுத்த தவறியகாக, தி.மு.க அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் பேசுகையில், “இந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு இரண்டு பாலங்கள் அமைத்து தந்த பெருமை பொன்.ராதாகிருஷ்ணனைச் சேரும்.  அதேபோல நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றிய  பெருமை எடப்பாடியாரை சேரும். குமரி மாவட்டத்தில் பா.ஜ.க, அ.தி.மு.க சாதனைகளை சொன்னால் காலம் போதாது. தி.மு.க ஆட்சி காலத்தில் எந்த திட்டமும் கொண்டு வந்தது கிடையாது. தமிழக முதல்வர் நாகர்கோவில் வந்தபோது தி.மு.க மாவட்டச் செயலாளரை பாராட்டவில்லை. எங்கிருந்தோ வந்த மாவட்ட கலெக்டரை பாராட்டுகிறார் என்றால், அவரின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இன்று காலையில் 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் அனுமதியளித்தனர். ஆனால் கலெக்டர் கோப்புகளை கையில் வைத்துக் கொண்டு 10.30 மணிக்கு பிறகுதான் அனுமதியளித்தார். எனவே, இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட கலெக்டருக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறிவிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. அரசியல்வாதிகள் தவறு செய்தால் மக்கள் தண்டனை கொடுப்பார்கள், ஆட்சி மாற்றம் வரும். அதிகாரிகள் தவறு செய்தால் அவர்களுக்கு தண்டனை இறைவன் கொடுப்பார். உங்களுக்குக் கீழே இருக்கக்கூடிய அத்தனை அதிகாரிகளும் உங்கள் மேல் வெறுப்பிலே இருக்கிறார்கள். அனைத்து வி.ஏ.ஓ-க்களும் இந்த மாவட்ட ஆட்சியர்  மாவட்டத்தை விட்டுச் செல்லமாட்டாரா என்று கதறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் நீங்கள் முதலமைச்சரிடம் சிறப்புப் பரிசு பெற்றதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். கடந்த கால ஆட்சியில் நீங்கள் எங்கு வேலை பார்த்தீர்கள், யாருடைய தயவில் இருந்தீர்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். எந்த அதிகாரியாக இருந்தாலும் நேர்மையான அதிகாரியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம். இங்கே இருக்கக்கூடிய காவல்துறைக் கண்காணிப்பாளர் கட்சி பார்க்காமல், சாதி பார்க்காமல், மதம் பார்க்காமல் வேகமாகச் செயல்படுகிறார். அவருக்கு இணையாக இதுவரை எந்தக் கண்காணிப்பாளரும் இங்கே வந்ததே  கிடையாது. மாவட்ட ஆட்சியரின் லட்சணத்தைப் பாருங்கள். தானாக முந்திக்கொண்டு, இங்குள்ள தி.மு.க மாவட்டச் செயலாளரை ஒதுக்கிவிட்டு, மாவட்டச் செயலாளர்போல் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எஸ்.ஐ.ஆர் பணியின்போது வி.ஏ.ஓ முகத்தில் செல்போனை வீசி எறிந்து மன்னிப்பு கேட்டீர்கள். விரைவில் இந்த மாவட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்கும் நிலையை உருவாக்கிவிடாதீர்கள். மீண்டும் இது தொடருமானால் மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். டெல்லி தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ஏற்கெனவே புகார் அனுப்பியிருக்கிறோம்” என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தளவாய் சுந்தரம்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “சில நாள்களுக்கு முன்பாக தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் குமரி மாவட்டத்திற்கு வந்தபோது, அவர் இந்த மாவட்ட ஆட்சியரைப் புகழ்ந்து பேசிய விஷயம் எல்லாப் பத்திரிகைகளிலும் வந்தது. அவர் பேசிய தோரணையும் அங்கிருந்தவர்கள் கேட்ட விதத்தையும் பார்த்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் ஸ்டாலின் தனது மாவட்டத்தினுடைய செயலாளரைப் புகழ்ந்து பேசியது போன்ற ஒரு தோற்றம் அங்கே இருந்தது. மாவட்ட ஆட்சியரே உங்களுக்கு வேண்டுகோள் வைக்கின்றோம். 15-ம் தேதி தேர்தல் அறிவிப்பு வந்தாகிவிட்டது, இப்போது மாவட்டத்தினுடைய தேர்தல் அதிகாரி நீங்கள். உங்கள் இரண்டு கண்ணிலும் வெண்ணெய் இருக்க வேண்டும். இரண்டு பார்வைகளும் ஒன்றாக இருக்க வேண்டும். அது தவிர்த்து நீங்கள் செயல்படுவீர்கள் என்று சொன்னால், இந்த மேடையை மாவட்டத்தினுடைய தேர்தல் அதிகாரியை மாற்றக் கோரிக்கை வைக்கக்கூடிய இடமாக நாங்கள் பயன்படுத்துவோம். தேர்தல் அதிகாரி என்று கடவுளுக்குச் சமமாக இருந்து நீங்கள் நீதி பரிபாலனம் செய்யவில்லை என்று சொன்னால், அந்த இடத்தில் இருப்பதற்கு நீங்கள் அருகதை அற்றவர்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்திலே மலைகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. வடிவேலு காமெடி சீனில் வருவதுபோன்று மலையை காணோம். அந்த அளவுக்குக் கேவலமான நிலையிலே அமைச்சர் மனோ தங்கராஜ் இருக்கிறார். அவரை அப்புறப்படுத்துவதற்கான தேர்தல் இந்தத் தேர்தல். கன்னியாகுமரி மாவட்டத்தினுடைய மலைகளைக் காப்பதற்கான தேர்தல் இந்தத் தேர்தல். சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் அமைச்சராக இருந்தபோது பார்வதிபுரத்திலே ஒரு ரயில் நிலையம் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினோம். அதிகாரிகள் அங்குள்ள 12 ஏக்கர் இடத்தை பார்த்தார்கள். ஆனால், அந்த 12 ஏக்கர் இடத்தை யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று சொல்லி அரசாங்கம் முடிவெடுத்தது. ரயில் நிலையம் அமைப்பதற்கான இடம் அங்கே இல்லை என்று  சொல்லிவிட்டார்கள். இன்னைக்கு அதே இடம் ஆக்கிரமிக்கப்பட்டு ரியல் எஸ்டேட்டுக்கு விடப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டு கொண்டிருக்கின்றன. அது யாருடைய அப்பன் வீட்டுச் சொத்து. ஒரு ரயில் நிலையம் வந்தால் உங்களுக்கு மகிழ்ச்சி, உங்களுடைய சந்ததிகள் அத்தனை பேருக்கும் பயன்பட வேண்டிய ஒரு இடத்தில் இன்றைக்கு பார்வதிபுரத்தில் ரியல் எஸ்டேட் போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தையும் காப்பதற்கான ஒரு போராட்டம். தேங்காய்ப்பட்டணத்தில் 28 மீனவர்கள் கொல்லப்பட்டபோது ஒரு மீன்பிடி துறைமுகத்தைச் சரி செய்வதற்கு வக்கற்ற நிலையிலே இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்

இதை நம்முடைய தேர்தலாக நாம் கருதக் கூடாது. நம்முடைய சந்ததிகளுடைய தேர்தலாகக் கருதி இதிலே நாம் பணிபுரிய வேண்டும். நான்கு வழிச்சாலை ஒன்றரை வருடத்துக்கு முன்பே வேலை முடிந்திருக்க வேண்டும். இன்னும் முடியவில்லை. ஏற்கனவே போடப்பட்ட 4000 கோடிக்கும் மேலாக மீண்டும் 1400 கோடி ரூபாய் நரேந்திர மோடியினுடைய அரசாங்கத்திலிருந்து நாம் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். இன்னும் வேகம் காட்ட முடியவில்லை ஏன்? கன்னியாகுமரி மாவட்டத்திலே சாலைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மனநிலை இங்கிருக்கக்கூடிய அரசாங்கத்திற்கு கிடையாது. நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்கள் தொல்லை என்பதுதான் அவர்கள் மனநிலை. கன்னியாகுமரி மாவட்டத்தில் மானம் உள்ளவர்கள் தி.மு.க-வுக்கு ஓட்டு போடலாமா? மாற்றங்கள் வந்தாக வேண்டும். சொரணையுள்ளவர்களாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாறியாக வேண்டும். குமரியின் ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றது என்ற சரித்திரத்தை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com