பட மூலாதாரம், XPD Division, MEA
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வியாழக்கிழமை (மார்ச் 5) டெல்லியில் உள்ள இரான் தூதரகத்தில் இரானின் மறைந்த அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிக்கு அஞ்சலி செலுத்தினார்.
இரான் தூதரகத்தில் உள்ள இரங்கல் புத்தகத்தில் இந்தியாவின் சார்பாக ஒரு செய்தியையும் அவர் எழுதினார்.
காமனெயி கடந்த சனிக்கிழமை அன்று இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். காமனெயியின் மறைவுக்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு, வியாழக்கிழமை அன்று இந்தியா முதல் முறையாக இரங்கல் தெரிவித்தது.
போரின் முதல் நாளில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசியில் பேசினாலும், இந்த உரையாடலுக்குப் பிறகு வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் இந்தியா இரங்கல் தெரிவித்ததோ அல்லது அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலை விமர்சித்ததோ குறிப்பிடப்படவில்லை.
காமனெயியின் மறைவுக்குப் பிறகு ஐந்து நாட்களாக இந்தியா மௌனம் காத்தது. இரான் விவகாரத்தில் அரசாங்கத்தின் மௌனம் குறித்து இந்தியாவின் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
பட மூலாதாரம், Reuters
முன்பு இந்தியா செய்தது என்ன?
கடந்த 2024-ஆம் ஆண்டில், அப்போதைய இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தபோது, இந்தியா ஒரு நாள் தேசிய துக்கம் அறிவித்தது.
அப்போது ரைசியின் மறைவுக்குப் பிறகு பேசிய இந்திய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக, மே 21, 2024 அன்று இந்தியா முழுவதும் ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது” என்றார்.
அதே நேரத்தில், 2020-ஆம் ஆண்டில் அமெரிக்கா இரானின் மூத்த ஜெனரல் காசிம் சுலைமானியை வான்வழித் தாக்குதலில் கொன்றபோது, இந்தியா இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பதற்றமான சூழலை ‘கவலைக்குரியது’ என்று குறிப்பிட்டது.
அப்போது இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இரானின் மூத்த தலைவர் ஒருவர் அமெரிக்காவால் கொல்லப்பட்டுள்ளதை நாங்கள் கவனித்துள்ளோம்” என்று தெரிவித்தது.
அந்த அறிக்கையில், “அதிகரித்து வரும் பதற்றங்கள் உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவை இந்தியாவிற்கு மிக முக்கியமானவை. நிலைமை மேலும் மோசமடையாமல் இருப்பது அவசியமாகும்,” என்று கூறப்பட்டது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல் நடத்தின.
உடனேயே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசி, அதிகரிக்கும் பதற்றம் குறித்த ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.
அதுமட்டுமின்றி, தொடக்கத்தில் தயக்கம் காட்டிய பிறகு, அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை விமர்சிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பிரிக்ஸ் அமைப்புகளின் அறிக்கைகளிலும் இந்தியா கையெழுத்திட்டது.
2025 ஜூன் மாதத்தில் நடந்த 12 நாள் மோதலின் போது, இரான் இந்தியாவிற்குச் சிறப்புச் சலுகை அளித்து, இந்திய மாணவர்களைத் திரும்ப அழைத்து வரும் இந்திய விமானங்களுக்காகத் தனது வான்வெளியைத் திறந்துவிட்டது.
பட மூலாதாரம், XPD Division, MEA
இந்தியா மௌனம் காப்பதன் பின்னணி
ஆயதுல்லா அலி காமனெயியின் மறைவுக்குப் பிறகு இந்தியா எந்த தேசிய துக்கத்தையும் அறிவிக்கவில்லை அல்லது வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை வெளிப்படையாக விமர்சிக்கவும் இல்லை.
காமனெயி படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை அல்லது தற்போதைய மோதலின் போது இரானியப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களை ஏன் விமர்சிக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
ஆய்வாளர்கள் இதனை உலகளாவிய அரசியல் மற்றும் மாறிவரும் சூழலுடன் இணைக்கிறார்கள்.
முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல் ஒரு கட்டுரையில் இந்தியாவின் மௌனத்திற்கான காரணங்களைச் சுட்டிக்காட்டி, “தாக்குதல்களை இந்தியா விமர்சிக்கவில்லை, இது புரிந்துகொள்ளக்கூடியது, ஏனென்றால் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ராணுவத் தலையீட்டை நாம் விமர்சிக்கவில்லை.” என்று எழுதினார்.
“இந்த விவகாரம் ஐநா பொதுச் சபையில் இந்தியாவின் ராஜீய உத்திகளை மேலும் சோதிக்கும். மேலும் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் போன்ற முக்கிய உறவுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ள சூழ்நிலைகளில், இந்தியா அமைதியாக இருப்பதைத் தேர்வு செய்கிறது,” என்று சிபல் குறிப்பிட்டார்.
‘தி ஹிந்து’ நாளிதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், முன்னாள் தூதர் ராகேஷ் சூட் இந்தியாவின் மௌனத்திற்கு மூன்று முக்கிய காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் மௌனத்தை தற்போதைய சிக்கலான புவிசார் அரசியல் சூழலில் புரிந்துகொள்ள வேண்டும் என்று ராகேஷ் சூட் கூறுகிறார்.
”இன்றைய சர்வதேச அரசியல் முன்னெப்போதையும் விட மிகவும் சிக்கலானதாகிவிட்டது மற்றும் இந்தியா பல போட்டி நலன்களுக்கு இடையே சமநிலையைப் பேண வேண்டியுள்ளது. இரண்டாவதாக, சாபஹார் துறைமுகம் போன்ற திட்டங்கள் இருந்தபோதிலும், கடந்த சில தசாப்தங்களாக இரானுடனான இந்தியாவின் உறவுகள் வரையறுக்கப்பட்டவையாக மாறிவிட்டன. மூன்றாவதாக, காமனெயி சமீபத்திய ஆண்டுகளில் காஷ்மீர் விவகாரம் மற்றும் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் குறித்து பகிரங்கமாக கருத்துகளைத் தெரிவித்துள்ளார், இது இந்தியாவால் சாதகமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.”
சூட்டின் கூற்றுப்படி, இந்த காரணிகள் அனைத்தும் இணைந்து இரான் விவகாரத்திற்கு பகிரங்கமாக கருத்து தெரிவிப்பதை இந்தியாவிற்கு மிகவும் கடினமாக்கியுள்ளது.
இதற்கிடையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் சர்வதேச விவகார நிபுணர் ஹேப்பிமோன் ஜேக்கப் இந்தியாவின் ராஜீய உத்தியை ‘சமநிலையுடன் செய்திகளை தெரிவிக்கும் கலை’ என்று விவரித்துள்ளார்.
அவரைப் பொறுத்தவரை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இஸ்ரேல் மற்றும் இரானில் உள்ள தனது சகாக்களுடன் தனித்தனியாக நடத்திய பேச்சுவார்த்தையில் பதற்றத்தைத் தணிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜேக்கப்பின் கூற்றுப்படி, இந்தியாவின் இந்த நிலைப்பாடு சமநிலைக்கான ஒரு நடைமுறை முயற்சியாகும்.
ஏனெனில் அதன் எரிசக்தி தேவைகள், அதிகப்படியான இந்திய புலம்பெயர்ந்த மக்கள் தொகை, வர்த்தகம் மற்றும் இணைப்பு தொடர்பான முக்கிய நலன்கள் இப்பகுதியில் உள்ளன என்கிறார் அவர்.
பட மூலாதாரம், NurPhoto via Getty Images
‘இந்தியாவின் மௌனம் ஒரு திட்டமிட்ட உத்தி’
‘தி வீக்’ இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மத்திய கிழக்கு நிபுணர், பி.ஆர். குமாரசாமி ‘இந்தியாவின் மௌனம் ஒரு திட்டமிடப்பட்ட உத்தி’ என்று எழுதியுள்ளார்.
பிரதமரின் இந்த மௌனம் உண்மையில் நன்கு சிந்திக்கப்பட்ட ராஜீய உத்தி, இது அரபு நாடுகளில் இந்தியாவின் முக்கிய நலன்களுடன் தொடர்புடையது என்று பி.ஆர். குமாரசாமி வாதிடுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, இரானின் பதிலடித் தாக்குதல்களில் நேரடியாக குறி வைக்கப்பட்டுள்ள வளைகுடா நாடுகள் இந்தியாவின் எரிசக்தி, வர்த்தகம் மற்றும் ராஜீய கூட்டாண்மைக்கு மிக முக்கியமானவை.
அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் அனுப்பும் பணம் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானவை என்கிறார் அவர்.
1990-ஆம் ஆண்டின் குவைத் நெருக்கடியை உதாரணமாகக் காட்டிய குமாரசாமி, அந்த நேரத்தில் பிராந்திய அரசியலில் எடுக்கப்பட்ட சில சார்பு நிலைப்பாடுகள் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, இந்தியா காமனெயிக்கு வெளிப்படையாக இரங்கல் தெரிவித்தால், அது முக்கிய அரபு கூட்டாளிகளைக் கோபப்படுத்தக்கூடும்.
காஷ்மீர் மற்றும் இந்திய முஸ்லிம்கள் விவகாரத்தில் காமனெயி இதற்கு முன்பு இந்தியாவை பகிரங்கமாக விமர்சித்துள்ளார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த விஷயத்தில் இந்தியாவின் வெளியுறவு கொள்கை, ஒரு அடையாள துக்கத்தை விட வளைகுடா பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது என்று குமாரசாமி வாதிடுகிறார்.
இருப்பினும், வியாழக்கிழமை அன்று இந்திய வெளியுறவுச் செயலாளர் இரான் தூதரகத்தின் இரங்கல் புத்தகத்தில் ஒரு செய்தியை எழுதியதை ஆய்வாளர்கள் ‘தாமதமான ஆனால் சரியான நடவடிக்கையாக’ பார்க்கிறார்கள்.
பட மூலாதாரம், US Navy via Getty Images
எதிர்க்கட்சி எழுப்பும் கேள்விகள்
எதிர்க்கட்சிகள் இதனை நிர்ப்பந்தத்தின் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக வர்ணித்துள்ளன.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்வினையாற்றியுள்ளது.
விக்ரம் மிஸ்ரி இரான் தூதரகத்தில் இரங்கல் செய்தி எழுதியதற்கு கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி, “அரசியல் அழுத்தம் அல்லது பொது விமர்சனங்களுக்குப் பிறகு தெரிவிக்கப்படும் இரங்கல்கள் உண்மையானவை அல்ல, அவை வெறும் பிம்பத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் மட்டுமே,” என்று கூறியது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா எக்ஸ் தளத்தில் இட்ட பதிவில், “பிப்ரவரி 28 முதல் புதன்கிழமை மதியம் வரை, அரசாங்கம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டிக்கவில்லை அல்லது இரான் மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை,” என்று கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு