டிரெண்ட்ப்ரிட்ஜ் டெஸ்டில் அவரது வெறியாட்டம், முதல் போட்டியில் தனது ஆட்டத்தை விமர்சித்த அத்தனை உதடுகளுக்கும் தாழ்ப்பாள் இடுவதாக அமைந்தது. 299 ரன்களைத் துரத்த வேண்டும், 93/4 என இக்கட்டான நிலைதான் என்றாலும், அவரது 136 ரன்கள், 147.8 ஸ்ட்ரைக்ரேட்டில் வந்து எல்லாவற்றையும் சுலபமாக்கின. நான்காவது இன்னிங்ஸ், ஐந்தாவது நாளின் இறுதி நொடிகள் கொண்டு வரும் அளவுக்கதிகமான பதற்றம் எதுவுமே அவரது நிழலைக் கூடத் தீண்டவில்லை. பென் ஸ்டோக்ஸுடன் நீடித்த அந்த 20 ஓவர்கள் பார்ட்னர்ஷிப்தான், இங்கிலாந்து கடந்த சில மாதங்களாக இழந்திருந்த அத்தனை நம்பிக்கை வேர்களையும் திரும்பவும் ஊன்றச் செய்தவை. 77 பந்துகளில் வந்து சேர்ந்த அந்தச் சதம், இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதம் என்பதோடு, போட்டியை, ஏன் தொடரையே அவர்களுக்கு வென்று தந்தது.
மைக்கேல் ப்ரேஸ்வெல்லின் பந்துகளைக் குறிவைத்ததாகட்டும், ஹென்ரியின் பந்துகளைக் கவனித்த விதமாகட்டும், நியூசிலாந்துக்கு நூழிலை வாய்ப்பைக்கூட அவர் தரவேயில்லை. தோற்று விடுவோமோ என்ற தடுமாற்றத்தை எந்த நொடியிலும் பார்க்க முடியவில்லை. வெல்ல வேண்டுமென்ற வேட்கையே இருந்தது. அதுதான் டெஸ்டில் இங்கிலாந்தின் புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதை எடுத்துரைத்தது. ‘மெக்கல்லமின் தாக்கம், ஸ்டோக்ஸ் தந்த மாற்றம்’ என பல பக்கத் தலைப்புகள் அடைப்புக்குறிக்குள் அலங்கரித்தாலும், தலைமையான தலைப்பு, ‘பேர்ஸ்டோவின் எழுச்சி’ என்பதுதான்.
அப்படியொரு வெற்றியைக் கொண்டாடித் தீர்க்கவே, இன்னமும் பல மாதங்கள் இங்கிலாந்துக்குத் தேவைப்படும் நிலையில்தான், இறுதி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கவுன்ட்டர் அட்டாக் என்பதற்கான செயல்முறை விளக்கத்தை ஹெட்டிங்லேயில் வைத்து பேர்ஸ்டோ நடத்தியிருக்கிறார். இத்தொடரில் மிட்செல்லின் மூன்றாவது சதம் இப்போட்டியில் வந்து சேர்ந்தது, போல்டின் அதிவேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்தின் டாப் ஆர்டர் சரிந்தது, டெஸ்டில் பென் ஸ்டோக்ஸின் 100-வது சிக்ஸர் வந்தது போன்றவை முக்கிய ஹைலைட்ஸ்தான் என்றாலும், அவை பேர்ஸ்டோ ஏற்படுத்திய தாக்கத்திற்கு முன் நீர்த்துப் போய்விட்டன.